விஜயகாந்தால் ஏமாற்றம்... தே.மு.தி.க தொண்டர்கள் வருத்தம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 21 Aug, 2018 05:38 am
dmdk-party-members-upset-with-vijayakanth

அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பிய பிறகு விஜயகாந்த் உடல் நலத்தோடு உற்சாகமாக மீண்டும் அரசியலில் களமிறங்குவார் என எதிர்பார்த்த தே.மு.தி.க தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  

தே.மு.தி.க கட்சியை ஆரம்பித்து குறுகிய காலத்தில் எதிர்கட்சியாகி மாபெரும் உச்சத்தைத் தொட்டது தே.மு.திக. இதற்கு காரணம் விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதரின் பேச்சாற்றலும் செயலும் இளைஞர்களை தன் பக்கம் இழுத்தது. எவருக்கும் அஞ்சாமல் தைரியமாக விமர்சிக்கும் விஜயகாந்தின் வலிமையால் பலரும் ஈர்க்கப்பட்டனர். அ.தி.மு.க- தி.மு.கவுக்கு மாற்றாக கருதப்பட்ட தே.மு.தி.க தனது போக்கை மாற்றிக்கொள்ளத் தொடங்கியது. தெய்வத்துடனும் மக்களுடனும்தான் கூட்டணி என என்ற கொள்கையை தளர்த்தி விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து தி.மு.கவை பின்னுக்குத் தள்ளி எதிர்கட்சித் தலைவரானார். 

அடுத்து அ.தி.மு.கவுடன் மோதல் போக்கை கடைபிடித்த விஜயகாந்த் சட்டசபையில் ஜெயலலிதாவை போல்டாக எதிர்த்துப் பேசினார். அப்போது இரு கட்சியினரும் மாறி மாறி சவால் விட்டுக்கொண்டனர். அடுத்து வந்த தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி சேர முயற்சித்தார் விஜயகாந்த். அடுத்தடுத்த தேர்தல்களில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி விட்டது தே.மு.தி.க.,வின் நிலை. அடுத்து மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து தே.மு.தி.க தனது நிலையை மேலும் கேள்விக்குறியாக்கிக் கொண்டது. 

அரசியலில் நாயகனாக போற்றப்பட்ட விஜயகாந்த் பொது இடங்களில் அவரது நடவடிக்கைகளால் விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாக்கப்பட்டார். ஏட்டிக்குப்போட்டியாக பேசி தன்னை காமெடியானாகவே உருவகப்படுத்திக் கொண்டார் விஜயகாந்த். நெட்டிசன்கள் மீமஸ் போட்டும், அவரது மேடைப்பேச்சை கலாய்த்தும் பார்க்கத் தொடங்கினர். குடித்து விட்டு பேசுவதாக எதிர்க்கட்சிகள் விஜயகாந்த் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தன. இதையெல்லாம் மறுத்த அவரது குடும்பத்தினர் உடல் நலக் குறைவால் இப்படி நடந்து கொள்வதாக தெரிவித்தனர். அவரது குரலும், உடல்நிலையும் தள்ளாட்டம் காண ஆரம்பித்தது.

சில ஆண்டுகளாக சிங்கப்பூர் சென்று சிகிச்சை மேற்கொண்டு வந்தார் விஜயகாந்த். இந்நிலையில் கடந்த ஜூன் 7ம் தேதி அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொள்ள சென்றார் விஜயகாந்த். கருணாநிதி, ஜெயலலிதாவின் வெற்றிடத்தை நிரப்ப ரஜினி, கமல், உள்ளிட்ட பலரும் கட்சியை தொடங்க உள்ளனர். இந்த நேரத்தில் விஜயகாந்த் ஆரோக்கியத்துடன் திரும்பி வந்து மீண்டும் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என அவரது தொண்டர்களும் ஆதரவாளர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் பழைய ஃபார்மில் உற்சாகமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார் விஜயகந்ந்த். தனது குடும்பத்தினருடன் தெளிவான முக மாற்றத்துடன் இருக்கும் புகைப்படங்களை பார்த்து விஜயகந்த் ரசிகர்களும், அவரது கட்சித் தொண்டர்களும் மெய் சிலிர்த்தனர். 


   
கருணாநிதி மறைவையொட்டி அவர் வெளியிட்ட அஞ்சலி வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்நிலையில், விஜயகாந்த் சிகிச்சை முடிந்து உடல் ஆரோக்கியத்துடன் திரும்புகிறார் என காத்திருந்த அவரது கட்சித் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். 
நேற்று அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் தனது குடும்பத்தாருடன் சென்னை விமான நிலையத்திலிருந்து கருணாநிதி சமாதிக்கு சென்றார். அவருக்கு அஞ்சலி செலுத்த சென்ற விஜயகாந்த்தை அவரது மனைவியும், மைத்துனர் எல்.கே.சுதீஷும் கைத்தாங்களாகவே அழைத்துச் சென்றனர்.

முகத்தில் முன்னெப்போதையும் விட  தெளிவின்மை. நடையில் பெரும் தளர்வுடன் காணப்பட்டார் விஜயகாந்த். இந்த நிகழ்வு வீடியோக்களாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதனைப்பார்த்த பொதுமக்களும், அவரது கட்சித் தொண்டர்களும் விஜயகாந்தின் நிலையை பார்த்து பரிதாபப்பட்டு வருகின்றனர். 

உடல் ஆரோக்கியத்துடன் திரும்பி வந்து விஜயகாந்த் வீறுகொண்டு கட்சியை வழி நடத்துவார் என காத்திருந்த அவரது தொண்டர்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close