ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ் சந்திப்பு... தனிக்கட்சி தொடங்கத் திட்டம்!? அ.தி.மு.க-வில் பரபரப்பு!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 11 Oct, 2018 02:58 pm
ops-meeting-with-supporters-project-to-start-new-party

முதல்வர் எடப்பாடி பழனிசாமி- பிரதமர் மோடியின் சந்திப்பு  ஓ.பன்னீர் கூடாரத்திலும் ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், ஓ.பன்னீர்செல்வம்  அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தர்மயுத்தம் நடத்தியபோது 24 மணி நேரத்தில் தூங்கும் நேரம் தவிர மீத நேரங்களில் எல்லாம் தனது ஆதரவாளர்களுடனேயே இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், அணிகள் இணைந்து துணை முதல்வரான பிறகு தனது ஆதரவு வட்டத்தில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள்கூட அவரை எளிதில் சந்திக்க முடியாத நிலை இருந்தது. அவர்களுக்கே இந்த நிலை என்றால் அவரது அணியில் இருக்கும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளைக் கேட்கவே வேண்டாம். எப்போது கிரீன்வேஸ் ரோடு போனாலும் ஓ.பன்னீர்செல்வத்தை பார்க்க முடியாமலே திரும்பினார்கள். இந்த நிலைமை தொடரவே அது அவரது ஆதவாளர்களுக்குள் விரக்தியான புலம்பல்களாக வெடிக்கத் தொடங்கியது.

டி.டி.வி.தினகரனை சந்தித்த விவகாரம் அண்மையில் பெரிதாக வெடிக்க, தனது ஆதரவு நிர்வாகிகளிடம் கூடச் சொல்லாமல் தன்னை சந்தித்தது ஏன் என்று தினகரன் கேள்வி எழுப்பியிருந்தார். இதுவும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களைச் சுணக்கம் அடையச் செய்தது. இதையெல்லாம் தாண்டி எடப்பாடியின் டெல்லி விசிட்டில் தனக்கு எதிரான விஷயங்களும் இருக்கின்றன என்பதை தனது டெல்லி தகவல்கள் மூலம் அறிந்த பன்னீர்செல்வம் மீண்டும் தனது ஆதரவாளர்களைப் பழையபடி சந்திக்க ஆரம்பித்திருக்கிறார்.

முன்னர் நேரம் இல்லை என்று மறுக்கப்பட்டவர்கள் இப்போது, ’அண்ணன் வீட்லதான் இருக்காரு. எப்ப வர்றீங்க?’ என்று ஓபிஎஸ் இல்லத்தில் இருந்து அழைக்கப்படுகிறார்கள். கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் அவரது வீட்டில் கார்களில் மட்டுமல்ல... ஆட்டோக்களில் வருபவர்கள்கூடப் பன்னீர்செல்வத்தை கடந்த சில நாட்களாக சந்திக்க முடிகிறது. சென்னையில் இருந்தால் இரவு ஒன்பதரை, பத்து மணி வரைகூட ஆதரவாளர்களைப் பார்க்கிறார். சந்திக்க வருகிறவர்களிடத்தில், ‘எல்லாருக்கும் நல்லது பண்ணலாம்னுதான் நினைக்கிறேன். சூழல் இப்படி இருக்கு’ என்று சில வார்த்தைகளையும் பேசுகிறாராம். கட்சியினர் மனுவோடு வந்தால் அதையெல்லாம் வாங்கி, ‘நிச்சயம் பண்ணச் சொல்றேன்’ என்கிறாராம்.

‘துணை முதல்வர் ஆனதிலிருந்து அவர் தன் பலத்தை நிரூபிக்கப் பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கலை. இப்போ அதற்கான நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறாரு. இந்த நெருக்கடியில இருந்து வெளிய வர தனக்கு மக்கள் செல்வாக்கு இருக்குங்கறதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கறதா நினைக்கிறாரு. அதனால்தான், மீண்டும் இப்போது ஆதரவாளர்களோடு அதிக நேரம் செலவழிக்க ஆரம்பிச்சிட்டாரு. இத்தனை நாள் இல்லாத மாற்றம் அண்ணனிடம் இந்த சில நாட்களில் வந்திருக்கிறது’ என்கிறார்கள் பன்னீர் ஆதரவாளர்கள். தற்போதைய நிலையில் எடப்பாடி தன்னை ஒதுக்குவதை உணர்ந்துள்ள ஓ.பி.எஸ், தினகரனின் பக்கமும் போக இயலாத நிலையில் இருக்கிறார். அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கிறது. இந்த நிலையில், அவர் தனது ஆதரவாளர்களைத் திரட்டி புதிதாக தனி இயக்கம் தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறார்கள்.  

 ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன் அவரது ஆதரவாளர்கள் அதிகமாகத் தென்பட ஆரம்பித்திருப்பது எடப்பாடிக்கும் டெய்லி ரிப்போர்ட்டாகச் சென்று கொண்டிருக்கிறதாம்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close