எட்டி விரட்டும் எடப்பாடி... பதற்றத்தில் ஓ.பி.எஸ்... பரிதவிப்பில் தம்பித்துரை..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 11 Oct, 2018 12:49 pm
edappadi-strict-in-the-select-of-candidates

டெல்லியில் மோடியை சந்தித்து வந்த பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளில் அதிக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விட்டன என்கிறார்கள் அவரைச் சுற்றியிருக்கும் ஆதரவாளர்கள். 

டெல்லி பயணம் அரசியல் ரீதியாக வெற்றி அடைந்திருப்பதாகத் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியான தளவாய் சுந்தரத்திடம் மகிழ்ச்சியாகச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. தளவாயை ’அண்ணே..’ என்றுதான் அழைப்பார் எடப்பாடி பழனிசாமி. பிரதமருடனான சந்திப்பு பற்றி தளவாயிடம் பேசும்போது, ‘அண்ணே... எல்லாம் நல்லபடியாவே நடக்கும்’ என்று கூறியிருக்கிறார். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சமீபத்தில் மாவட்ட ரீதியாக குமரி மாவட்டம், நாகர்கோவிலில் கடைசியாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடந்தபோது வரவேற்புரையாற்றியவர் தளவாய் சுந்தரம்.

அப்போது அவர், ‘இனிவரும் தேர்தலில் கன்னியாகுமரியில் அதிமுகவோ அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் கட்சியோதான் ஜெயிக்கும்’ என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை வைத்துக்கொண்டே பேசினார். அதன்பிறகு தன் பேச்சு பற்றி எடப்பாடியிடம் குறிப்பிடும்போது,’நாம ஸ்டேட் பவர்ல இருக்கும் கட்சி. ரொம்பல்லாம் பணிஞ்சு போகக் கூடாது’ என்று சொல்லியிருக்கிறார். அதை மனதில் வைத்துதான் பிரதமருடனான சந்திப்பு பற்றி தளவாயிடம் புன்னகை பூத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி’ என்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை வந்ததும் வரும் மக்களவைத் தேர்தல் பற்றிய ஆலோசனைகளில் இறங்கிவிட்டார் எடப்பாடி. ‘தமிழகத்தில் 39, புதுச்சேரி 1 என நாற்பது தொகுதிகளில் போன முறை அம்மாவை பிரதமராக முன்னிறுத்தி 37 இடங்கள்ல ஜெயிச்சோம். இந்த முறை அந்த அளவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆனா 15 இடத்துலயாவது ஜெயிச்சாதான் நமக்கு மதிப்பு. இல்லேன்னா அரசியல் மாற்றங்கள் என்ன வேணும்னாலும் நடக்கும்’ என்று தனது நெருக்கமான வட்டாரத்தில் ஆலோசித்திருக்கும் எடப்பாடி, ‘இப்ப இருக்கிற எம்.பி.க்கள் மேல அதிருப்தி அதிகமா இருக்கறதா ரிப்போர்ட் வந்திருக்கு. அதனால முக்கால்வாசி தொகுதிகள்ல புது நபர்களைத்தான் வேட்பாளரா நிறுத்தப் போறோம். எல்லாருக்கும் கட்சிதான் செலவு பண்ணும். ஏன்னா வர்ற எலக்‌ஷன்ல ஜெயிக்குறது வேட்பாளருக்கு முக்கியமோ இல்லையோ நமக்கு முக்கியம்’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார் எடப்பாடி.

அதாவது, மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் எல்லாரும் தனது தேர்வாக இருக்க வேண்டும் என்பதே எடப்பாடியின் திட்டம். அதனால்தான் புது வேட்பாளர்கள் என்ற கருத்தைக் கையில் எடுத்திருக்கிறாராம். இந்த வகையில், கரூர் தொகுதி எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரைக்கு சீட் கொடுக்கக் கூடாது என முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி. காரணம், சமீபகாலமாக பாஜகவை விமர்சித்து வருகிறார். அத்தோடு டி.டி.வி.தினகரன் அணியுடன் தம்பித்துரை ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நம்புகிறாராம் எடப்பாடி. அத்தோடு சீனியரான அவரை ஆட்சி அதிகாரத்தில் வைத்துக் கொண்டால், அது ஏதாவது ஒரு வகையில் தனக்கு எதிராக திரும்பும் எனக் கணக்குப்போடும் எடப்பாடி, இம்முறை தம்பித்துரைக்கு சீட் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாகக் கூறப்படுகிறது.

அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு சீட் கொடுக்கக்கூடாது. அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டவும் கவனமாக காய்நகர்த்தி வருகிறார் எடப்பாடி. இதே வரிசையில் சேலம் தொகுதி பற்றியும் தீவிர ஆலோசனை நடத்தியிருக்கிறார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் அதிமுகவின் பன்னீர்செல்வம் ஜெயித்தார். அப்போது திமுகவும், காங்கிரஸும் தனித்தனியாக நின்றன. இம்முறை திமுக -காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் பட்சத்தில் சேலத்தில் காங்கிரஸ் சார்பில் மோகன் குமாரமங்கலம் போட்டியிடத் தீவிரமாக முயன்றுவருகிறார். போன தேர்தலில் தனித்து நின்றவர் இவர்.

இம்முறை திமுக கூட்டணியில் தனக்கே சீட் கிடைக்கும் என்று அதற்கான வேலைகளை டெல்லிவரை முடுக்கிவிட்டு வருகிறார். இதுபற்றியெல்லாம் தனது சேலம் மாவட்டக் கட்சி நிர்வாகிகளிடம் விவாதித்த எடப்பாடி சேலம் தொகுதிக்கு யார் வேட்பாளர் என்ற ஆலோசனையிலும் இறங்கிவிட்டாராம்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close