தேவேந்திரகுல இளைஞர்களுக்கு டாக்டர் கிருஷ்ணசாமியின் பத்து கட்டளைகள்

  Dr.தர்மசேனன்   | Last Modified : 08 Oct, 2018 01:56 pm
puthiya-tamilaham-party-president-dr-krishnasamy-s-rousing-call-to-youths-of-devendrakula-vellalar-community

நேற்று முன்தினம் திருச்சியில் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி மாநாடு நடைபெற்றது. அதில், அக்கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி, தேவேந்திரகுல இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நெறி குறித்து பத்து கட்டளைகளை இட்டுள்ளார். கட்சித் தொண்டர்களை தங்களது வளர்ச்சிக்காக மட்டுமே பெரும்பாலான தலைவர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் வாழ்வு மேம்படவும், சிறக்கவும் தேவேந்திரகுல வேளாள சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அறிவுரை கூறி அதை தனது உத்தரவாக டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ளது தமிழக அரசியல் சூழலில் வித்தியாசமானதாகவும், வியப்பானதாகவும் உள்ளது. அவர் விடுத்துள்ள கட்டளைகளை நம் வாசகர்களின் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம்.

தேவேந்திரகுல இளைஞர்களுக்கு பத்துக் கட்டளைகள்!

1. ஒவ்வொரு தேவேந்திரகுல இளைஞனும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்; கல்வி என்பது வேலை வாய்ப்பைப் பெறுவதற்காக அல்ல; வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் உன்னதமான வாழ்க்கைத் திறனை வளர்த்துக் கொள்வதற்கு என்ற அடிப்படைத் தத்துவத்தை உணர்ந்து ஒவ்வொரு இளைஞனும் குறைந்தது மூன்று வேலைகளைச் செய்யும் திறனாளிகளாகத் தங்களை இளம் வயதிலேயே தயார்படுத்திக் கொள்ளவும், மூன்று மொழிகளைப் பேசவும், தாய்மொழியாம் தமிழ்மொழியை பிழையின்றிப் பேசவும், எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும் என தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்களை புதிய தமிழகம் இளைஞரணி மாநாடு வலியுறுத்துகிறது.

2. தீயப் பழக்கவழக்கங்களான மது, புகை, போதை மருந்துகளை உபயோகித்தல், தற்காலிகமாக மட்டுமல்ல, மரபு அணுக்கள் மூலம், அடுத்த தலைமுறைக்கும் அந்த அடிமைப் பழக்கவழக்கங்களும், பாதிப்புகளும் கடத்திச் செல்லப்படும் என்பதை உணர்ந்து, அவற்றை அறவே விட்டொழிக்கவும், திரைப்பட மாயை, சூதாட்டம் ஆகியவற்றிலிருந்து வெளிவரவும், இவைகுறித்து சமூக மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் தேவேந்திரகுல இளைஞர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

3. அகத்தூய்மையும், புறத்தூய்மையும் சமூக விடுதலையின் மிகப்பெரிய அம்சங்களாகும். எனவே உடல், உள்ளம், வீடு, வீதி, ஊர் என அனைத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும், தூய்மையைப் பேண விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளவும் தேவேந்திரகுல இளைஞர்களை புதிய தமிழகம் இளைஞரணி மாநாடு கேட்டுக் கொள்கிறது.

4. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற உயரிய முதுமொழியை உயர்மொழியாகக் கருதித் தங்களது உணவு, உடற்பயிற்சி, மனத்திடப் பயிற்சி ஆகியவற்றில் இளம் பிராயத்திலே கவனம் செலுத்த வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

5. 18 வயதைத் தாண்டிய எந்தவொரு இளைஞனும் பெற்றோருக்கு சுமையாக இருக்கக்கூடாது. சுயமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக்கூடிய வகையில் செயல்பாடுகளை வகுத்துக்கொள்ள வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

6. ஆண்மகனாக இருந்தால் 27 வயதிற்குப் பின்பும், பெண்மகளாக இருந்தால் 24 வயதிற்குப் பின்பும், திருமணம் செய்து கொள்ளவும், அதுவரையிலும் தங்களை சுயமாக நிலைநிறுத்திக் கொள்ள ஆயத்தப்படுத்திக் கொள்ளவும் புதிய தமிழகம் இளைஞரணி மாநாடு கேட்டுக் கொள்கிறது.

7. இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக்கூடாது; இரண்டு குழந்தைகளுக்கு இடையே குறைந்தது, இரண்டு வருட இடைவெளி இருக்க வேண்டும். இக்கட்டுப்பாடுகளும், ஒழுக்கங்களுமே நமது குழந்தைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும்.

8. 18 வயது வரையிலும் குழந்தைகளின் படிப்பு மட்டுமின்றி, உலகம் போற்றும் பண்புகளை வளர்த்திடவும், அக்கறை செலுத்திடவும் வேண்டும்.

9. 18 வயதிலிருந்து 27 வயது வரையிலும் உள்ள இளைஞர்களும், இளம்பெண்களும் குறைந்தது ஒரு வருடமாவது தேவேந்திரகுல சமூக வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, புதிய தமிழகம் கட்சியையும், சமரசமில்லா போராளி டாக்டர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல்களையும் அனைத்து சமூக மக்கள் மத்தியிலும் கொண்டு செல்ல, கிராமங்களில் களப்பணி ஆற்றிட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

10. சுய ஒழுக்கம், கட்டுப்பாடுகள், திறன்களில் மற்றவர்களைக் காட்டிலும் மேம்படவும் நல்ல குணங்களால் இம்மண்ணை ஆளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது என டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close