அந்தர் பல்டி.... நடிகர் விஜயிடம் வாய்ப்புக்கேட்கும் நாஞ்சில் சம்பத்..!?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 06 Oct, 2018 06:22 pm
nanjil-sampath-in-with-a-chance-to-actor-vijay

நாஞ்சில் சம்பத் ஒரு காலத்தில் ம.தி.மு.க-வின் பீரங்கிப்பேச்சாளர். ஆனால், ம.தி.மு.க மேடையை விட்டு கீழே இறங்கிய சம்பத் அதிமுகவில் அடைக்கலம் ஆனார். ஜெயலலிதா என்ற ஆளுமை உடனிருந்தால் வைகோவை வகுந்தெடுத்துப்பேசினார். ‘எனது வளர்ச்சியை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை’ எனக் கர்ஜித்தார்.  

மதிமுகவின் மேடையை விட்டு எப்போது இறங்கினாரோ அப்போதே அவர் நாக்கு தடுமாற ஆரம்பித்துவிட்டது. அவர் பேசியதை அவரே மறுத்து பேசும் அளவுக்கு நகைச்சுவை நாயகனாக மாறி விட்டார். நாஞ்சில் சம்பத், இன்னோவா சம்பத்தாக மாறினார். அதிமுகவில் ஜெயலலிதா இருக்கும் வரை அவர் பெரிய கெளரவம் அடைந்ததாக தெரியவில்லை. வழக்கமாக ஒரு கட்சிக்கு கொள்கைப்பரப்பு செயலாளர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு  அதிமுக  சசிகலா வசமானது. அதன்பிறகு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ‘மெளன விரதம்’ கடைப்பிடித்தார்.

’ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருக்கிறது’ எனத் திடீர் பாய்ச்சல் காட்டினார்.  சசிகலா பொதுச்செயலாளர் பதவியை ஏற்றதும் “தவிடு நெல்லாகிவிட்டது… வான்கோழி மயிலாகிவிட்டது!”  ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள், 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 135 சட்டப்பேரவை உறுப்பினர்கள், சபாநாயகர், அமைச்சர்கள், மேயர்கள் என அதிகாரத்தின் உச்சம் தொட்ட அனுபவசாலிகளைக்கொண்ட ஒரு பெரிய அமைப்பில் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க சசிகலாவுக்கு மட்டுமே தகுதி உண்டு என்று பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவெடுத்து இருப்பது 2016-ம் ஆண்டின் மிகப்பெரிய சோகம். இந்த சோகத்தில் நான் என்னைக் கரைத்துக் கொள்ள விரும்பவில்லை. அ.தி.மு.கவை விட்டு விலகுகிறேன்’’ என்றார்.

சில நாட்களிலேயே பல்டி அடித்தார். 2017 ஆண்டு ஜனவரி மாதம் சசிகலாவை சந்தித்தார். அவருக்கு கண்கள் பனித்தன. மனம் இனித்தது. ஆகவே அவர் சசிகலா தலைமையிலான அதிமுகவை ஏற்றுக் கொண்டார். பிறகு அவர் சிறைக்கு செல்லவே டி.டி.வி.தினகரனுடன் இருந்தார்.  ‘காலம் தந்த தலைவன் டி.டி.வி.தினகரன்’. ‘வசீகரமானவர்’, ‘அதிமுகவை காப்பற்ற கிடைத்த ஒரே தலைவன்’ எனக்கூறி சிலாகித்தார்.
அடுத்து டி.டி.வி.தினகரன் அ.ம.மு.க கட்சி தொடங்கியபோது அதில் ‘அண்ணா பெயர் இல்லை. திராவிடம் இல்லை. ஆகவே அதை ஏற்க முடியாது’ என விலகினார். ‘டி.டி.வி.தினகரன் கொள்கை திரவியத்தை கொட்டிக் கவிழ்கிறார். பச்சைப் படுகொலை பண்ணப்பார்க்கிறார். குலநாசம் செய்கிறார்’  குற்றம்சாட்டினார்.

அரசியலை விட்டே விலகுவதாகக் கூறிய அவர், அடுத்து மீண்டும் ம.தி.மு.கவில் இணையப்போவதாக பேச்சு எழுந்தது. தி.மு.க-வுக்கு தூது விடுவதாகக் கூறினர் சிலர். ஆனால், சென்று சேர்ந்த இடம் சசிகலாவின் அண்ணன் திவாகரன் ஆரம்பித்துள்ள அண்ணா திராவிடர் கழகத்தில்... நாஞ்சில் சம்பத்தை கட்சியில் சேர்ப்பதற்காக தனது கட்சிப்பெயரில் அண்ணாவையும், திராவிடத்தையும் சேர்த்தாரா திவாகரன். அல்லது அண்ணாவும், திராவிடமும் கட்சிப்பெயரில் இருப்பதால் நாஞ்சில் சம்பத் சேர்ந்தா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

இப்போது கட்சியே ஆரம்பிக்காத நடிகர் விஜய்க்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்து விட்டார் நாஞ்சில் சம்பத். ‘’கமல்ஹாசனால் களத்தில் இறங்கி சமாளிக்க முடியவில்லை. ரஜினிகாந்த் களத்தில் இறங்கவே யோசிக்கின்றார். விஜய் கூறிய கருத்துக்களால் இளைஞர்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. விஜய்க்கு முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக தெரிகிறது. அவர் தனது ரசிகர்களை எப்படி பயன்படுத்தபோகிறார் என்பதை பொறுத்தே தமிழக அரசியலின் அடுத்தகட்டம் தீர்மானிக்கப்படும். விஜய் அரசியலில் வீதிக்கு வந்தால் பலருக்கு பீதி உருவாக்கும் என்று நாஞ்சில் சம்பத் புகழ்ந்துள்ளார். 

இந்தப் பேச்சை கவனித்த அரசியல் ஆர்வலர்கள், ‘நாஞ்சில் சம்பத்திற்கு நடிப்பாசை வந்து விட்டது. ரஜினி, கமலிடம் வாய்ப்புக்கேட்டு கொடுக்காததால் அவர்களை விமர்சனம் செய்கிறார். விஜயின் அடுத்த படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்க இப்போது தூபம் போட்டுள்ளார். அவரும் கொடுக்காத பட்சத்தில் அடுத்த முறை கடுமையாக விஜயை திட்டி விமர்சிப்பார்’’ என்கிறார்கள் நகைத்தபடியே..!

அப்போது நாஞ்சில் சம்பத்... இப்போது இன்னோவா சம்பத்... அடுத்து நடிகர் சம்பத்..?   

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close