டி.டி.வி.தினகரன் அணிக்கு தாவும் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ!?

  பா.பாரதி   | Last Modified : 25 Sep, 2018 05:03 am
ops-support-mla-jumping-to-team-dinakaran

‘பொறுத்தது போதும்... பொங்கி எழு ‘ என ஓபிஎஸ் ஆதரவாளர்கள்  அதிமுகவில் போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே எடப்பாடி  ஆட்களால் கோவையில்  ஓரம் கட்டப்பட்ட  ஓபிஎஸ்  ஆதரவாளரும் முன்னாள்  அமைச்சருமான எஸ்.தாமோதரன் ,கடந்த வாரம்  டி.டி.வி.தினகரன் அணியில் ஐக்கியமாகி  விட்டார். 

அதன் நீட்சியே ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்சுக்கு எதிரான எம்.எல்.ஏ.சண்முகநாதனின் கலகக்குரல் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
 முதலில் சண்முகநாதனை பற்றி சின்ன குறிப்பு. ஜெயலலிதாவின் ஆரம்ப நாட்களில் தூத்துக்குடி அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர்- அனிதா ராதாகிருஷ்ணன்.

 கருணாநிதியின் முரட்டு பக்தர் என்.பெரியசாமியை எதிர்க்கும் சகல வல்லமையும் கொண்டிருந்தார். ஜெ.வுடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக அவரிடம் இருந்து  விலகி திமுகவில் ஐக்கியமானார். அப்போதே தூத்துக்குடி அதிமுக களை இழந்து போனது. அவரது இடத்துக்கு சண்முகநாதனை கொண்டு வந்தார் ஜெயலலிதா.அமைச்சர், மாவட்ட செயலாளர் என உயர் பதவிகளை கொடுத்து அவருக்கு அழகு பார்த்தார் ஜெ. சசிகலா ஆளுகைக்குள் அதிமுக வந்த பின் சண்முகநாதனுக்கு இறங்கு முகம்.

ஏற்கனவே இரு முறை திருவைகுண்டம் எம்.எல்.ஏ.வாக இருந்த அவர் கடந்த தேர்தலில் ‘சீட்’வாங்குவதற்கு பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. சசிகலா ஆதரவால் நாயுடு சமூகத்தை சேர்ந்த கோவில்பட்டி  கடம்பூர் ராஜு அமைச்சர்  ஆக்கப்பட்டார். நாடார் கோட்டாவில் தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் எதிர்பார்த்தவருக்கு  மஃபா பாண்டியராஜன் வடிவில் தடை கல். தேமுதிகவில் இருந்து வந்த அவருக்கு (மட்டும்) ஆவடியில் ‘சீட்’ கொடுத்த ஜெயலலிதா அமைச்சரவையிலும் சேர்த்து கொண்டார். ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது அவரது பக்கம் நின்றார். இரு அணிகளும் இணைந்த நிலையில் தனக்கு அமைச்சர் பதவியை ஓபிஎஸ் வாங்கி தருவார் என்று எதிர்பார்த்தார். எடப்பாடி இசையவில்லை.

கடைசி முயற்சியாக  மாவட்ட செயலாளர் பதவியாவது  வேண்டும் என்று முட்டி மோதி பார்த்தவருக்கு தோல்வியே மிஞ்சியது.
அதிமுகவில் ஒபிஎஸ் இணைந்த பின் அவரது  ஆதரவாளர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உண்டு. அவர்களில் ஒருவர் சண்முகநாதன். தூத்துக்குடி மாவட்ட அமைச்சரான கோவில்பட்டி கடம்பூர் ராஜு, மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகிய இருவரும் சண்முகநாதனை ஓரங்கட்ட நடந்த நிகழ்ச்சியின் உச்சம் அண்மையில் நடந்த கூட்டுறவு சங்க தேர்தல். அங்குள்ள மேலுர் கூட்டுறவு சங்க  தேர்தலில் சண்முகநாதனின் ஆதரவாளர் ஏசத்துரை போட்டியிட்டார். அவரை தோற்கடிக்க கடம்பூர் ராஜூவும், செல்லப்பாண்டியனும் பகீரத பிரயத்தனங்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இது குறித்து அவர் ஓபிஎஸ்சிடம் முறையிட, அவர் இதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமாக ஓபிஎஸ்சையும், ஈபிஎஸ்சையும் சண்முகநாதன்  வறுத்து எடுத்து விட்டார். ‘’எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கட்சியை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அழிவுப்பாதைக்கு கட்சியை கொண்டு சென்று விட்டனர்” என்று பகிரங்கமாகவே சண்முகநாதன் குற்றம் சாட்டியிருப்பது, அவர் டிடிவி தினகரன் அணிக்கு தாவும் முயற்சியின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ் அணியில் அண்மையில் இணைந்த  முன்னாள் அமைச்சர் எஸ்.தாமோதரன், சண்முகநாதனுடன் தொடர்பில் இருப்பதாக  கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close