வழக்குகளால் வளைக்கும் காவல்துறை... எச்.ராஜா மீது குண்டாஸ்..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 25 Sep, 2018 06:12 pm
boundaries-of-police-hands-on-the-h-raja-goondas-act

பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா மீது இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில வழக்குகள் தொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

கடந்த சில நாட்களாகத் தமிழக அரசியல் வட்டாரங்களில் மட்டுமில்லாமல் பொது மக்கள் மத்தியிலும் இரண்டு பெயர்கள் சரளமாக உச்சரிக்கப்பட்டது. அதில் ஒருவர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, மற்றொருவர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ-வுமான கருணாஸ். புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் எச்.ராஜா போலீஸாரையும், நீதிமன்றத்தையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார். இதற்காக அவர் மீது எட்டு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டது. ராஜாவை காவல்துறை இன்னமும் கைது செய்யவில்லை. ஆனால் இதே ரீதியில் பேசிய கருணாஸ் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 

இருவருமே பொதுவெளியில் வரம்பை மீறிப் பேசியிருந்தாலும் கருணாஸை மட்டும் தமிழக காவல் துறை உளவு பார்த்து கைது செய்திருக்கிறது. இந்த கைது பாரபட்சமானது என்று கூறியுள்ள அரசியல் தலைவர்கள்,“கருணாஸூக்கு ஒரு நீதி, எச்.ராஜாவுக்கு ஒரு நீதியா?”என்கிற கேள்வியையும் முன்வைத்துள்ளனர். காவல் துறையையும், நீதிமன்றத்தையும் அவதூறாகப் பேசியதற்காக ஹெச்.ராஜா மீது கடந்த 18ம் தேதி திருமயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து, அவர் மீது இந்து சமய அறநிலையைத் துறையினர், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் என பலதரப்பினரும் புகார் அளித்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழக காவல்துறை தலைமையிட்ட உத்தரவின் பேரில் தற்போது ராஜா மீது ஆங்காங்கே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி குறித்து ஹெச்.ராஜா கடந்த ஏப்ரல் மாதம் தனது டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தார். இதற்காக எச்.ராஜா மீது பலரும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்கள். ஆனால், இந்த புகார்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழக காவல் துறை புதுப்பிக்க ஆரம்பித்துள்ளது. 

சிதம்பரம் பகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகர் கிள்ளை ரவீந்திரன், கிள்ளை காவல் நிலையத்தில் ஹெச். ராஜா மீது கொடுத்த புகாரை மீண்டும் பெற்று உடனடியாகவே வழக்கை பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கை நகலையும் கொடுத்திருக்கின்றனர். கிள்ளை ரவீந்திரன் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டம், கனியூர் தி.மு.க முன்னாள் பேரூராட்சித் தலைவர் வேலுச்சாமி என்பவர், கடந்த ஏப்ரல் மாதம் கருமத்தம்பட்டி போலீஸில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் மீதும் இப்போது எச்.ராஜா மீது 500, 501 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

புகார் அளித்து 4 மாதங்களுக்குப் பிறகு வழக்குகள் எச்.ராஜா மீது குவிந்து வரும் நிலையில் கடலூர் அ.தி.மு.க எம்.பி. அருண்மொழித்தேவன், எச்.ராஜா மீது புகார் கொடுத்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்து கோயில்கள் மீட்பு இயக்கம் சார்பில் கடந்த 2ஆம் தேதி உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, “திட்டக்குடி சிட்டிங் எம்.பி அருண்மொழிதேவன். ஒரு எம்.பி.யாக இருக்கின்ற ஆள், அதுவும் சிட்டிங் எம்.பி, கோயில் நிலத்தை 200 ஏக்கர் அபகரித்து இருக்கிறார். அதில் பிரதானமானது குளம். கடந்த வாரம் அந்தக் குளத்தை நமது இயக்கம் மீட்டெடுத்திருக்கிறது. எங்கிட்ட எல்லா டாக்குமென்ட்டுகளும் இருக்கு. கழகம் என்றாலே கலகம்தான். எரிகின்ற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி” என்று பேசியிருந்தார். அறநிலையத் துறை அதிகாரிகளையும் விமர்சித்திருந்தார். 

இதையடுத்து தன் மீது வீண் அவதூறு கிளப்புவதாக அ.தி.மு.க எம்.பி. அருண்மொழி தேவன் ராஜா மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் செப்டம்பர் 19ம் தேதி புகார் அளித்திருந்தார். இதன் மீது செப்டம்பர் 24ம் தேதி எச்.ராஜா மீது மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். 

காவல்துறை வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தால், “பெரியார் சிலைக்கு செருப்பு வீசியதற்காகவே ஜெகதீசன் என்பவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இப்படி இருக்கின்ற சூழலில் எச்.ராஜா மீதான வழக்குகள் தொடர்ந்து பதியப்பட்டு வருவதை திட்டமிட்ட ஒரு ஆயத்த நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும்.  எச்.ராஜா மீது அதுவும் திமுகவினர் சில மாதங்கள் முன்பு கொடுத்த புகார்களின் மீது வழக்குப் பதிவும் முடிவு என்பது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களால் தன்னிச்சையாக மேற்கொண்டுவிட முடியாது. அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் அறிவுறுத்தல் இல்லாமல் இந்த வழக்குகள் பதியப்பட வாய்ப்பில்லை. எஸ்.பி.க்களுக்கு நிச்சயம் காவல்துறை தலைமையின் அட்வைஸ் இருக்கும். காவல்துறை தலைமை என்றால் அது முதல்வர் சொல்படிதான் செயல்படும். 

இந்த நிலையில் ராஜா மீது கடந்த ஒருவாரத்தில் நான்கு எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பெரியாரிய அமைப்புகள் கொடுத்த புகார்களையும் வழக்குகளாக மாற்றினால் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும். எனவே அ.தி.மு.க-வுக்கும், பா.ஜ.க-வுக்குமான அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு ராஜா மீது குண்டாஸ் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றே தெரிகிறது. சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் நான்கு வாரங்களுக்குள் ஒரு நாள் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும். ராஜா ஆஜராகி பதில் அளிக்கும் வரை தமிழக போலீஸ் காத்திருக்கக் கூடும்” என்கிறார்கள்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close