முடக்கும் எடப்பாடி... உளவுத்துறை வளையத்தில் கமல்ஹாசன்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 14 Oct, 2018 01:24 pm
kamal-hassan-in-the-intelligence-department

கமல் கடந்த இரண்டு நாட்களாக சேலம், நாமக்கல் என  பயணம் செய்து வருகிறார். கல்லூரிகளுக்குச் சென்று மாணவ, மாணவியர் மத்தியில் உரையாடி வருகிறார். அதைத்தொடர்ந்து கமலின் நடவடிக்கைகளை உளவுத் துறை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. கமலின் சேலம் பயணம் தொடர்பாக உளவுத் துறை கூடுதல் கவனத்தோடு செயல்பட்டு வருகிறது.
காரணம், அது முதல்வர் மாவட்டம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. அதனால், கமல் சேலம் விமான நிலையத்தில் இறங்கியதில் இருந்து ஒவ்வொரு அசைவு குறித்தும் தலைமையகத்துக்கு அப்டேட் செய்தபடியே இருக்கிறது உளவுத் துறை போலீஸ். குறிப்பாக ராசிபுரத்தில் கல்லூரி மாணவர்களிடம் கமல் பேசிக்கொண்டிருந்தபோது, ‘நீங்க முதல்வரானால் முதல் கையெழுத்து எதற்காக போடுவீங்க?’ என்று மாணவர்கள் அவரிடம் கேட்டனர். அதற்குப் பதிலளித்த கமல், ‘முதல்வரானா முதல்ல உடல் நலனை பத்திரமா பாத்துப்பேன்’ என்று பொடி வைத்துப் பேசிவிட்டு, ‘ஊழலை ஒழிக்கும் லோக் ஆயுக்தா சட்டத்துக்காகத்தான் முதல் கையெழுத்து போடுவேன்’ என்று சொல்ல கல்லூரி மாணவர்கள் ஆரவாரம் எழுப்பினர். இந்தச் சம்பவம் உட்பட, கல்லூரி மாணவர்களிடையே கமலுக்குக் கிடைத்து வரும் பெரிய வரவேற்பு உடனுக்குடன் மேலிடத்துக்கு ரிப்போர்ட்  ஆனது.

‘கல்லூரி மணவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கமல், கல்லூரிகளை இலக்காக வைத்து பயணித்து வருகிறார். கல்லூரி மாணவர்களிடம் அவர் பேசும் பேச்சு,  ஆளுங்கட்சிக்கு எதிரானதாகவும், ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்வதாகவுமே இருந்து வருகிறது. நல்ல ஆட்சியைத் தன்னால் மட்டுமே தர முடியும் என கமல்  பேசி வருகிறார். கல்லூரி மாணவர்களிடம் இது ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கிராம சபைக் கூட்டம் நடத்தி கிராம மக்களைத் தன் பக்கம் இழுக்கவும் ஒருபக்கம் முயற்சி செய்து வருகிறார் கமல். அவரது அடுத்த டார்கெட் கல்லூரி என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் முதல்வரைப் பற்றிய விமர்சனங்களைக் கல்லூரி மாணவர்களிடம் முன்வைக்கும்போது, கைதட்டல் அதிகமாக இருந்தது. கல்லூரி மாணவர்களிடம் விதைப்பது அவர்களின் வீடு வரை எதிரொலிக்கும்..’ என உளவுத் துறை அதிகாரி ஒருவர் முதல்வர் எடப்பாடியிடம் நேரடியாகவே சொல்லிவிட்டாராம்.

அதைக் கேட்டு அதிர்ந்து போன எடப்பாடி உடனடியாக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகனைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.‘கமல் ஊர் ஊராகப் போய் கல்லூரி மாணவர்களிடம் பேசிவருவது உங்களுக்குத் தெரியுமா? எல்லாக் கல்லூரிகளிலும் நம்மைத்தான் விமர்சனம் செய்து பேசுகிறார். கல்லூரிகள் எப்படி ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்துக்கு அனுமதி கொடுக்கிறாங்க. இதெல்லாம் உங்க கவனத்துக்கு வந்துச்சா இல்லையா? ‘ என்று கேட்டாராம். அதற்கு அன்பழகனோ, ‘எனக்கு தெரியாதுண்ணா... நான் விசாரிக்கிறேன். சில கல்லூரிகள் ஆடிட்டோரியத்தை வாடகைக்கு கொடுக்கிறாங்க. அப்படி எதுவும் கொடுத்தாங்களான்னு கேட்கிறேன். இனி யாரும் கமல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு காலேஜ் கொடுக்க கூடாதுன்னு சொல்லிடுறேன்...’ என்று தெரிவித்து உள்ளாராம்.

அத்துடன் உயர் கல்வித் துறை இயக்குனர் மூலமாக தமிழகம் முழுக்க உள்ள தனியார் கல்லூரிகளுக்குச் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ‘இனி எந்த அரசியல் கட்சி நிகழ்ச்சிகளையும் கல்லூரி வளாகத்துக்குள் நடத்த அனுமதிக்க கூடாது. அண்மைக் காலமாக கமல் கட்சியின் நிகழ்ச்சிகள் பல தனியார் கல்லூரி ஆடிட்டோரியங்களில் நடந்து வருகின்றன. இனி வாடகைக்கே விடுவதாக இருந்தாலும், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்குக் கொடுக்க வேண்டாம். கல்லூரி மாணவர்களை ஆடியன்ஸாக அங்கே அனுப்பவும் கூடாது. முன்கூட்டியே எதுவும் பதிவு செய்திருந்தாலும் அதை உடனடியாக கேன்சல் பண்ணிடுங்க...’ என்று வாய்மொழி உத்தரவு போயிருக்கிறதாம்.

அடுத்த மாதத்தில் கமல், நான்கு கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் திட்டமிட்டப்பட்டிருந்ததாம். இப்போது அவை அனைத்தும் கேன்சல் செய்யப்பட்டிருக்கின்றன. ‘அந்த நேரத்துல எங்களுக்கு எக்ஸாம் இருக்கு. இன்னொரு நாள் பிறகு சொல்றோம்..’ எனக் கல்லூரிகள் தரப்பில் இருந்து கமல் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாம். எடப்பாடியின் அதிரடி கமலுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை!

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close