கூவத்தூர் ‘ரகசிய’ வீடியோ... கருணாஸ் மூலம் எடப்பாடிக்கு செக் வைக்கும் தினகரன்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 03 Oct, 2018 06:11 pm
karunas-compromising-koovathur-video-gets-to-ttv-dinakaran

எம்.எல்.ஏ-க்கள் ரகசியமாக  தங்க வைக்கப்பட்ட செய்திகள் எப்படி பரப்பாக பேசப்பட்டதோ, அதே  கூவத்தூர் சம்பவம் மீண்டும் கருணாஸ் மூலம்  வெடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

கருணாஸின் நடவடிக்கைகளை அறிந்த முக்குலத்தோர் புலிப்படையின் முன்னாள் நிர்வாகிகள் இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டபோது, ’’முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு முதல்வராக நியமிக்கப்பட்டார் ஓ.பி.எஸ். அதன்பிறகு சசிகலா, ’ஜெயலலிதா’வாக தன்னை முன்னெடுக்க நினைத்தார். இதனால், விரக்தியான அப்போதைய முதல்வர் ஓ.பி.எஸ்., தர்மயுத்தம் நடத்தினார். இதனால், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

அடுத்து, கூவத்தூரில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர். அப்போது, அனைத்து ’ஏற்பாடுகளையும்’ செய்து கொடுக்க கருணாஸ் முன் வந்தார். அதன் மூலம் எம்.எல்.ஏக்களுக்கு ‘சேவை’ செய்யவும் சிலரை கருணாஸ் அழைத்து வந்துள்ளார். இதற்காக  அப்போது அவருக்கு பெரும் தொகை கொடுக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டோம். 

இதனைத் தொடர்ந்து கருணாஸுக்கு ‘தான் முதலமைச்சராக பதவியேற்றவுடன் அமைச்சர் பதவி கொடுக்கிறேன்’ என சசிகலா வாக்குறுதி கொடுத்திருந்தார். அடுத்து சசிகலா ஜெயிலுக்குப் போய், எடப்பாடி முதலமைச்சர் ஆன கதை அனைவரும் அறிந்ததே... சசிகலா குடும்பம் கட்சி, ஆட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டு எல்லாம் எடப்பாடி வசம் வந்தது. அப்போதே, தனக்கும் அமைச்சர் பதவி வேண்டும் எனக் கோரினார் கருணாஸ். ஆனால், எடப்பாடி கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு தி.மு.க சார்பில், ஸ்டாலின் முன்னின்று நடத்திய மாதிரி சட்டப்பேரவையில் கலந்து கொண்டார் கருணாஸ். அங்கே, ‘முடிந்தால் கூவத்தூர் ரகசியங்களை வெளியிடுவேன்’ என அவர் முழங்கினார். அப்போதே தி.மு.க-வில் ஐக்கியமாகிவிடப் போகிறார் எனக் கருதினோம். 

 ஆனாலும், பேரம் படியவில்லை. கூவாத்தூரில் எம்.எல்.ஏக்களுக்கு ‘சேவை’யாற்றியபோது  ரகசியமாக எடுக்கப்பட்ட ஒலி, ஒளிப்பதிவுகளையும்  வைத்திருந்தார் கருணாஸ். இந்த விஷயத்தை வைத்து ஸ்டாலினிடம் பேரம்பேசியிருக்கிறார். அப்போதைய நிலையில், ஆட்சி கவிழ்ந்து மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகி விடுவார் என்பது கருணாஸின் கணிப்பு. ஆனாலும், அவரின் ஜம்பமும், அதனால், கருணாஸின் ஜாகையும் பலிக்கவில்லை. அடுத்து டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக மடங்கிப் போனார். அவரும் கண்டுகொள்ளாத நிலையில், சில பல மாதங்கள் அமைதிகாத்து வந்தார் கருணாஸ்.

ஏற்கெனவே, கூவத்தூர் வீடியோ விஷயங்களை வைத்து அமைச்சர் பதவி  கேட்ட கருணாஸ், அடுத்த இடியை நம் மீது போடத் தயங்கமாட்டார்  என்பது எடப்பாடியாரின் அனுமானம். அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமி மூலம் அந்த வீடியோ ஆதாரங்களைக் கேட்டு கருணாஸ் தரப்பிற்கு சிக்கலை ஏவி இருக்கிறார்.

ஆனால், கருணாஸ் மசியவில்லை. இதனைத் தொடர்ந்தே, இப்போது  அவருடன் இருக்கும் அமைப்பினர்களுக்குச் சட்டச்சிக்கல்களை ஏவி வளைக்க முயன்றார் எடப்பாடி. ஒரு கட்டத்தில் போலீஸின் சிக்கல்களைத்  தாங்க முடியாத கருணாஸ் கொதித்தெழுந்து விட்டார். அதன் பிறகே முதல்வரையும், போலீஸையும் மிரட்டும் தொனியில் வள்ளுவர் கோட்டத்தில் பேசி சிக்கலுக்கு ஆளானார். கருணாஸ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குகள் போடப்பட்டது. அப்போதும் ‘வீடியோ’ ஆதாரம் தன்னிடம் இருப்பதால், கைது செய்யப்படமாட்டோம் என்கிற தைரியத்தில் மீடியாக்களிடம் பேட்டி தட்டினார். அதன்பிறகே கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த விவகாரம் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு பிறகே தெரிய வந்துள்ளது. அந்த வீடியோ ஆதாரங்கள் தம்மைச் சார்ந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த சசிகலா, சிறையில் இருந்து டி.டி.வி.தினகரனுக்கு ‘கருணாஸை அனுசரித்து போகுமாறு’ தகவல் அனுப்பியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து, தினகரன் பக்கம் போன எம்.எல்.ஏ-க்கள் சோளிங்கர் பார்த்திபன், குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் மற்றும் தினகரன் அணி வழக்கறிஞர்கள் ஆகியோர் வேலூர் சிறை சென்று கருணாஸை சந்தித்துப் பேசினர். அப்போது வீடியோக்கள் பற்றியும் இந்தச் சந்திப்பின்போது பேச்சு நடந்துள்ளது. ’’அனைத்து வீடியோ ஆதரங்களையும் தினகரனிடம் ஒப்படைப்பதாக உறுதியளித்துள்ளார் கருணாஸ்’’ என்கிறாகள். 

தற்போது வெளியில் வந்துள்ள கருணாஸுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார் டி.டி.வி.  அந்த வீடியோக்களை கைப்பற்றி, எடப்பாடி சம்பந்தமான விவகாரங்களை கையெடுக்க திட்டமிட்டுள்ளார் தினகரன். அதை இன்னும் சில நாட்களில் வெளியிட்டு எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம் காண்பிக்க தயாராகி வருகிறார்கள். இதனால்தான், வெளியில் இருந்து வந்தும், இன்னும் வீராப்பாக பேசி வருகிறார் கருணாஸ்’’ என்றும்  கூறுகிறார்கள் முக்குலத்தோர் புலிப்படை முன்னாள் நிர்வாகிகள். 

இதையே பிரதிபலிக்கிறது, கருணாஸ் சிறையில் இருந்து வெளி வந்த பின்னால்  மீடியாக்களை சந்திக்கும் அவர் பேசும் பேச்சுக்கள். "வலியவனுக்கு ஒரு சட்டம், எளியவனுக்கு ஒரு சட்டமா? நீதிமன்றம் உங்களை கவனித்துக் கொண்டுதான் உள்ளது. நீதித்துறை உங்களுக்கு சரியான நேரத்தில் தக்க பாடம் புகட்டும். நாங்கள் நீதித்துறையை மதிப்பவர்கள். தமிழக மக்கள் உங்களை பார்த்து சிரிக்கிறார்கள். ஜெயலலிதா இருந்த போது எப்படி இருந்தவர்கள், இப்போது எப்படி பேசுகிறார்கள், நடந்துகொள்கிறார்கள் என மக்கள் கவனிக்கிறார்கள். முக்குலத்தோர் புலிப்படையினரை கையை உடைப்பேன் காலை உடைப்பேன் என மிரட்டினால் சும்மா இருக்க மாட்டோம். நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பேன். வார்த்தையை அளந்து பேசுங்கள்" எனக் கர்ஜித்து இருக்கிறார் கருணாஸ். 

கருணாஸின் இந்தப்பேச்சுகள் மேலும் எடப்பாடியை வெறுப்பேற்ற மீண்டும் வழக்க்குகளைப்பதிய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், கைது நடவடிக்கையை உணர்ந்தே கருணாஸ் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close