ரஜினியுடன் இணைய முயன்ற மு.க.ஸ்டாலினின் வலது கரம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 19 Oct, 2018 05:12 pm
rajini-s-party-seeks-to-join-the-a-v-velu

இன்று வேலுவை பகைத்துக் கொண்டால், திமுகவில் இருக்கவே முடியாது.  திருவண்ணாமலை அருகே உள்ள சே.கூடலூர் அவரது சொந்த ஊர். பத்தாம் வகுப்பு வரை படித்த ஏ.வ.வேலு இப்போது எம்.ஏ பட்டதாரி.  

வேலுவின் தொடக்கம் மிக மிக எளிமையானது. பம்ப் செட் மெக்கானிக்காகத்தான் இருந்தார் அப்போது. பின்னர் திருவண்ணாமலை பகுதியில் பிரபலமாக இருந்த தாமோதரன் பஸ் சர்வீஸில் கண்டக்டராக இருந்தார். 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வை தொடங்கியபோது, அதில் இணைந்தார். தண்டாரம்பட்டு ஒன்றியத்தின் துணை அமைப்பாளர் பதவி கிடைத்தது. 77 தேர்தலில் தண்டாரம்பட்டு தொகுதிக்காக அலைந்தாலும் வேலுவுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால், இவரது செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே இருந்தது. அப்போது அ.தி.மு.க-வில் செல்வாக்காக இருந்த அமைச்சரான ப.உ.சண்முகத்துக்கு உதவியாளராக தன்னை மாற்றிக் கொண்டார். 1984-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், தண்டாரம்பட்டு தொகுதி வேட்பாளராக சீட் கேட்டு மன்றாடினார்.

ப.உ.சண்முகத்தின் உதவியாளராக  சிறப்பாக பணியாற்றியதால், அவரது பரிந்துரையில் தண்டாரம்பட்டு சீட் கிடைத்து எம்எல்ஏ ஆனார். ஜெகதரட்சகன், விஐடி விஸ்வநாதன், முனிரத்னம், ஜேப்பியார் போன்றோர் திடீர் கல்வித் தந்தைகளாக உருவெடுத்தது போலவே வேலுவும் கல்வித் தந்தையானார். இப்போது ஏ.வ.வேலு அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் பொறியியல் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக், கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜீவ வேலு உறைவிடப் பள்ளி, கரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவைகளுக்கு உரிமையாளர்.  ராமச்சந்திர உடையார் மற்றும் ஜேப்பியாரைப் போலவே, வேலுவும் எம்ஜிஆரின் பினாமியாக இருந்தே கல்வித் தந்தையானார்.

திருவண்ணாமலைக்கு கருணாநிதியோ, ஸ்டாலினோ வந்தால், அருணை கல்லூரி வளாகத்தில் உள்ள கெஸ்ட் ஹவுசில்தான் தங்குவார்கள்.
எம்ஜிஆர் இறந்ததும், அவர் உடல் வைக்கப்பட்டிருந்த ராணுவ வாகனத்தில் ஏறிய ஜெயலலிதாவை இறக்கிவிட்ட புகழுக்கு இவரும் கேபி.ராமலிங்கமும் சொந்தக்காரர்கள்.  அந்த சம்பவம் வேலுவை மேலும் புகழடைய வைத்தது. 89 தேர்தலில் ஜானகி அணியில் இரட்டைப் புறா சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.  பின்னர், ஜானகி அரசியலில் இருந்து ஒதுங்கியதும், ஜெயலலிதா  அணிக்குத் தாவ முயற்சி செய்தார். ஜெயலலிதாவை சந்தித்து, அவருக்கு ஒரு பட்டுப் புடவை பரிசளித்து, அந்த கூடாரத்தில் நுழைய முயற்சித்தார். ஆனால் ஜெயலலிதா ஏற்கவில்லை.

பின்னர் ஆர்எம்.வீரப்பன் தொடங்கிய எம்ஜிஆர் கழகத்தில் இணைந்தார்.  எம்ஜிஆர் கழகத்தின் சார்பில், திருவண்ணாமலையில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்துக்கு அத்தனை செலவுகளையும் மேற்கொண்டது வேலுவே. கே.பாக்யராஜ், 1989ம் ஆண்டு, எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்று ஒரு கட்சியை தொடங்கினார். அதில் இணைந்த வேலு, அந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரானார். பின்னர் பாக்யராஜின் கட்சி தேராது என்று தெரிந்ததும் அதிலிருந்து  வெளியேறி, திரைத் துறையில் கால் பதித்தார். திருவண்ணாமலையைச் சேர்ந்த இயக்குநர் வி.சேகர் எடுத்த, ’நான் புடிச்ச மாப்பிள்ளை, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’ என்ற படங்கள் வேலுவின் தயாரிப்பு. 1992-ம் ஆண்டு வெளியான திலகம் என்ற படத்தில் வேலு வில்லனாக நடித்துள்ளார். 

மீண்டும் ஜெயலலிதாவிடம் இணைவதற்காக “புரட்சித் தலைவி திராவிடத் தாய்தான்” என்ற புத்தகத்தைத் தயாரித்து, கவிஞர் வாலியிடம் அணிந்துரையும் வாங்கி, அச்சடித்து வைத்து இருந்த நேரத்தில்,  தமிழகத்தில் கடுமையான ஜெயலலிதா எதிர்ப்பு அலை. இந்த நேரத்தில் இந்த புத்தகத்தை வெளியிட்டால் போணியாகாது என்பதை உணர்ந்து, அப்போது பாட்சா திரைப்பட 100வது நாள் விழாவில் ரஜினியின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும், ரஜினி பக்கம் சாய்ந்தார். 

அப்போது, திருவண்ணாமலையில், பட்டுச் சேலைகளை தானமாக அளித்து, ஒரு யாகம் நடத்தப்பட்டது. அதன் முழுச் செலவும் வேலுதான். பின்னர் 1996ல், மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸில் இணையப் பார்த்தார். ஆனால், மூப்பனார் இவரை சேர்க்கவில்லை.
அடுத்து வேலு, திமுக பக்கம் கண் பதித்தார். 1993ல் ராணிப்பேட்டையில் நடந்த இடைத் தேர்தலின்போது, பிரச்சாரத்துக்கு வந்த கருணாநிதி மீது தாக்குதல் நடைபெற்றது. அந்த தாக்குதலை முன்னின்று நடத்தியவர் வேலுதான். இது போல, திருவண்ணாமலையில், திமுக தலையே தூக்க விடாமல் தொடர்ந்து செயல்பட்டார். திமுகவில் அவரை உள்ளே நுழைய விடக் கூடாது என்று பலர் முனைப்பாக இருந்தனர்.  ஆனால், திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த செ.மாதவனை பிடித்து, திமுகவில் நுழைந்தார்.

திமுகவில் நுழைந்ததும், முக்கிய புள்ளிகள் யார் யாரென்று பார்த்து, துரைமுருகன் மற்றும் பொன்முடியை கையில் போட்டுக் கொண்டார். திமுகவில் நுழைந்ததும், வேலுவின் செல்வாக்கு கடகடவென்று வளர்ந்தது. திருவண்ணாமலையைச் சேர்ந்த ராதா கோவிந்தன் நாயுடு என்பவர், முரசொலி செல்வத்தோடு கல்லூரியில் ஒன்றாக பயின்றவர்.   முரசொலி செல்வம், பொன்முடி, ராணிப்பேட்டை காந்தி, துரை முருகன் ஆகியோர் அவ்வப்போது, வெளியூர்களுக்கு சென்று தங்குவது வழக்கம். அந்த குழுவில் தன்னை இணைத்துக் கொண்ட வேலு, அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வார்.  இதனால்,அவரை அனைவருக்கும் பிடித்துப் போனது.

திமுக நிர்வாகிகள் நியமன சமயத்தில், முரசொலி செல்வம், ராதா கோவிந்தன் நாயுடுவை தலைமைச் செயற்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று முயற்சித்தார். முடிவு திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் பிச்சாண்டியிடம் விடப்பட்டது. ஸ்டாலின், செய்யாறு அன்பழகனை தலைமைச் செயற்குழுவுக்கு பரிந்துரைக்க, பிச்சாண்டியும் அன்பழகனையே தேர்ந்தெடுத்தார். முரசொலி செல்வத்துக்கு தன்னுடைய பிரதிநிதி ராதாகோவிந்தன் நாயுடு தேர்ந்தெடுக்கப்படாதது கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால், வேலுவை மாவட்டச் செயலாளர் ஆக்குவது என்று முடிவெடுத்தார்கள். 

2003-ம் ஆண்டு நடந்த கட்சித் தேர்தலில், பிச்சாண்டிக்கு எதிராக போட்டியிட்டார் வேலு.  திமுகவினரின் கணிசமான வாக்குகளை வைத்திருந்த வேணுகோபால் மற்றும் பெ.சு.திருவேங்கடத்தை தன் பண செல்வாக்கால் கவர்ந்து விட்டார். இறுதியாக முடிவெடுக்க வேண்டியது போளுர் ராஜேந்திரன்.  போளுர் ராஜேந்திரனை வளைத்தார். போளுர் ராஜேந்திரனும் தன்னுடைய ஆதரவை வேலுவுக்கே வழங்க, பிச்சாண்டியை வீழ்த்தி மாவட்டச் செயலாளர் ஆனார். 2001-ம் ஆண்டு, திமுகவின் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. அந்த பொங்கல் விழாவின் மொத்த செலவையும் ஏ.வ.வேலுவே ஏற்றுக் கொண்டார். அப்போது, கே.டி சகோதரர்கள், கருணாநிதிக்கு ஒரு பென்ஸ் காரை பரிசாக அளித்திருந்தனர். அந்த காரில் கருணாநிதி ஏறும்போது, அவரிடம், பொன்முடி, விழாவுக்கான செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டது வேலுதான் என்றும், அவரையும் காரில் அழைத்துச் செல்லலாமே என்று கூறவும் கருணாநிதி அவரை காரில் ஏற்றிக் கொண்டார். அப்பொது முதல் கோபாலபுரத்தில், மளிகை செலவு முதல், பாத்திர பண்டங்கள் வாங்குவது வரை அத்தனையும் வேலுவின் செலவுதான். கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டில் இன்று இயங்கும் பவர் பேக்அப் ஜெனரேட்டர், வேலுவின் உபயமே.

கருணாநிதி காரில் ஏறியது போலவே, ஸ்டாலினின் காரிலும் வேலு ஏறிக் கொண்டார். இன்று வரை இறங்கவேயில்லை.  சித்தரஞ்சன் சாலையில் ஸ்டாலினின் வீட்டு செலவுகள் அனைத்தையும் செய்வது வேலுவே.  ஏறக்குறைய ஸ்டாலின் வீட்டின் உறுப்பினராகவே மாறி விட்டார். 2004-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்ற, கருணாநிதி வேலுவின் கல்லூரியில் தங்கியிருந்தார். அப்போது அவரை பார்ப்பதற்காக, ப.உ.சண்முகம், அவர் மகன் ராஜாவோடு கல்லூரிக்கு வந்தார். அப்போது வேலு அவர் அருகில் இருந்தவரிடம் சொல்லியது, “இந்த ஆளு இப்போ எதுக்கு வர்றாரு ?”  ப.உ.சண்முகம் இல்லையென்றால், வேலு அரசியலுக்கே வந்திருக்க முடியாது.  இதுதான் வேலுவின் உண்மையான குணம்.

வேலு நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் மனைவி சரஸ்வதி உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் கம்பன். இளைய மகன் குமரன். வேலுவின் அருணை பொறியியல் கல்லூரியில் நடந்த சில முறைகேடுகளுக்காக அக்கல்லூரியின் இணைப்பையே அண்ணா பல்கலைக்கழகம், ரத்து செய்தது. இன்று திமுகவில் அனைத்தும் எவ.வேலுதான். ஸ்டாலின் வீட்டில் பெரும்பாலான முடிவுகள் அவரின் ஆலோசனைப்படியே நடக்கின்றன. துர்கா ஸ்டாலினைப் பார்த்தால், ’தளபதி எப்போ சி.எம் ஆவாருன்னு ஜனங்க தவம் கிடக்கிறாங்க  அண்ணி’ என்பார்.  துர்கா புளகாங்கிதம் அடைவார். ’அண்ணி,  வரப்போற தேர்தல்லயே நம்ப தம்பி உதயை நிக்க வைச்சிடணும். தம்பிதான் பார்ட்டியோட ப்யூச்சர்’’ என்று துர்காவுக்கு எது பிடிக்குமோ அதை பேசுவார்.

இன்று ஏறக்குறைய திமுகவின் மாவட்டச் செயலாளர்களில் பாதி பேர் வேலுவின் கைகளில். ஸ்டாலினை விட திமுகவை வேலு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். சமீபத்தில் ஸ்டாலின் கள ஆய்வு நடத்தி, திமுக தலைவர்களின் மீதான புகார்களை தொண்டர்களிடமிருந்து பெற்றார் ஸ்டாலின். அந்த புகார்களில் எது ஸ்டாலின் கண்களுக்கு செல்ல வேண்டும் என்பதையும் வேலுதான் முடிவு செய்கிறார்.வேலுவின் ஆட்கள் மீதான ஒரு புகார் கூட தலைமையின் கண்களுக்கு செல்லாத வகையில் பார்த்துக் கொள்கிறார்.

அறிவாலயத்தில் உள்ள அத்தனை பேரும் வேலுவின் ஆட்களே.  அறிவாலயத்தில் வேலுவுக்கு தெரியாமல் எதுவுமே நடக்காது.   தற்போது திமுகவின் அரசியல் யுக்தியை உருவாக்கி செயல்படுத்தும் பணி, OMG என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சுனில் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் வெளியிடும் அறிக்கைகள், ட்வீட்டுகள் போன்ற அனைத்தையும் முடிவு செய்வது இந்த டீம்தான்.  இந்த டீமில் சுனிலைத் தவிர்த்து, முக்கிய நபராக உள்ளவர் தினேஷ்.  இந்த தினேஷ் மற்றும் சுனில் ஆகிய இருவருமே வேலுவின் ஆட்கள்தான். முழுமையாக திமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் ஏ.வ.வேலு. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close