அ.தி.மு.க பொதுச்செயலாளராகும் ஈ.பி.எஸ்... அதிருப்தியில் ஓ.பி.எஸ்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 05 Oct, 2018 04:11 am
eps-admk-general-secretary-ops-in-opposition

உள்கட்சித் தேர்தலை நடத்த அ.தி.மு.க. தலைமை தயாராகி விட்டது. சென்னையில் நடந்து முடிந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிலேயே, அதற்கு அச்சாரம் போட்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

அந்த நிகழ்ச்சிக்கு வந்த கூட்டத்தைப்பார்த்த பிறகு இன்னும் தெம்போடு எதையும் எதிர்க்கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறார் அவர். ஆகவே, அ.தி.மு.க பொதுச்செயலாளராகிவிட வேண்டும் என்கிற முடிவுக்கு எடப்பாடி வந்திருப்பதாக அ.தி.மு.க தலைமைக்கழகத்த்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு அந்தக் கட்சிக்கு தன்னை தற்காலிகப் பொதுச் செயலாளராக்கிக் கொண்டார் சசிகலா. அவர் சிறைசென்ற பிறகு எடப்பாடி தரப்பு சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்தது. பிறகு எடப்பாடி- ஓ.பன்னீர் செல்வம் அணிகள் ஒன்றிணைந்தன.

அப்போது கூடிய அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகாலா நியமனம் ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, 'ஜெயலலிதாவுக்குப் பின், கட்சியில் பொதுச் செயலாளர் பொறுப்பு யாருக்கும் கிடையாது' என்றும் 'இனி பொதுச் செயலாளர் பதவி கிடையாது எனவும் சட்ட திருத்தம் கொண்டுவரப்படும்' என்றும் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதனையடுத்து, அ.தி.மு.க-வில் முக்கிய முடிவுகளை எடுக்க உருவாக்கப்பட்டதுதான், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள். ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர்.

சமீபகாலமாக முக்கிய முடிவுகளை இருவரும் சேர்த்தே எடுத்தனர். இப்போது, எடப்பாடி ஓங்கி இருப்பதால் அவர் வைப்பதுதான் ஆட்சியிலும், கட்சியிலும் சட்டம் என்கிற நிலை. இந்தச் சூழலில் உள்கட்சித் தேர்தலை நடத்தத் தயாராகி வருகிறது அ.தி.மு.க. இதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க புதிய உறுப்பினர் உரிமை சீட்டுகள் வரும் 8-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. அடுத்த கட்டமாக கிராமங்கள் தொடங்கி மாவட்டங்கள் வரையிலான நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும்.

நிறைவாக உயர் மட்ட அளவிலான தேர்தல். அதாவது தலைமை கழக நிர்வாகிகள் தேர்வு. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது கட்சியில் பொதுச்செயலாளர் என்ற பதவி இருந்தது. அதனைத் தங்கள் சவுகரியத்துக்காக நீக்கி விட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என புது பதவிகளை உருவாக்கினர். 

இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில்  வழக்கு போட்டுள்ளார், அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி.யான பழனிச்சாமி. அவரது, மனுவுக்கு பதில் தருமாறு அ.தி.மு.க தலைமைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது, உயர்நீதிமன்றம். அதற்கான கெடு, வரும் 12-ம் தேதி முடிகிறது. அன்று அ.தி.மு.க தாக்கல் செய்யும் பதில் மனுவில், பொதுச்செயலாளர் பதவி நீடிக்கும் என தெரிவிக்கப்படலாம் என்கிறார்கள் கட்சி வட்டாரத்தில்.

இந்த நிலையில், இதனையே காரணம் காட்டி உள்கட்சி தேர்தலை நடத்த தீவிரம் காட்டி வருகிறார் எடப்பாடி. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெறுவதே அவரது இலக்கு. அதற்கான முதல் கட்ட காய் நகர்த்தலே, உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் வைபவம் என்கிறார்கள் அவரது  ஆதரவாளர்கள். ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. இருப்பினும், கட்சியில் அவர் படிப்படியாக ஓரங்கட்டுப்பட்டு வருகிறார் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். 
 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close