கீழடி அகழாய்வு குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணனே அறிக்கை தயாரித்திட வேண்டும்: வேல்முருகன் வலியுறுத்தல்

  Newstm Desk   | Last Modified : 08 Oct, 2018 05:28 pm
tamizhaga-vazhvurimai-katchi-chief-velmurugan-condemned-tn-govt-over-keeladi-issue

கீழடி அகழாய்வு குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணனே அறிக்கை தயாரித்திட அ.தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் (அக்.8) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கீழடியில் 2014ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட அகழாய்வில் தொன்மைக் கால தமிழர்களின் நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அகழாய்வில் கிடைத்த பொருட்களைக் கொண்டு, தமிழர்களின் இந்த நாகரிகம் உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் என்று தெரியவந்துள்ளது. இந்த அகழாய்வுக்கு நாடறிந்த, புகழ் பெற்ற தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையேற்றிருந்தார்.

தமிழரின் இந்த மேன்மையைத் தாங்கிக்கொள்ள முடியாத பிரதமர் மோடியின் சனாதன அரசு, கீழடியில் கிடைத்த பழம்பொருட்களுக்குப் பொறுப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணனை அந்தப் பொறுப்பிலிருந்தே தூக்கியது. அது மட்டுமல்லாமல் இப்போது, கீழடி அகழ்வாய்வு அறிக்கையையும் அகழாய்வை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணனைத் தயாரிக்கவிடாமல் தடுத்து, அடாவடியாக, பெங்களூரு தொல்லியல் துறை அலுவலரிடம் தயாரிக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.

இது தமிழர்கள் மீது மத்திய அரசுக்கும் பா.ஜ.கவுக்கும் எந்த அளவுக்கு வெறுப்புணர்ச்சி உள்ளது என்பதை பறைசாற்றுகிறது; அந்த வெறுப்பில் அவிந்து, அஞ்சி அஞ்சி நடுநடுங்கிச் சாவதையும் புலப்படுத்துகிறது.

அகழாய்வு செய்த அமர்நாத் ரமகிருஷ்ணனை அதற்கான அறிக்கையை தயாரிக்கவிடாமல், அதற்குத் தொடர்பில்லாத தொல்லியல் துறை அலுவலரிடம் தயாரிக்கச் சொல்லியிருப்பது குறித்து சமூகவியலாளர்களும் அரசியல் பார்வையாளர்களும் கவலை தெரிவிக்கிறார்கள்.

மாஃபா பாண்டியராஜன், கீழடி அகழாய்வுப் பொருட்களைக் காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றார். அதோடு, சம்பந்தமே இல்லாமல், தொல்லியல் துறையில் 45 விழுக்காடு தமிழர்கள்தான் இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார். ஆனால் அவர், அகழாய்வு அறிக்கையை அமர்நாத் ரமகிருஷ்ணனை தயாரிக்கவிடாமல், தொல்லியல் துறை அலுவலரிடம் தயாரிக்கச் சொன்னது குறித்து எதுவும் சொல்லவே இல்லை. இது ஏன் என்ற கேள்விக்கு விடை அவர் தந்தாக வேண்டும்.

நாம் அறிகிறோம்; அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் அறிய வேண்டும், உலகின் தொன்மை நாகரிகமாம் தமிழர் நாகரிகம் கீழடியில் வெளிப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாததுதான், அந்த அறிக்கையை தொல்லியல் அதிகாரியிடம் தயாரிக்கச் சொல்லியிருப்பது என்பதைப் பறைசாற்றுகிறது.

எனவே தமிழக அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி அரசும் இதற்குத் துணைபோனது என்ற பழிச்சொல் வராதவண்ணம் இதனைத் தடுத்துநிறுத்தி, அமர்நாத் ராமகிருஷ்ணனே அறிக்கை தயாரித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close