ஆட்சி மாறும்; காட்சி மாறும்; கவனத்தில் கொள்! அ.தி.மு.க.வை கண்டித்து ஸ்டாலின் அறிக்கை 

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2018 07:38 am
mk-stalin-report

அழுக்கு நிறைந்த வரலாற்றில் இருந்து அ.தி.மு.க.வால் ஒருபோதும் தப்பிக்க முடியாது. திமுக முதுகை பார்ப்பதை விடுத்து, உங்கள் முகத்தைப் பாருங்கள். கரியும், கறையும் மட்டுமே அதில் அப்பிக் கிடக்கிறது. ஆட்சி மாறும்; காட்சி மாறும்; கவனத்தில் கொள்க! என எச்சரிக்கிறேன் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்  அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2011 முதல் ஆட்சியில் இருப்பது அ.தி.மு.க.தான்; தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கிறது. எங்காவது, 7 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சியாக உள்ள அரசியல் கட்சிக்கு எதிராக, ஆளுங்கட்சியின் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லாரும் கூடிக்கும்மாளமிட்டு போராட்டம் நடத்தி கூப்பாடு போடும் கேலிக்கூத்தைக் கேட்டதுண்டா? கண்டது உண்டா?. அந்த இழிவான மலிவான பெயரைப் பெற்றவர்கள் தான் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள்.

ராஜபக்சே ஏதோ சொல்லி விட்டார் என்று, அதை முழுமையாக கூடப் படித்துணராமல், தி.மு.க மீதும், காங்கிரஸ் மீதும் போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இல்லாத ஊருக்குப் போகாத வழியைக் காட்டும், கண்டனப்பொதுக்கூட்டம் நடத்தி இருக்கிறது ஆளுங்கட்சியான அ.தி.மு.க.

எடுத்துக்கொண்ட பிரச்சினையைக் கூடப்பேசாமல் அல்லது ஈழப்பிரச்சினையின் 60-வது ஆண்டு கால வரலாற்றைப் பேசத்தெரியாமல், தி.மு.க.வைப் பற்றி மட்டுமே, முதலமைச்சரில் தொடங்கி அத்தனை பேரும் பேசியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே, எதிர்க்கட்சியாக இருந்தாலும் தி.மு.க. தான் மக்களின் மகத்தான செல்வாக்கைப் பெற்றிருக்கும் இயக்கமாக இருக்கிறது என்ற உண்மை, அ.தி.மு.க.வினரை உறங்க விடாமல் உறுத்திக்கொண்டே இருக்கிறது என்பது புரிந்துவிடும்.

ஊழல் ஆவணங்கள் ஒவ்வொரு நாளும் சிக்கிக்கொண்டே இருப்பதால், மாநில ஆட்சியாளர்களைத் தன் கைப்பாவையாக வைத்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு இந்த கேலிக்கூத்துப் பொதுக்கூட்டத்தின் பின்னணியில் இருக்கிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது.

காரணம், கொடுங்கோலன் ராஜபக்சேவை அண்மையில் டெல்லிக்கு அழைத்து வந்து பிரதமரை சந்திக்க வைத்தவரே பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரமுகர் தான். அதுமட்டுமல்ல, ஈழ விடுதலைக்காகப் போராடிய விடுதலைப்புலிகளை அவர்களின் கடற்படைப் பிரிவினை ஒடுக்கி அழிப்பதற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உதவினார் என்றும், அவர் இல்லையென்றால் எங்களால் விடுதலைப்புலிகளின் கடற்படை பிரிவினை அழித்தொழித்திருக்க முடியாது என்றும், ராணுவ ரீதியான உதவிகளை வாஜ்பாய் அளித்தார் என்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அங்குள்ள இந்திய தூதரகத்திற்குச் சென்று இரங்கல் குறிப்பேட்டில் எழுதி உள்ளார்.

அப்படியென்றால், அ.தி.மு.க.வினருக்கு உண்மையாகவே ஈழத்தமிழர் மீது அக்கறை இருக்குமென்றால், வாஜ்பாய் சார்ந்திருந்த பா.ஜ.க.வைக் கண்டித்துதானே முதற்கட்டமாகப் பொதுக்கூட்டம், போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். எஜமானர்களை எதிர்த்து எப்படி போராட்டம் நடத்த முடியும்?. தங்களின் ஊழல் சிண்டு வசமாக டெல்லி எஜமானர்களிடம் சிக்கி இருக்கும் போது அவர்கள் உத்தரவுக்கேற்பத்தானே ஊளையிட முடியும்.

தி.மு.க. ஆட்சியில் ஊழல் என்றால் இத்தனை ஆண்டுக்காலமாக ஆட்சியில் இருக்கும் நீங்கள் வழக்குப் போட்டு நிரூபித்திருக்க வேண்டியதுதானே?. அதை யார் தடுத்தார்கள்?. புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் ஊழல் என்று சொல்லி, நீங்கள் அமைத்த விசாரணை கமிஷனுக்கு உயர்நீதிமன்றம் அளித்துள்ள சான்றிதழை படித்துப் பாருங்கள். ஊழலில் புரண்டு புழுத்துப் போனவர்கள் யார் என்பது தெரியும்.

தலைமைச் செயலகத்தில் ரெய்டு, டி.ஜி.பி. அலுவலகத்தில் ரெய்டு, அமைச்சர்கள் வீடுகளில் எல்லாம் ரெய்டு என உங்களுடைய ஊழல் முறைகேடுகளால் தமிழ்நாட்டின் தனிப்பெருமை தாழ்ந்து போய் அசிங்கப்பட்டுக்கிடக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கிய குட்கா ஊழலை சட்டமன்றத்திலேயே ஆதாரத்துடன் நிரூபித்த கட்சிதான் தி.மு.க., ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக, ஆதாரப்பூர்வமாக செயல்பட்டு நீதிமன்றத்தை நாடிய காரணத்தினால் தான், குட்கா ஊழல் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது நடவடிக்கைகள் ஆரம்பமாகி உள்ளன.

அதேபோல், முதலமைச்சர் தன்னுடைய சொந்தங்களுக்கு நெடுஞ்சாலைத்துறையில் அளித்த டெண்டர்களில் ஊழல், துணை முதலமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என தொடர்ந்து ஊழல் பட்டியல் விசாரணைக்கு அணிவகுத்து நிற்கின்றன. அவை எதுவரை போகுமோ என்றெண்ணி கவலை உங்களை வாட்டினால், அதற்கு நானா பொறுப்பு?.

காற்றாலை மின்சார ஊழல் குறித்து ஆதாரத்துடன் விளக்கிய நிலையில், என் மீது பாய்ந்தாரே மின்துறை அமைச்சர், வழக்குப் போடுவேன் என்றாரே, தாராளமாகப் போடட்டும் என நான் சொன்ன பிறகும், மின்சார ஷாக் அடித்த மாதிரி பம்முகிறாரே ஏன்?. அ.தி.மு.க. ஆட்சியின் ஒவ்வொரு ஊழல் தொடர்பாகவும் நீதிமன்றத்திற்கு தி.மு.க. சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உங்களுடைய அரைகுறை அச்சுறுத்தலுக்கு எல்லாம் யாரும் அஞ்சமாட்டார்கள். தி.மு.க. மீது உங்களால் அப்படி குற்றம் சுமத்த முடியுமென்றால், நீதிமன்றத்தில் சென்று நிரூபித்துக் காட்டுங்கள். அதற்கு வக்கின்றி, தெம்பின்றி, திராணியின்றி ஈழத்தமிழர்களின் பெயரால் அரசியல் லாபம் தேட முயற்சித்து, அதில் தி.மு.க. மீது ஊழல் புகார் சொல்வதும், தி.மு.க.வை ஒரு கம்பெனி எனப்பேசுவதும் நாவடக்கம் இல்லாத நாலாந்தரச்செயல் என முதலமைச்சரையும் அவரைச் சார்ந்தவர்களையும் எச்சரிக்க விரும்புகிறேன்.

முதலமைச்சர் பதவியைப் பயன்படுத்தி ஊழல் செய்வதற்காகவே எத்தனையெத்தனை கம்பெனிகளை உங்கள் கட்சித் தலைமை ஆரம்பித்தது, எவ்வளவு கொள்ளையடித்தது என்பது நீதிபதி குன்கா அளித்த தீர்ப்பின் மூலமும், அதனை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமும் உலகத்திற்கே தெரிந்துவிட்டது.

அந்த அழுக்கு நிறைந்த வரலாற்றில் இருந்து அ.தி.மு.க.வால் ஒருபோதும் தப்பிக்க முடியாது. ஊழல் வழக்குக்காக இரண்டு முறை, ஒரு முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்ட மலிவான பெருமையும் இந்திய வரலாற்றிலேயே உங்கள் அ.தி.மு.க. என்ற போலி கம்பெனிக்குத் தான் உண்டு. எங்கள் முதுகை பார்ப்பதை விடுத்து, உங்கள் முகத்தைப் பாருங்கள். கரியும், கறையும் மட்டுமே அதில் அப்பிக் கிடக்கிறது. தி.மு.க. என்பது விமர்சனங்களையும், பழிச்சொற்களையும், நெருக்கடிகளையும் துணிவுடன் எதிர்கொண்டு நெருப்பாற்றில் நீந்தி புடம் போட்ட தங்கமாக எழுந்து நிற்கிற இயக்கம். ஆட்சி மாறும்; காட்சி மாறும்; கவனத்தில் கொள்க! என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close