இடுக்குக்குள் சிக்கிக்கொண்ட ஓ.பி.எஸ்... பலத்த சேதத்தால் எடப்பாடியிடம் ஐக்கியம்!?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 05 Oct, 2018 07:07 pm
ops-got-trapped-in-the-streets

தர்மயுத்தம் நடத்திய பிறகே தர்ம சங்கடங்களை தொடர்ச்சியாக அனுபவித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். 

ஜெயலலலிதா இருந்தபோதே சில சூழல்களால் இருமுறை முதலமைச்சராக்கப்பட்டவர் பணிவான ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராக்கப்பட்டார். வர்தா புயல், ஜல்லிக்கட்டு விவகாரங்களை சிறப்பாக கையாண்டதால் ஓ.பன்னீர்செல்வம் பாரட்டப்பட்டார்.  இவ்வளவு சுறுசுறுப்பாக செயல்படுகிறாரே  என சிலர் மெச்சினர். அந்த சுறுசுறுப்புக்கு காரணம்,’’எப்போதும் தனது பதவி பறிக்கப்படலாம். கிடைத்த நாட்களுக்குள் மக்கள் மனதில் இடம்பெற்று விட்டால் இந்தப்பதவி நிச்சயம்’ என மனதில் பதித்துக் கொண்டார். குரங்குகள் கூட்டத்திற்கிடையே திண்பண்டத்தை கையில் வைத்து பாதுகாப்பது போன்ற ஒரு பதற்ற நிலையைப்போலத்தான் ஓ.பி.எஸின் முதல்வர் பதவியின் நிலைமையும் அப்போதிருந்தது.

அமைச்சர்கள் ‘முதலமைச்சரை மாற்றவேண்டும். சசிகலாவே அதற்கு தகுந்தவர்’ எனக் கூக்குரலிடத் தொடங்கினர். இப்போது வருவாய்த்துறை அமைச்சராக இருக்கும் உதயகுமார், ஓ.பி.எஸை மேடையில் வைத்துக்கொண்டே அவரை பதவி விலகக் கூறினார். ’’ஜெயலலிதாவையே முதலமைச்சராக்கியது எங்களது குடும்பம். ஆகையால் அக்காதான் முதல்வராக தகுதியானவர்’ எனக்கூறி பதவியை விட்டு விலக வலியுறுத்தினர் சசிகலாவின் உறவினர்கள். சசிகலா, பாதி ஜெயலலிதாவாக மாறி பதவியேற்க இருந்த ஓரிரு நாட்களுக்கு முன்னாள் ஜெயலலிதா நினைவிடத்தில் ’தர்மயுத்தம்’ தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம். 

சசிகலாவின் அடக்குமுறையில் சிக்கிக்கொண்டவர்கள் தன் பக்கம் படை திரள்வார்கள் என்பது அப்போது அவரது கணிப்பாக இருந்தது. சசிகலா குடும்பத்தினரிடம் சிக்கியுள்ள அ.தி.மு.க-வை மீட்க வந்த ரட்சகன்’’ என பிறர் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால், கூவத்தூர் விடுதி, ஓ.பி.எஸின்  தர்மயுத்தத்தில் முதல் இடியை இறக்கியது. சசிகலா சிறை செல்ல, உனக்குமில்லை, எனக்குமில்லை என்கிற கணக்கில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென முதலமைச்சராக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்ததில் ஓ.பி.எஸ் பக்கம் 11 எம்.எல்.ஏக்களே அணி திரண்டனர்.   

வரம் தந்தவர் தலையிலேயே கைவைத்தது போல அடுத்து, எடப்பாடி பழனிசாமி சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்தார். அப்போது தினகரன் பக்கம் 18 எம்.எல்.ஏக்கள் தாவினர். இதனால் எடப்பாடி ஓடிய முதல்வர் வண்டியில் அச்சாணி கழறும் நிலை. ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அணி இணைப்புக்கு இருதரப்பும் பரஸ்பரம் தூது விட்டு வந்தனர். ஆனால், ஆட்சியிலும், கட்சியிலும் இரு அணிக்கும் சரிநிகர் சமம் என்கிற ஓ.பி.எஸ் அணியின் கோரிக்கையை எடப்பாடி அணியால் முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாத சூழல். முரண்டு பிடித்தது ஓ.பி.எஸ் அணி. பள்ளத்தில் வீழ்வதைவிட பகையாளி கை பிடித்து நடப்பதே சிறந்தது என்பதை உணர்ந்த இரு அணிகளும் கைகோர்க்க முன் வந்தன. எடப்பாடி பதவி அப்படியே இருக்க, ஓ.பி.எஸ் துணை முதலமைச்சராக்கப்பட்டார். கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவி. ஆனாலும், அம்மா காலத்திலேயே முதலமைச்சராக உயர்ந்த நாம் மீண்டும் எப்படியாவது அந்தப் பதவியை அடைந்தே ஆக வேண்டும் என முட்டி மோதிப்பார்த்தார். ஆனால், அடுத்தடுத்து சோகங்களே மிஞ்சின. 

ஓ.பி.எஸுக்கும், அவரை நம்பி பின்னால் சென்ற ஆதரவாளர்களுக்கும் செக் வைக்க ஆரம்பித்தார் எடப்பாடி. நிகழ்ந்த சோகங்களை டெல்லியில் கூறச்சென்ற ஓ.பி.எஸை, வாசலுக்கு வந்த பிறகும் சந்திக்காமல் துரத்தினார் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். அதுவரை ஓ.பி.எஸ்-க்கு டெல்லி ஆசி இருக்கிறது என நம்பிக்கொண்டிருந்த எடப்பாடி தரப்பு அடுத்தடுத்த கட்டங்களில் ஓ.பி.எஸை ஓரங்கட்டும் வேலையை இன்னும் வேகமாக முன்னெடுத்தது. பதவியிலிருந்து விலகச் சொல்லி எடப்பாடி தரப்பு நெருக்க நிலைகுலைந்து போனார் ஓ.பி.எஸ்! இந்த நிலையில்தான் டி.டி.வி.தினகரனை சந்திக்க ஓ.பி.எஸ் தரப்பில் தூது விட்டதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன் ‘ஓ.பி.எஸ் ரகசியங்களை மறக்க மாட்டார் என நம்புகிறேன்.

. கடந்த ஆண்டு நான் திகார் சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு என்னை ஓ.பி.எஸ் சந்தித்தார். அடுத்து கடந்த மாதம் இறுதியில் கூட மீண்டும் என்னைச் சந்திக்க வேண்டும் என தூது விட்டார்’’ எனத் தெரிவித்துள்ளார் டி.டி.வி. இதுகுறித்து, ஓ.பி.எஸ் தரப்பில் உள்ள ஒருவரிடம் கேட்டோம். ‘’நம்பி இருந்த பாஜக.,வும் கைவிட்டு விட்டது. வந்து சேர்ந்த எடப்பாடி அணியிலும் ஓரம் கட்டும் முயற்சிகள் அதிகரித்து விட்டன. இதனால் அண்ணன் நிலைகுலைந்து போய்விட்டார். அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்த நிலையில், தினகரனுக்கு இருக்கும் எழுச்சியை கண்டு அவரிடம் போய்விடலாம் என்கிற எண்ணம் அவருக்குள் இருந்திருக்கிறது. 

ஆனாலும், ஒரு தயக்கம். அங்கிருந்து வந்த நம்மை மீண்டும் எப்படி டி.டி.வி.தினகரன் நடத்துவாரோ.. என்கிற யோசனையில் இருந்து வந்தார். இதுநாள் வரை நம்மை விட்டால் ஓ.பி.எஸ் எங்கே போய்விடப்போகிறார் என்கிற அலட்சியத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி அணி இதனையறிந்து பதறி விட்டது. அண்ணனுடன் இருக்கும் சில எம்.எல்.ஏக்களையும் சேர்த்து தான் எடப்பாடி ஆட்சி தப்பி வருகிறது. அண்ணனும் விலகி விட்டார் ஆட்சியை காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்த எட்ப்பாடி அணி மீண்டும் அண்ணனை அழைத்து, இனிமேல் அப்படி நடக்காது. சமமாக நடத்தப்படுவீர்கள். உங்கள் தரப்பு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அதனால், ஓ.பி.எஸ் இனி எடப்பாடி அணியிலேயே இருக்க முடிவெடுத்திருக்கிறார்’’ என்கிறார்கள்.  

இனி, ஓ.பி.எஸ் நம் பக்கம் வரமாட்டார் என்பதை உணர்ந்து கொண்டே அவர் தூது விட்டது குறித்து மீடியாக்களிடம் பேசத்தொடங்கி இருக்கிறது டி.டி.வி அணி. அ.தி.மு.க-வை சசிகலாவிடம் இருந்து மீட்டு முதல்வராகத் தொடராலாம் என தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ், இப்போது அரசியல் இடுக்குகளுக்குள் சிக்கி பலத்த சேதாரத்துடன் எடப்பாடியிடமே ஐக்கியமாகி விட்டார் என்கிறார்கள் பரிதாபத்துடன். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close