சிக்கிய திருநாவுக்கரர்... கை கொடுத்து கரையேற்றிய மு.க.ஸ்டாலின்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 31 Aug, 2018 06:34 am
m-k-stalin-saves-the-thirunavukarasar-from-congress-faction

தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் மீண்டும் உச்சமடைந்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு எதிராக ப.சிதம்பரம் கோஷ்டியும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் காய் நகர்த்தத் தொடங்கி உள்ளனர். 

தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள திருநாவுக்கரசருக்கு எதிராக ப.சிதம்பரம் ஒரு கோஷ்டியாகவும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், குஷ்பு ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்தகுமார் எனப் பல கோஷ்டிகள் செயல்பட்டு வருகின்றன. திருநாவுக்கரசர் தமிழகக் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்றது முதலே அவரை மாற்றக்கோரி டெல்லி தலைமைக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தரப்பில் குஷ்புவை தலைவராக்கவும், ப.சிதம்பரம் தரப்பில் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு பதவி கேட்டும் காய் நகர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில், பாஜகவை சேர்ந்த துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவை தனது ஆதரவாளர்களுடன் சென்று திருநாவுக்கரசர் சந்தித்தார். இந்தச் சம்பவம் அப்போது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இதனைத் தொடர்ந்து திருநாவுக்கரசரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி ப.சிதம்பரம் தரப்பினர் டெல்லியை முற்றுகையிட்டனர். அப்போது ப.சிதம்பரத்தை தமிழக காங்கிரஸ் தலைவராக பதவியேற்குமாறு காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது. ஆனால், ப.சிதம்பரம், ’’எனது மகன் கார்த்திக் சிதம்பரத்தை தலைவராக்கினால், கட்சிக்கு இளரத்தம் பாய்ச்சப்படும்’ எனக் கோரியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதனை கட்சித் தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை. 

பிறகு திருநாவுக்கரசருக்கு எதிராக ஓரிரு மாதங்களாகப் பிரச்னைகள் கிளம்பவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், பேட்டியளித்த இளங்கோவன், ‘இப்போதும் கூடக் காலம் தாமதமாகிவிடவில்லை. அவர் மீண்டும் பாஜகவுக்குச் சென்றால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என வெளிப்படையாக விமர்சித்தார். உட்கட்சி தலைவருக்கு எதிராக இளங்கோவன் இப்படி விமர்சிப்பது புதிதல்ல. ஆனாலும், இதற்குப் பின்னால், தமிழக காங்கிரஸின் புதிய பொறுப்பாளராக வந்துள்ள சஞ்சய் தத் காரணம் என்கிறார்கள்.

 
ஏற்கெனவே தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக இருந்த அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சின்னா ரெட்டி என்பவர் சமீபத்தில் மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக மஹாராஷ்டிராவை சேர்ந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சஞ்சய் தத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தரப்பிற்கும், ப.சிதம்பரம் கோஷ்டியினருக்கும் மிகவும் நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது. 
இதனால், திருநாவுக்கரசருக்கு எதிராக உள்ள கோஷ்டியினர் ஒன்று சேர்ந்து அவருக்கு எதிராகப் பல புகார்களை சஞ்சய் தத்திடம் தெரிவித்துள்ளனர். விரைவில் திருநாவுக்கரசரை பதவியில் இருந்து நீக்கியே ஆக வேண்டும் முழு முயற்சியில் இறங்கியுள்ளனர். அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் இன்னும் கடுமையாக விமர்சிக்க ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

 

ஆனால், தற்போது தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற ராகுல் காந்தி விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. திருநாவுக்கரசர் அ.தி.மு.க., பா.ஜ.க மீது பற்றுக்கொண்டவராக இருப்பதால்தான் ஸ்டாலின் காங்கிரஸுடன் கூட்டணி சேர தயக்கம் காட்டி வந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தலைவராகப் பதவியேற்றுப் பேசிய ஸ்டாலின் பாஜகவை தாக்கிப்பேசியதால் காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், திருநாவுக்கரசருக்கு இப்போதைக்குப் பிரச்னை இல்லை’ என்கிறார்கள் கதர் சட்டை கட்சியின் சீனியர்கள். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close