அடுத்த தேர்தலில் கூட்டணி... மாயாவதியை விடாமல் துரத்தும் ராகுல்..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 06 Oct, 2018 06:27 pm
will-come-together-for-2019-polls-rahul-gandhi-on-tie-up-with-mayawati

‘பிள்ளையாரை பிடிக்க நினைத்து குரங்காய் முடிந்த கதையாக’  ஆகி விட்டது காங்கிரஸ் கட்சியின் தற்போதைய  நிலை. நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் திரட்டி பாஜகவுக்கு எதிராக, மக்களவை தேர்தலில் ‘மெகா’ கூட்டணி அமைக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கனவு.

கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவி ஏற்ற தினத்தன்று அதற்கான தருணம் கூடி வந்தது. மேற்கு வங்கத்தில் எலியும், பூனையுமாக இருக்கும் மம்தாவையும், சீதாராம் எச்சூரியையும் ஒரே மேடையில் பார்க்க முடிந்தது.‘பாஜக இனி வீழ்ந்தது’ என அரசியல் நோக்கர்கள் ஊடகங்களில் குதூகலமாகப் பதிவு செய்து கொண்டிருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் தற்போது, ஆளுக்கொரு திசையில் பயணம் செய்யத் தொடங்கி விட்டன.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது மாயாவதியுடன் இணைந்து போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. சில நிர்பந்தங்களால், காங்கிரல் கட்சியை உதறித் தள்ளிவிட முடிவெடுத்துள்ளார்  மாயாவதி.

 

சத்தீஷ்கர் மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அஜீத் ஜோகியுடன் கரம் கோர்த்துள்ள மாயாவதி, மத்தியப் பிரதேசத்தில் தனித்து களம் இறங்க முடிவெடுத்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்  கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை திட்டமிட்டிருந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அடுத்த படியாக அதிக எண்ணிக்கையிலான  நாடாளுமன்ற உறுப்பினர்களைக்  கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரம் திகழ்கிறது.  அங்கும் சிக்கல் ஆரம்பித்து விட்டது.

ரபேல் போர் விமான விவகாரத்தில் மோடியை ராகுல்காந்தி வறுத்து எடுத்து வரும் நிலையில் , மோடிக்கு  ஆதரவாக கருத்து கூறி காங்கிரசை அதிர வைத்துள்ளார் சரத்பவார். தனியார் டிவிக்கு பேட்டி அளித்த பவார், ’’ரபேல் விமான பிரச்சினையில் மோடி மீது சந்தேகம் கொள்ளக் கூடாது’ என நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி கருத்து தெரிவிக்க, அவருக்கு ’சபாஷ்’ சொல்லி உள்ளார் பாஜக தலைவர் அமித்ஷா.
இந்த நிலையில், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இணையும் என ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

.

சட்டமன்றத்தேர்தலில் கூட்டணிக்கு வர மறுத்த மாயாவதி மக்களவை தேர்தலில் கூட்டணிக்கு வருவார் என ராகுல் நம்புவதற்கு காரணம் மாயாவதியில் சமீபத்திய பேச்சு.  ‘’சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் எங்களைத் தங்கள் அணியில் சேர்க்கவே விருப்பமாக உள்ளார்கள்.

ஆனால் மத்தியப் பிரதேசத்தில் திக் விஜய் சிங் போன்றவர்களும், மற்ற மாநில காங்கிரஸ் உள்ளூர் தலைவர்களும்தான் இந்தக் கூட்டணியைத் தடுக்கிறார்கள்” என மாநிலத் தலைவர்கள் மீது குற்றம்சாட்டினார். இதனையடுத்து பேசிய ராகுல் காந்தி, “மத்தியப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் கருதவில்லை எனவும்,

மாநிலத் தேர்தலில் ஏற்படும் கூட்டணி வேறு, நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட உள்ள கூட்டணி வேறு. மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். அதேபோல், மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தங்கள் கூட்டணியில் இணையும்’’ என்று ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close