சுக்கு நூறாக உடையும் அ.தி.மு.க... எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 06 Oct, 2018 04:19 pm
split-up-a-d-m-k-edappadi-palanisamy-is-shocking

அ.தி.மு.க-வில் இருந்து அடுத்தடுத்து புதிய அணிகள் உருவாக இருப்பதால் எடப்பாடி பன்னீர்செல்வம் அதிர்ச்சியில் இருக்கிறார். 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க-வை ஆளாளுக்கு பாகம் பிரித்து வருகிறார்கள். ஏற்கனவே எடப்பாடி-ஓபிஎஸ் தலைமையிலான அ.தி.மு.க., டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க ஆகியவை பிரிந்தன. இவரை இரண்டும் தி.மு.க.வுக்கு சவால் விடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன. ஜெயலலிதா அண்ணன் மகள்  ’தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’யை ஆரம்பித்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார். சசிகலாவின் சகோதரர் திவாகரன், ’அண்ணா திராவிடர் கழகம்’ என புதுக்கடை விரித்துள்ளார்.  சமீபத்தில் தினகரன் தம்பி பாஸ்கரன் , ’அண்ணா எம்.ஜி.ஆர்.மக்கள் கழகம்’ என்ற பெயரில் களம் கண்டுள்ளார். 

இந்த வரிசையில் புதியதாக தனி ரூட்டில் கிளம்பத் தயாராகி வருகிறார் அ,தி.மு.க. முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிச்சாமி. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்த பழனிசாமி பா.ஜ.க.வுக்கு எதிராக கொடி பிடித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், ஆத்திரம் கொண்டு ஆவேச சாமியாகி அ.தி.மு.க.வில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 12ம் தேதி வெளியாக உள்ளது. 

ஜெயலலிதா மறைவுக்கு முன்னர் இருந்தது போல் அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி இருக்க வேண்டும் என்பது பழனிச்சாமியின் வாதம். இதனை வலியுறுத்தி, தொண்டர்களை சந்திக்க மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை அடுத்த மாதம் தொடங்க இருக்கிறார். 
இன்னொரு அணியை உருவாக்க இருக்கும் பழனிச்சாமியின் திட்டம் என்ன? ‘’இரட்டை தலைமை கட்சியை சீரழித்து விடும் என்பதால், அ.தி.மு.க.வுக்கு பொதுச்செயலாளர் தேவை என்பதே தொண்டர்களின் விருப்பம். அந்த பொதுச்செயலாளரை தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்பதும் அவர்கள் விருப்பம். அ.தி.மு.க.வில் உள்ள ஒரு லட்சம் கிளை செயலாளர்கள் என்னோடு தொடர்பில் உள்ளனர். கட்சிக்கு பொதுச்செயலாளர் வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம். அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டப் போகிறேன். ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் செல்லத் திட்டம். அவர்களை ஒன்றாகத் திரட்டி எனது வலிமையை நிரூபிப்பேன்” என்கிறார் கே.சி.பழனிச்சாமி. 

அதே போல சென்னை முன்னாள் மேயரான சைதை துரைசாமியை அ.தி.மு.க-வினர் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், ஆத்தரத்தில் இருக்கும் சைதையார் விரைவில் ஓர் இயக்கத்தை ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர் காலத்தில் கல்வித் தந்தைகளாக மாறிய சிலரை ஒருங்கிணைத்து உலக எம்.ஜி.ஆர் பேரவை நடத்தப்பட்டு வருகிறது. இதில், சைதை துரைசாமி, ஏசி சண்முகம், வி.ஐ.டி விஸ்வநாதன், மரியஸீனா ஜேப்பியார், நாஞ்சில் விண்செண்ட், குறிஞ்சி வேந்தன், முனிரத்னம், முருகு பத்மனாபன், நடிகை லதா உட்பட  பலரும் உள்ளனர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு உலக எம்.ஜி.ஆர் பேரவை சார்பாக பல விழாக்களை நடத்தி வருகின்றனர். இந்தப்பேரவையில் வெளிநாட்டில் வாழும் பெரும் செல்வந்தர்களும் இருக்கின்றனர். 

எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்த நமக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லை. நேற்று வந்தவர்கள் எல்லாம் ஆளும் நிலையில் இருக்கிறார்கள் என்கிற ஆதங்கத்தை ஒன்று கூடும்போது பகிர்ந்து கொள்கிறார்களாம். இந்த நிலையில்தான் கடந்த மாதம் இலங்கையில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார் சைதை துரைசாமி. அந்த விழாவிற்கு கல்வி அமைச்சர் செங்கோட்டையனும் கலந்து கொண்டார். அப்போது இருவரும் சந்தித்துக் கொள்ளும்போது, சைதையார், ‘’அண்ணே நாமெல்லாம் எம்.ஜி.ஆர் காலத்து ஆட்கள். இப்போது பதவியில் இருப்பவர்கள் நேற்று வந்தவர்கள். நம்மை கண்டுகொள்ளாமல் அவமதிக்கிறார்கள். ஏதாவது செய்தாக வேண்டும்’ என செங்கோட்டையனிடம் வருத்தப்பட்டாராம். ’நிலைமை இப்படியாகி விட்டது...என்ன செய்வது..?’ எனக்கூறியிருக்கிறார் செங்கோட்டையன். 

தற்போதைய நிலையில் சைதைதுரைசாமி, அ.தி.மு.க-வில் இருந்து ஓரம் கட்டப்பட்டவர்களை தொடர்பு கொண்டு வருகிறாராம். புதிய இயக்கம் காண முயற்சி செய்து வரும் அவர், அதற்காக தனி பத்திரிக்கை தொடங்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளார் எனக்கூறப்படுகிறது. 
இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட எடப்பாடி பழனிசாமி மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close