மு.க.அழகிரி தயவால் தி.மு.க-வில் களையெடுப்புகள் நிகழ வாய்ப்பில்லை என்பதால் நிர்வாகிகள் நிம்மதியடைந்து உள்ளனர்.
மு.க.ஸ்டாலின் தி.மு.க தலைவராகவும், துரைமுருகன் பொருளாளராகவும் பதவியேற்றுக் கொண்டார். அப்போதே துணைப் பொதுச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர் பொறுப்புகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து பொறுப்பேற்க வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தலைவர், பொருளாளர் பதவியேற்பு விழா நடக்கும் போது இந்தப் பதவியேற்பையும் நடத்தினால் விறுவிறுப்பாக இருக்காது. அதனால், இன்னும் ஓரிரு மாதங்களில் அந்தப் பொறுப்புக்களுக்கான நிர்வாகிகளை நியமித்துக் கொள்ளலாம் என திட்டமிட்டு இருக்கிறது தி.மு.க தலைமை.
அதே நேரத்தில், கட்சியில் களையெடுக்கும் வேலைகள் எதுவும் இப்போதைக்கு நடக்கப்போவதில்லை என்பதும் உறுதியாகி இருக்கிறது. தலைவராகப் பொறுப்பேற்றதும் கட்சிக்குள் அதிரடி எதுவும் வேண்டாம் என்பது ஸ்டாலினின் எண்ணம் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால், உண்மையான காரணம் அதுவல்ல என்கிறார்கள் மற்றொரு தரப்பினர். இப்போதைக்கு கட்சி நிர்வாகத்தில் மாற்றம் செய்தால் அது ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட்டு வரும் மு.க. அழகிரிக்கு சாதகமாக அமைந்து விடும், பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கோபத்தில் மு.க.அழகிரி பக்கம் சென்றுவிட வாய்ப்புள்ளது. ஆகையால், தற்போதைக்கு களையெடுப்பு நடத்த வேண்டாம் என ஸ்டாலின் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
ஆக, மு.க.அழகிரியால் தி.மு.க நிர்வாகிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.