ஜெயலலிதா மரண விசாரணை... ஆணையத்துக்கு சசிகலா குடும்பம் எச்சரிக்கை!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 26 Sep, 2018 05:56 am
jayalalithaa-s-death-trial-sasikala-family-warns-to-arumugasamy-commision

“ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செப்டம்பர் 22ஆம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள சர்ச்சையை விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுமார் 100 பேருக்கும் மேலாக ஆஜராகி வாக்குமூலம் அளித்துவிட்டனர். ஒவ்வொருவரின் வாக்குமூலமும் முன்னுக்கு பின் முரண்பட்டதாகவே இருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சசிகலாவின் உறவினர் டாக்டர்.சிவகுமார் ஆணையத்தில் ஆஜரானபோது வாக்குமூலம் அளித்ததுடன் சில ஆடியோ ஆதாரங்களையும் கொடுத்தார். அதில் ஒரு ஆடியோ அப்போது வெளியானது. அதில் ஜெயலலிதாவுடன் பெண் மருத்துவர் ஒருவர் பேசும் குரலும் பதிவாகி இருந்தது. ‘திரும்பிப் படுங்க..’ என ஜெயலலிதாவிடம் அந்த ஆடியோவில் பெண் மருத்துவர் சொல்வார். ஆனால், அந்த ஆடியோ ஒரிஜினல்தானா என அப்போது பலரும் சந்தேகத்தைக் கிளப்பினார்கள். அந்த ஆடியோவில் பேசிய குரல் அப்பல்லோ மருத்துவர் டாக்டர். அர்ச்சனாவின் குரல் என சொன்னார்கள். அந்த அர்ச்சனா நேற்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார். அப்போது டாக்டர். சிவகுமார் கொடுத்த ஆடியோவை மறுபடியும் ஒருமுறை அர்ச்சனாவிடம் ப்ளே செய்து காட்டியிருக்கிறார்கள். ‘இது உங்கள் குரல்தானா? அல்லது வேறு யாரும் பேசினார்களா? இது எப்போது பதிவு செய்யப்பட்டது என உங்களுக்கு நினைவிருக்கிறதா?’ என ஆணையத்தில் கேள்விகளை முன்வைத்திருக்கிறார்கள்.

அதற்கு டாக்டர் அர்ச்சனா, ‘இது என்னுடைய குரல்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இதை யார் பதிவு செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது. ஜெயலலிதா மேடம் அட்மிட் ஆன சமயத்தில் நான் அவரை கவனித்து வந்தேன். எந்த நேரத்தில் எந்த நாளில் இது பேசப்பட்டது என்பது எனக்கு நினைவில்லை. ஒவ்வொரு முறையுமே சுகர், மற்றும் ரத்த அழுத்தத்தின் அளவைப் பரிசோதிக்கும்போதும், ‘எவ்வளவு இருக்கு ? ‘ என்பதை ஜெயலலிதா மேடம் விசாரிப்பாங்க. அப்படித்தான் இந்த ஆடியோவில் இருக்கும் பதிவிலும் விசாரிக்கிறாங்க. அவங்க அப்பல்லோவில் இருக்கும்போது பதிவு செய்யப்பட்டதுதான் இந்த ஆடியோ..’ எனச் சொன்னாராம். ‘தேதியை நினைவு படுத்திப் பாருங்க...’ என ஆணையத்தில் கேட்டபோது, ‘எவ்வளவு நினைவுபடுத்தினாலும் ஞாபகம் வர வாய்ப்பே இல்லை. ஏன்னா இதை பதிவு செய்ததே எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டாராம் அர்ச்சனா.

அதாவது சசிகலா தரப்பில் இதுவரை கொடுக்கப்பட்ட ஆவணங்களில், அவர் ஜூஸ் குடிப்பது போல எடுக்கப்பட்ட வீடியோவில் மட்டும் சில சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் தங்கியிருந்த அறையில் பின்பக்கம் மரங்கள் எதுவுமே இல்லை. ஆனால், அந்த வீடியோவில் மரம் இருப்பது தெரிகிறது என நேரடி விசாரணைக்குச் சென்றபோது ஆறுமுகசாமி குறிப்பிட்டதாக சொன்னார்கள். அடுத்து குரல் பதிவில் உள்ளது ஜெயலலிதாதான் என்பதை இப்போது டாக்டர் அர்ச்சனாவின் வாக்குமூலம் நிரூபித்திருக்கிறது.

‘எங்ககிட்ட இன்னும் நிறைய ஆடியோவும் வீடியோவும் இருக்கு. அதெல்லாம் வெளியிட்டால் எங்க மேல எந்த தப்பும் இல்லை என்பது நிரூபணம் ஆகும். ஆனால், நாங்க எதையும் வெளியிட கூடாது என ஆணையம் தடை போட்டு இருப்பதால் அமைதியாக இருக்கிறோம். எல்லா ஆவணங்களையும் ஆணையத்துக்கும் ஒரு காப்பி கொடுத்தாச்சு. அதையெல்லாம் பார்த்தாலே உண்மை தெரிஞ்சிடும். ஆணையத்தில் எங்களுக்கு எதிராக ஏதாவது முடிவு வந்தால் அப்போது எங்க கையில் இருக்கும் எல்லா ஆவணங்களும் பொதுவெளிக்கு வந்தே தீரும்...’ என்று  சசிகலாவின் குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close