ஆளுநரை சாடிய பிரபலங்கள்

  திஷா   | Last Modified : 13 Oct, 2018 09:26 am
controversial-speech-about-governor

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறித்து அடிப்படை ஆதாரமின்றி செய்தி வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த செய்திதான். அப்போது நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக பேசிய பலரும் கூட இன்று வெட்கித் தலை குனியும் வகையிலான செயலைத்தான் அவரும், அவரைச் சுற்றியுள்ள தலைவர்களும் செய்திருக்கிறார்கள்.

நக்கீரன் இதழில் ஆளுநரைப் பற்றி செய்தி வெளியிட்டது கருத்துச் சுதந்திரம் அடிப்படையிலானது என்றும், அதற்காக கைது நடவடிக்கையை மேற்கொள்வது பத்திரிகை சுதந்திரத்தை நெறிக்கும் செயல் என்றும் எண்ணற்ற விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், நக்கீரன் கோபால் ஆளுநரை ஒருமையில் தாக்கிப் பேசியிருப்பதை என்னவென்று சொல்லி நியாயப்படுத்த விரும்புவார்களோ தெரியவில்லை.

ஆளுநர் தவறு செய்தாரா, இல்லையா என்பதெல்லாம் ஒரு பக்கம். அதை சட்டமும், அதன் மூலமான விசாரணையும் வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஒருவேளை உண்மையாகவே புலனாய்வு செய்து நக்கீரன் செய்தி வெளியிடுமானால், அதிலும் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கப் போவதில்லை. ஆனால், அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் மாபெரும் பொறுப்பில் உள்ள ஆளுநரை, மனம் வந்த போக்கில் ஒருமையில் தாக்கிப் பேசியிருப்பதை பார்த்தால், அவர்களது உண்மையான நோக்கம், தவறுகளை சுட்டிக் காட்டுவதா அல்லது அரசாட்சி மேல் உள்ள ஆள் மன வெறுப்புணர்வை அள்ளிக் கொட்டுவதுதானா என்ற சந்தேகம் எழுகிறது.

சென்னை பெரியார் திடலில் ’‘பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும் - பாராட்டும்’ எனும் தலைப்பில் நக்கீரன் கோபாலுக்கு நேற்று  மாலை நடைபெற்ற பாராட்டுக் கூட்டம் ஆளுநர் என்ற பதவி அமைப்பின் மீது அவர்கள் எத்துனை வெறுப்புணர்வை கொண்டுள்ளார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. . 

கூட்டத்தில் பேசிய இந்து என்.ராம், "பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலை கைது செய்தது ஒரு முட்டாள் தனமான, மூர்க்கத் தனமான செயல். ஜெயலலிதா கூட இந்த மாதிரி எதுவும் செய்யவில்லை, நூற்றுக்கணக்கான அவதூறு வழக்குகளை தான் அவர் போட்டிருக்கிறார். ஆனால் இந்த பலகீனமான அரசாங்கம், எதற்கு இதை செய்தது என்றால், இடைத்தேர்தலை சந்திக்க முடியாத பயம் தான் இதற்கு காரணம்" என மாநில அரசை சாடினார். 

விழாவில் பேசிய நக்கீரன் கோபால், "எனக்கும் பன்வாரிலாலுக்கும் எந்த கொடுக்கல் வாங்கலும் கிடையாது. அவர் யாருன்னே தெரியாது. ஃபோட்டோவுல இந்த மூஞ்ச பாத்துருக்கேன். இந்த ஃபோட்டோவை வச்சா கூட பத்திரிக்கை விக்காதுங்கற காரணத்தால தான் அவர் கூட நிர்மலாதேவியையும் சேத்து வச்சேன். இல்லன்னா இந்த சனியன வச்சிருக்கவே மாட்டேன். அந்த மூஞ்சி என்ன விக்கிற மாதிரி மூஞ்சியா நீங்களே பாருங்க" என நேரடியாகவே கவர்னரை தாக்கினார். 

மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா பேசுகையில், "நக்கீரனில் எழுதப் பட்டிருப்பது தமிழக ஆளுநரைப் பற்றியல்ல. தமிழக ஆளுநர் பொறுப்பில் இருக்கக் கூடிய பன்வாரிலால் புரோஹித் எனும் ___ ___ (டேஷ் டேஷ்) ஆளைப்பற்றி தான் என நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்றார்.

இறுதியாக பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "இந்தக் கூட்டம் கோபாலை ஏன் கைது செய்தீர்கள என கேட்பதற்காக அல்ல. இதற்காகவெல்லாம் அவர் பயப்படப் போவதில்லை. பொடாவை பார்த்தவர், தடாவை பார்த்தவர், எத்தனையோ அவதூறு வழக்குகளை சந்தித்தவர், எத்தனையோ சிறைகளில் அடைபட்டு இருந்தவர். எனவே இதுபற்றியெல்லாம் சிறு துளி கூட அவர் கவலைப்பட போவதில்லை. ஆக, அத்தனை பொடா, தடாவைப் பார்த்த நம் கோபால், எடப்பாடியைப் பார்த்தா பயந்துவிடப் போகிறார். ஜெயலலிதாவையே பார்த்தவர் அவர். அட்டைப்படத்தில் ஜெயலலிதாவை ஹிட்லர் போல சித்தரித்தவர் அவர். ஆக ஹிட்லருக்கே பயப்படாதவர் இந்த ஜோக்கருக்கா பயந்துவிடப் போகிறார். ஹிட்லருக்கே பயப்படாதவர் இந்த எடுபிடிக்கா பயந்துவிடப் போகிறார். 

கிண்டியில் இருப்பவர் நிர்மலாதேவிக்கு பயந்துக் கொண்டிருக்கிறார். இதை சொல்வதால் என் மீதும் வழக்கு தொடுக்கப் படும். போடட்டும், அதற்கெல்லாம் நாங்கள் பயந்தவர்களில்லை. நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு ஏறக்குறைய 6 மாதம் சிறையில் இருக்கிறார். 8 முறை அவருக்கு ஜாமீன் நிராகரிக்கப் பட்டிருக்கிறது. அங்கே தான் சந்தேகம் எழுகிறது. சந்தேகம் கூட இல்லை இது தான் உண்மை. அதைத்தான் கோபாலும் எழுதியிருக்கிறார்" என்றதோடு ஆளுநரை எச்சரித்தார். 

ஆக, மேலே பேசியிருக்கின்ற தலைவர்கள் எவரும், எந்த இடத்திலும் ஆளுநர் மீது தாங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் எந்தவொரு ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. மாறாக, ஆளுநர் மீதான தனிநபர் வெறுப்பைதான் உமிழ்ந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இனியாவது கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கண்டதைப் பேசுவதும், எழுதுவதும் சட்ட ரீதியாக தடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close