எம்.ஜி.ஆரை சீண்டிய ஸ்டாலின்... அதிருப்தியில் தி.மு.க நிர்வாகிகள்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 03 Oct, 2018 07:02 pm
stalin-speech-mgr-d-m-k-executives-in-frustration

சகட்டு மேனிக்கு சிலம்பமாடிக்கொண்டிருக்கும்  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்  எம்.ஜி.ஆரையும் திட்டித்தீர்க்க, அதனால், தி.மு.க நிர்வாகிகளே அவர் மீது ஆதங்கத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள். 

மோடி தொடங்கி ஓ.பி.எஸ், ஈபி.எஸ், ஜெயக்குமார் என ஒருவர் விடாமல் திட்டித் தீர்த்த ஸ்டாலின், இப்போது எம்.ஜி.ஆரையே விமர்சித்திருப்பது திமுகவினரையே அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது. சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும்’ என்று அறிவித்தார்.
‘’முதல்வர் என்ன கூறினாலும், அதற்கு சுடச்சுட பதில் தர வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சி தலைவருக்கான தகுதி’’ என ஸ்டாலின் நினைத்துவிட்டார் போல.

மறுநாளே பதில் கொடுத்தார், ஸ்டாலின். ‘’திமுக ஆட்சியில் நிறைவடைந்த ஒரு திட்டத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டுவதா? எனக் கொந்தளித்த ஸ்டாலின், அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் ஒரு படிமேலே போய் ’’திமுக ஆட்சியில் பயன் தந்த திட்டத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டி, அடுத்தவர் குழந்தைக்கு தன் பெயர் வைக்க ஆசைப்படுகிறாரகள்’’ என விமர்சித்தார். அந்த கருத்து இப்போது அ.தி.மு.க-வினரிடையே மட்டுமல்ல, தி.மு.கவினருக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு எதிராக, ஸ்டாலினுக்கு முதன் முதலாக பதில் கொடுத்தவர் அ.தி.மு.க-வில் இருந்து ஒதுங்கி இருக்கும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. ‘’கோயம்பேடு பேருந்து நிலையம் உருவாக  நடவடிக்கை எடுத்ததே எம்.ஜி.ஆர் தான். எனவே அவர் பெயர் வைத்ததில் தவறு இல்லை‘’ என்று கருத்து தெரிவித்ததோடு ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸையும் புகழ்ந்து தள்ளி விட்டார்.

அ.தி.மு.க-விலிருந்து விலகி தற்போது தி.மு.க-வில் இருக்கும் சாத்தூர் ராமச்சந்திரன், எ.வ.வேலு, சேகர்பாபு, கருப்பசாமி பாண்டியன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட எம்.ஜி.ஆர் விசுவாசிகளையும் ஸ்டாலினின் கருத்து  ஆத்திரமடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.
‘அழகிரி விவகாரம் உச்சம் எடுத்துள்ள நிலையில், அதனை தீர்க்காமல், ஸ்டாலின் ஏன் எம்.ஜி.ஆரை  வீணாக சீண்ட வேண்டும்?’’ என்பது அவர்களது கேள்வி.

துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களுக்கும் இதே ஆதங்கம் இருப்பதாக சொல்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close