திருப்பரங்குன்றம் தேர்தல்... ’அழகிரி’ அச்சத்தால் ஒதுங்கும் தி.மு.க!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 01 Oct, 2018 01:00 pm
thirupparankundam-by-election-alagiri-fears-dmk-to-get-away

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு எந்த நேரத்திலும் தேர்தல்  அறிவிக்கப்படலாம் என்ற சூழலில், தேர்தலை எதிர் கொள்ள அ.தி.மு.க -அ.ம.மு.க ஆகிய  இரு கட்சிகளும் முழு வீச்சில் இறங்கி விட்டன.

ஆலோசனை கூட்டம், சைக்கிள் பேரணி என கோடிகளை கொட்டி ஆளும் அதிமுக சார்பாக பிரமாண்ட நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அ.ம.மு.க.வுக்காக தங்க தமிழ் செல்வன் திருப்பரங்குன்றத்திலேயே  தங்கி, அக்கட்சியினர் மத்தியில் தேர்தல்  வேலைகளை முடுக்கி விட்டுள்ளார்.
இரண்டு கட்சிகளின் சார்பாக போட்டியிட உள்ளவர்களின் பெயர்களைக் கூட அந்த கட்சிகளின் மேலிடங்கள் முடிவு செய்து விட்டதாகத் தெரியவந்துள்ளது.

அ.ம.மு.க. சார்பாக தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை களம் இறங்க உள்ளார். அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் போட்டியிடுவது கிட்டத்தட்ட  உறுதியாகிவிட்டது. தி.மு.க .என்ன செய்து வருகிறது? தேர்தலைத் தடுத்த நிறுத்தத் தேவையான ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கி உள்ளது. இந்தத் தகவல் வியப்பாக உள்ளபோதிலும், அது தான் உண்மை என்பதே நிதர்சனம். மேலும், அ.தி.மு.க- அ.ம.மு.க,வுடன் ஒப்பிடும் போது தி.மு.க. திருப்பரங்குன்றம் தொகுதியில் மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளது. போதாக்குறைக்கு அழகிரியின் அச்சுறுத்தல் வேறு வெளிப்படையாக அரங்கேறி வருகிறது!

திருப்பரங்குன்றத்தில் தி.மு.க.வை ‘டெபாசிட்’ இழக்கச்செய்வதே  அவரது திட்டம் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி எம்.ஜி.ஆர். காலத்திலேயே திமுக கோட்டையாக  விளங்கிய சென்னையின் ஆர்.கே.நகர் தொகுதியிலேயே  கடந்த இடைத்தேர்தலில் தி.மு.க. ’டெபாசிட்’ட்டை பறி கொடுத்ததையும் அவர்கள் சுட்டிக் காட்டினர். இந்தச் சூழலில் அழகிரியின் ஆளுகைக்கு உள்பட்ட திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டு மண்ணை கவ்வுவது, தனது அரசியல் எதிர் காலத்தையே முடக்கி விடும் என்று முடிவுக்கு வந்துள்ள மு.க.ஸ்டாலின், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நீதிமன்ற வாசலை தட்டி உத்தரவு பெறுவதன் மூலம் தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்து வருகிறார்.

இதன் தொடக்கமாக, அந்தத் தொகுதியில் கடந்த  முறை போட்டியிட்டு தோற்ற திமுக வேட்பாளர் டாக்டர்.சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.  அதில், ‘திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக நான்  தொடுத்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி திருப்பரங்குன்றம் தொகுதியை காலியாக  அறிவித்தது  தவறு.  இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை தேர்தல் நடத்த கூடாது” என்று தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார் , சரவணன்.

இப்போதைக்கு திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடக்கக்கூடாது என்பதே ஸ்டாலின் வேண்டுதல். அதையே நீதிமன்றத்தில் வேண்டிக்கொண்டுள்ளார் திமுக வேட்பாளர். ‘எப்படி இருந்த கட்சி.. இப்படி ஆகிப்போச்சே...’’ என்று புலம்புகிறார்கள் திமுக தொண்டர்கள்.  

-பா.பாரதி

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close