அடுத்தவர் குழந்தைக்கு தன் பெயர் வைக்க ஆசைப்படுகிறார்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம் 

  Newstm Desk   | Last Modified : 02 Oct, 2018 08:09 am
m-k-stalin-writes-letter-about-edappadi-palanisamy

 தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறைவடைந்து பயன் தந்த ஒரு திட்டத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்டி, அடுத்தவர் குழந்தைக்கு தன் பெயர் வைக்க ஆசைப்படுகிறார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  

இது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நடைபெற்று வருவது ஆட்சியல்ல; வெறும் காட்சி; அதுவும் பொம்மலாட்டக் காட்சி; ஏழாண்டுகளாக தமிழ்நாடு அல்லல்களை அனுபவித்து வருகிற அழிவின் நீட்சி. அதனைக் கண்டித்து தான், 3, 4 தேதிகளில் தமிழ்நாட்டில் 120 இடங்களில் தி.மு.க. சார்பில் ஊழல் அரசை உலகுக்கு தோலுரித்துக் காட்டும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. ஆட்சியாளர்கள் தங்களின் ஊழலை மறைக்க நிர்வாகச் சீர்கேட்டை பலவித மேக்கப்புகள் போட்டு மறைக்கப்பார்க்கிறார்கள்.

அதில் ஒன்றுதான் சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா. ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே மறக்கடிக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்டாமல் தன்னுடைய பெயரையே சூட்டிக்கொண்டார் ஜெயலலிதா. 1996-ல் தி.மு.க. ஆட்சி மலர்ந்த பிறகே, அந்த திரைப்பட நகர் விரிவாக்கம் செய்யப்பட்டு அதற்கு எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டி என்ற பெயர் கருணாநிதியால் சூட்டப்பட்டது.

கோயம்பேடு பேருந்து நிலையம்

ஜெயலலிதா இருக்கும் வரை எம்.ஜி.ஆரைப் புறக்கணித்துவிட்டு, இன்றைக்கு தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற மேக்கப் போட்டு முதலமைச்சர், துணை முதலமைச்சர், பின்னணிப் பாடகரான ஒரு அமைச்சர் உள்ளிட்ட அத்தனை பேரும் அரசு விழா மேடையில் அசத்தலான நடிகர்களாகி இருக்கிறார்கள். ஏதோ எம்.ஜி.ஆருக்கு இவர்கள் தான் பெருமை சேர்க்கிறார்கள் என்பது போல, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்படும் என்றும் முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய பஸ் நிலையமான கோயம்பேடு பஸ் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கருணாநிதி திட்டப்படி அவரது வழிகாட்டுதல்படி அவரது மேற்பார்வையுடன் 1996-2001 தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது என்ற வரலாறு எல்லோருக்கும் தெரியும். அதற்கு எம்.ஜி.ஆரின் பெயரை சூட்டுகிறார்களாம். ஏன், ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தாரே சென்னை வண்டலூர் அருகே மிகப்பெரிய புறநகர் பஸ் நிலையம் உருவாக்கப்படும் என்று! அது என்னவாயிற்று?.

அடுத்தவர் குழந்தைக்கு பெயர் வைக்க ஆசைப்படுகிறார்கள்

தங்கள் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்தை நிறைவேற்றி, அதற்கு தங்கள் கட்சியின் நிறுவனர் பெயரைச் சூட்ட வக்கற்ற வகையற்ற ஆட்சியாளர்கள் தான், தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறைவடைந்து பயன் தந்த ஒரு திட்டத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்டி, அடுத்தவர் குழந்தைக்கு தன் பெயர் வைக்க ஆசைப்படுகிறார்கள்.

ஆட்சியாளர்களின் லட்சணம் எப்படி இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தினால், வாயைத் திறந்தாலே மு.க.ஸ்டாலின் பொய் பேசுகிறார் என்று அரசு விழாவில் அப்பட்டமான அரசியல் பேசுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

எய்ம்ஸ் மருத்துவமனை

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு நிதி எதுவும் இதுவரை ஒதுக்கப்படவில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது. இதற்கும் மேலாக, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறைக்கான அமைச்சகமும் தெரிவித்து விட்டது. அடுத்தவர் குழந்தைக்கு பெயர் வைக்க ஆசைப்படும் அ.தி.மு.க ஆட்சியாளர்கள், பிறக்காத குழந்தைக்கு பெயர் வைத்திருக்கிறார்கள் என்பது இப்போது அம்பலமாகியிருக்கிறது.

அ.தி.மு.க. அமைச்சரவையில் எடப்பாடி பழனிசாமியையும் சேர்த்து 33 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அகில இந்திய அளவில் ஊழல் ஆழமாக கறைபடிந்த அமைச்சரவை இன்றைக்கு தமிழகத்தில் இருக்கிறது. ஊழலை விசாரியுங்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் தரப் போனால், அந்த துறையின் உயரதிகாரி பாலியல் புகாரில் சிக்குகிறார். லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரியின் மீதான புகாரை விசாரியுங்கள் என்று மனு கொடுக்க டி.ஜி.பி.யிடம் போனால் அந்த டி.ஜி.பி. ராஜேந்திரன் குட்கா ஊழலில் மாட்டியிருக்கிறார்.

ஊழல்

குட்கா ஊழல் டி.ஜி.பி. மீதும், அமைச்சர் வேலுமணி செய்யும் ஸ்மார்ட் சிட்டி ஊழலையும் விசாரியுங்கள் என்று முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்கப்போனால் முதலமைச்சர், நெடுஞ்சாலை காண்டிராக்ட் ஊழலில் சிக்குகிறார். 400 கோடி ரூபாய் பருப்பு கொள்முதல் ஊழலில் அமைச்சர் காமராஜ், 200 கோடி ரூபாய் அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் மார்க் ஊழல் மற்றும் அனைத்து பல்கலைக்கழக ஊழலில் அமைச்சர் கே.பி.அன்பழகன், 2 ஆயிரம் ஆம்னி பஸ் வாங்குவதில் 300 கோடி ரூபாய் டெண்டர் ஊழலில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முட்டை டெண்டர் ஊழல், 84 கோடி ரூபாய் காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல், மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் என்று 33 அமைச்சர்களுக்கும் பட்டியல் போடலாம்.

மின்துறை அமைச்சர் தங்கமணி மீது காற்றாலை மின்சார ஊழல் வெளிப்பட்டுள்ளது. இதைச் சொன்னதற்காக என் மீது வழக்கு போடுவதாக மிரட்டினார். ஆதாரங்களை வெளியிட்டு, வழக்குப் போட்டுப்பாருங்கள் என்றேன்; 7 நாள் கெடு முடிந்துவிட்டது; வழக்கு போடும் வக்கணை இல்லை.

ஆட்சி மாற்றம்

நான் ஆதாரங்களுடன் தான் ஆட்சியின் அவலங்களை அவ்வப்போது அம்பலப்படுத்துகிறேன். அதனைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டிய பெரும்பணி தி.மு.க. தொண்டர்களாகிய உங்களுடையது. மக்களிடம் செல்வோம், மக்களுடன் செல்வோம். மறைக்கப்படும் ஊழல்களை அக்குவேறு ஆணிவேறாக அம்பலப்படுத்துவோம். தமிழ்நாடு சீரழிந்து கிடப்பதை எடுத்துரைப்போம். அறவழிக்களத்தில் ஜனநாயக ஆயுதத்தை கையிலேந்தி ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close