• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

தனியாரிடம் இருந்து நிலக்கரியை வாங்குவது அ.தி.மு.க அரசின் கையாலாகாதத்தனம்: ஸ்டாலின் கடும் தாக்கு!

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2018 06:27 pm

mk-stalin-condemned-admk-govt

அதிக விலை கொடுத்து அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியை வாங்குவது அ.தி.மு.க அரசின் கையாலாகாத்தனமாகத் தெரிகிறது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (அக்.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெண்டர் விடாமல் அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து, 150 சதவீதம் அதிக விலை கொடுத்து ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய அ.தி.மு.க அரசு, கொள்ளை முடிவு எடுத்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து அதானி என்டர்பிரைசஸ் இறக்குமதி செய்யும் நிலக்கரியானது டன்னுக்கு 5008.45 ரூபாயும், ஸ்ரீ ராயல் சீமா என்ற கம்பெனிக்கு டன்னுக்கு 4936.25 ரூபாயும், யாசின் இம்பெக்ஸ் இந்தியாவுக்கு டன்னுக்கு 5 ஆயிரத்து 98 ரூபாயும் கொடுப்பதற்கு அதிமுக அரசு ஒப்புக்கொண்டு, டெண்டர் விட வேண்டும் என்ற விதிகளையும் தளர்த்தி கொள்முதலில் ஈடுபடுகிறது என்ற செய்தி இந்த அரசு உறக்கமின்றி ஊழல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.

கோல் இந்தியா நிறுவனத்திடமிருந்து ஒரு டன் நிலக்கரி 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் நிலையில், அதிக விலை கொடுத்து அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியை வாங்குவது அ.தி.மு.க அரசின் கையாலாகாத்தனமாகத் தெரிகிறது.

சில தினங்களுக்கு முன்பு மின்துறை அமைச்சர் தங்கமணி மின்பகிர்மானக் கழகத்திடம் போதிய நிலக்கரி கையிருப்பு இருக்கிறது. நிலக்கரி பற்றாக்குறை ஏதுமில்லை என்று கூறினார். ஆனால் முதல்வரோ நிலக்கரி பற்றாக்குறை இருக்கிறது. உடனே நிலக்கரி ஒதுக்கீட்டை தமிழகத்திற்கு அதிகரியுங்கள் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினார். மின்பகிர்மானக் கழகத்தில் நிலக்கரிப் பற்றாக்குறை இருக்கிறதா இல்லையா என்பதில் அமைச்சரவைக்குள்ளேயே முரண்பாடுள்ள நிலையில், தமிழ்நாடு டெண்டர் சட்ட விதிகளைத் தளர்த்தி, அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்க வேண்டிய நெருக்கடி ஏன் மின் பகிர்மானக் கழகத்திற்கு வந்தது?

நிலக்கரி இறக்குமதி பற்றி ஒரு தெளிவான கொள்கை மின்பகிர்மானக் கழகத்திடம் இல்லை என்று சிஏஜி அறிக்கையில் முன்கூட்டியே சுட்டிக்காட்டியும், நிலக்கரி இறக்குமதிக் கொள்கையை வகுக்காமல் இப்படி டெண்டர் விதிகளைத் தளர்த்துவது ஏன்?

 

மத்திய தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டிய போதிலும், எதிர்க்கட்சிகள் புகார் கூறினாலும், நாங்கள் திருந்தவே மாட்டோம் என்று பிடிவாதமான முடிவு எடுத்து இப்போது மீண்டும் நிலக்கரி ஊழலில் ஈடுபடுவது கடுமையான கண்டனத்திற்குரியது.

ஆகவே டெண்டர் விதிகளைத் தளர்த்தி, முறைகேடுகள் மூலம் ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி வாங்குவதை அதிமுக அரசு உடனே கைவிட வேண்டும் என்றும், நிலக்கரி தேவை என்றால் வெளிப்படையான டெண்டர் மூலம் வாங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்” என மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close