முதலமைச்சர் - பிரதமர் சந்திப்புக்கான கைமாறா? கவர்னரின் பல்டி :   மு.க.ஸ்டாலின்

  சுஜாதா   | Last Modified : 10 Oct, 2018 06:26 am
m-k-stalin-s-statement-on-tn-governor-banwarilal-purohit-s

முதலமைச்சர் - பிரதமர் சந்திப்புக்கான கைமாறாக அ.தி.மு.க. அரசின் ஊழல்களை மூடி மறைக்கிறார் கவர்னர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

இது குறித்து  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“அ.தி.மு.க. ஆட்சியில் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு கைமாறி தான் துணை வேந்தர் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளது” என்று அக்டோபர் 6-ந்தேதி உயர்கல்வி கருத்தரங்கம் ஒன்றில் பகிரங்கமாக குற்றம் சாட்டிய தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 3 நாட்கள் கழித்து திடீரென்று, “ஊழல் நடந்ததாக நான் எதுவும் கூறவில்லை” என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்துவிட்டு திரும்பியவுடன், கவர்னர் இந்த அறிக்கையை விட்டது ஏன்? ஊழல் அ.தி.மு.க. அரசையும், இந்த துணைவேந்தர் நியமனங்களைச் செய்த உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரையும் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டதோ என்ற உள்நோக்கம் அந்த மறுப்பறிக்கையில் எதிரொலிக்கிறது.

“கவர்னர் பதவியில் உண்மையாக இருப்பேன்” என்று அரசியல் சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளவர் இப்போது ஊழல்வாதிகளை காப்பாற்ற மறுப்பறிக்கை விடும் நிலைக்கு தள்ளப்பட்டது முதலமைச்சர் - பிரதமர் சந்திப்புக்கான கைமாறா? என்ற மிகப்பெரிய சந்தேகம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

“ஊழல் நடக்கிறது” என்று தகவல் வந்தாலே அதன் மீது நடவடிக்கை எடுப்பதுதான் கவர்னர் பதவியில் இருப்போரின் கண்ணியத்திற்கு அடையாளம். இந்த விஷயத்தில் கல்வியாளர்கள் தன்னிடம் துணைவேந்தர் பதவி நியமனங்களுக்கு ஊழல் நடக்கிறது என்று கூறியதாக கவர்னரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அப்படியிருந்தும் “துணைவேந்தர் நியமன ஊழல்” பற்றி முதலமைச்சர் பிரதமரை சந்திப்பதற்கு முன்னும் பின்னுமாக இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருப்பது கவர்னர் பதவியின் மீது வைத்துள்ள மாண்பை, மரியாதையை சிறுமைப்படுத்தியிருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அப்படியொரு நெருக்கடி எங்கிருந்து கவர்னருக்கு வந்தது?.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அ.தி.மு.க. அரசு நீடித்தால் பா.ஜ.க.வின் அஜெண்டாவை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று மத்திய பா.ஜ.க. அரசும், அந்த அரசால் ஆட்டுவிக்கப்படும் கவர்னரும் நினைத்தால் தமிழ்நாட்டு மண் அதற்கு ஒருபோதும் இடம் தராது என்பது மட்டுமல்ல ஜனநாயக ரீதியாக மக்களின் கடும் கோபத்தை சந்திக்க வேண்டியது வரும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

ஊழல் அ.தி.மு.க. அமைச்சர்களையும், முதலமைச்சரையும், துணைவேந்தர் பதவிக்கு கோடிகளை பெற்றவர்களையும் காப்பாற்றும் முனைப்பில் இருந்து விலகி, அ.தி.மு.க. அரசின் மீது கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஊழல் புகார்கள் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத் துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

முதலமைச்சர் பிரதமரை சந்தித்துவிட்டார் என்பதற்காக அ.தி.மு.க. அரசின் ஊழல்களை மூடி மறைக்கும் நோக்கத்தில் கவர்னர் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுவிடாமல் தடுத்து தன் பதவிக்குரிய கண்ணியத்தை காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் கவர்னருக்கு இருக்கிறது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close