குனியக் குனியக் கொட்டும் மு.க.ஸ்டாலின்... கதறித் துடிக்கும் மு.க.அழகிரி..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 31 Aug, 2018 11:57 am
m-k-stalin-s-punching-m-k-azhagiri-shock

தி.மு.க தலைமை மீது விரக்தியில் இருப்பவர்களிடம் மு.க.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தி வருகையில் அவர்களை வலியச் சென்று மீண்டும் கட்சியில் இணைத்து வருகிறார் மு.க.ஸ்டாலின்.  

''கலைஞர் கட்டிக் காப்பாற்றிய கட்சியை நான் உடைக்க மாட்டேன். ஆனால் தி.மு.கவில் எனக்கும் உரிமை உண்டு, அதை நிலைநாட்டாமல் விட மாட்டேன்’' எனச் சொல்லி வரும் அழகிரி சில ஆண்டுகளாக தி.மு.க கரை வேட்டி கட்டுவதில்லை. செப்டம்பர் 5ம் தேதி சென்னை பேரணியில் அழகிரி தி.மு.க கரை வேட்டி கட்ட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். அழகிரியும் கரை வேட்டி கட்டுவோம் என்று சொல்லியிருக்கிறார். 

இந்நிலையில், தி.மு.கவிலிருந்து அதிருப்தியில் விலகி நிற்பவர்களையும், மாற்றுக் கட்சிக்குப் போனவர்களையும் இழுக்க முயற்சிக்கும் அழகிரிக்கு பின்னடைவே ஏற்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனையும் விழுப்புரத்தில் பொன்முடிக்கு எதிரானவர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் அழகிரி. 

முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ.வான புஷ்பராஜ் தலைமைக்கு நம்பிக்கையானவர். பொன்முடிக்கும் புஷ்பராஜுக்கும் எப்போதும் ஒத்துவராது. புஷ்பராஜை, பொன்முடி தொடர்ந்து ஓரங்கட்டி வந்தார்.  இதெல்லாம் தெரிந்து புஷ்பராஜுடன் அழகிரி பேசியிருக்கிறார். அப்போது, ‘நீ இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் இப்படியேதான் இருக்கணும். பொன்முடி உன்னை வளரவிடவே மாட்டார்..’ என்று சொல்ல... அதற்கு புஷ்பராஜ், ‘நீங்க சொல்றது உண்மைதான். எனக்கும் பொன்முடிக்கும் தான் பிரச்னை. எனக்கும் ஸ்டாலினுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. இனி இது சம்பந்தமாகப் பேச வேண்டாம்...’ எனக் கூறி விட்டு போனைத் துண்டித்துவிட்டாராம்.

அதேபோல் முன்னாள் தர்மபுரி மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முல்லைவேந்தனுக்கும் அழகிரியிடமிருந்து போன் போயிருக்கிறது. ‘தலைவர் கலைஞர் வளர்த்த கட்சி தி.மு.க. எனக்கு அங்கே பல வருத்தங்கள் இருந்துச்சு. அதனால் தான் தே.மு.தி.கவுக்குப் போனேன். அங்கே போன பிறகுதான் அது கட்சியே இல்லை என்பது தெரிஞ்சுது. ஏதோ ரசிகர் மன்றம் மாதிரிதான் தே.மு.தி.க நடக்குது. அதனாலதான் இது எதுவும் வேண்டாம்னு விலகி நிற்கிறேன். இனி எந்தக் கட்சிக்கும் போகும் திட்டம் எனக்கு இல்லை. கடைசி வரை தி.மு.க தொண்டனாக மட்டுமே இருந்துவிட்டுப் போயிடணும் என்பது தான் என் விருப்பம். உங்க குடும்ப பிரச்னை எல்லாம் காலப்போக்கில் சரியாகிடும்...’ என்று சொல்லி அவரும் இணைப்பைத் துண்டித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை, முல்லைவேந்தன் செல்போனுக்கு துரைமுருகனிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. ’’தலைவர் ஸ்டாலின் உங்ககிட்ட பேசச் சொன்னார். உன்னைப் பார்க்க மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்ரமணி வருவார்...’ எனக் கூறியிருக்கிறார் துரைமுருகன்.

அடுத்த சில மணி நேரத்தில், முல்லைவேந்தன் தோட்டத்துக்கு தர்மபுரி மாவட்டச் செயலாளர் சுப்ரமணியன் சென்றிருக்கிறார். முல்லைவேந்தனுக்கு சால்வை போட்ட கையோடு, எ.வ.வேலுக்கு போனைப்போட்டு கையில் கொடுத்திருக்கிறார். ‘நீங்க உடனே கிளம்பி சென்னைக்கு வாங்க. நாம தலைவரை சந்திக்கப் போகலாம்!’ என அழைத்திருக்கிறார் எ.வ.வேலு. அதன்படி இன்று மீண்டும் தி.மு.கவில் இணைகிறார் முல்லை வேந்தன்.

 

இப்படி அழகிரி யாரையெல்லாம் தொடர்பு கொண்டு பேசினாரோ அவர்களுக்கெல்லாம் ஸ்டாலின் தரப்பிலிருந்து உடனடியாக போனும் போகிறது. ஆளும் போகிறார்கள். இது அழகிரியை வெகுவாக அப்செட் ஆக்கி விட்டதாம். அதன்பிறகே ‘நான் தி.மு.கவை எதிர்க்கவில்லை. என்னை தி.மு.கவில் இணைத்துக்கொண்டால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயார்” என்ற அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார் அழகிரி. ஆனாலும், ஸ்டாலின் எந்த சூழலிலும் சேர்த்துக் கொள்ளத் தயாராக இல்லை” என தி.மு.க சீனியர்கள் கூறுகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close