அடம்பிடித்த விஜயகாந்த்... ஆட்டுவிக்கும் பிரேமலதா... காலியாகும் தே.மு.தி.க கூடாரம்?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 22 Oct, 2018 10:56 am
empty-is-the-dmdk-tent

எதற்காக திட்டமிட்டுக் காத்திருந்தாரோ அதனை இப்போது அடைந்திருக்கிறார் விஜயகாந்தின் மனைவியாகிய பிரேமலதா. தே.மு.தி.க பொருளாளராக அவர் பதவியேற்றுள்ளது அந்தக் கட்சிக்கு பின்னடைவையே ஏற்படுத்தும் என்கிறார்கள்.

விஜயகாந்த் ஆரோக்கியத்துடன் இருக்கும்போதே அவருக்கு நிகராக மேடையிலும், கட்சி நிர்வாகத்திலும் நேரடியாக தலையிட்டு வந்தார் பிரேமலதா. தே.மு.தி.க-வில் சுதீஷும், இவரும் வைத்தது தான் சட்டம், திட்டம் அனைத்தும்... இத்தனைக்கும் அப்போது கட்சியின் எந்தப்பதவியிலும் அவர் இல்லை. 

ஒரு கட்டத்தில் விஜயகாந்தை வழி நடத்துவதே மனைவி பிரேமலதாதான் என தே.மு.தி.க-வினரே புலம்பித் தவித்தனர். கணவனை ஓரம் கட்டிவிட்டு தானும், தனது தம்பியும் மட்டுமே கட்சியை வழி நடத்துபவர்களாக இருக்க வேண்டும் என்பது பிரேமலதாவின் நீண்ட கால கனவு. 
விஜயகாந்தின் உடல் நலம் பிரேமலதாவின் கனவை நிறைவேற்றி இருக்கிறது. இப்போது அவரைக் கட்சியின் பொருளாளராக நியமித்திருக்கிறார் விஜயகாந்த். கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே பொருளாளராக இருந்தவர் ஏ.ஆர். இளங்கோவன். விஜயகாந்த் ரசிகர் மன்றக் காலத்திலிருந்து அவரோடு இருப்பவர். சாதாரண பைக் மெக்கானிக்காக இருந்த இளங்கோவனுக்குக் கட்சியில் பொறுப்பு, எம்.எல்.ஏ. சீட் என அடுத்தடுத்து கொடுத்து அழகு பார்த்தார் விஜயகாந்த். ஆனால், போட்டியிட்ட தேர்தல் எதிலும் இளங்கோவன் ஜெயிக்கவில்லை. ஒரு கட்டத்தில் இளங்கோவனைத் தாண்டி விஜயகாந்தைச் சந்திக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சிக்காரர்கள் மத்தியில் இருந்தது. அதெல்லாம் விஜயகாந்த் கவனத்துக்குப் போனாலும், அவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

கடந்த ஜூலை 4ஆம் தேதி தேமுதிகவின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடந்தது. விஜயகாந்துக்கு ஆல் இன் ஆலாக வலம் வரும் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் அந்தக் கூட்டத்துக்கு வரவில்லை. அப்போதே விஜயகாந்துக்கும், இளங்கோவனுக்கும் இடையில் மன வருத்தம் தொடங்கிவிட்டதாம். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் படுத்ததிலிருந்தே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரையும் அவரை நெருங்கவிடவே இல்லையாம். பிரேமலதா சில முறை கணக்கு கேட்கிறேன் என்ற பெயரில், ’கட்சிக்கு நிதி இவ்வளவுதான் வந்துச்சா... எல்லாம் கணக்குல காட்டியிருக்கீங்களா? நம்புற மாதிரியே இல்லையே..’ எனச் சிரித்தபடியே சொல்லியிருக்கிறார். அப்போது கோபத்தில் போன இளங்கோவன் வரவே இல்லையாம்.

அதன் பிறகு இளங்கோவனே, ‘என்னைப் பொருளாளர் பதவியிலிருந்து விடுவித்து விடுங்க...’ என்று கேட்டாராம். அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் கூட இறங்காமல், அவரைப் பொருளாளர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு, அந்தப் பொறுப்பை பிரேமலதாவே எடுத்துக் கொண்டார். ‘கட்சிக்கு வரும் மொத்த வருமானத்தையும் கவனிக்கும் பொறுப்பில் இருக்கிறவங்ககிட்ட கேள்வி கேட்காமல் இருக்க முடியுமா? அவரு என்ன அரிச்சந்திரனா?’ என்றும் இளங்கோவன் பற்றி கிண்டலாகச் சொல்லியிருக்கிறார் பிரேமலதா. இதெல்லாமே இளங்கோவன் கவனத்துக்கும் போக, ரொம்பவே நொந்துவிட்டாராம். ‘இவங்களுக்காக என் வாழ்க்கையை மொத்தமாக தொலைச்சிட்டு நிற்கிறேன்’ என புலம்பித் தீர்த்து வருகிறார் இளங்கோவன்.

கட்சிக்குப் பொருளாளராகத் தன்னை நியமிக்க வேண்டும் எனப் பிரேமலதா கேட்டபோது, விஜயகாந்த் முதலில் சம்மதிக்கவில்லையாம். ‘புருஷன் தலைவர்; பொண்டாட்டி பொருளாளர்னு கிண்டல் பண்ணுவாங்க...’ என்று சொன்னாராம். சுதீஷும், பிரேமலதாவும் சேர்ந்து அடம் பிடித்துத்தான், அவருக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. தேமுதிக வட்டாரத்தில் பேசியபோது, ‘சுதீஷும், அண்ணியும் வெச்சதுதான் முன்பிருந்தே கட்சியில் நடக்கும். இப்போ கேப்டனைப் பொறுத்தவரை எதுவும் கேள்வி கேட்க முடியாத நிலையில் இருக்காரு. கட்சியின் செயல்பாடுகள் எதையும் அவரு கவனிக்கிற நிலையில் இல்லை. அதனால இனி, அண்ணி சொல்றது மட்டும்தான் கட்சியில் நடக்கும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அண்ணியை முன்னெடுத்துத்தான் கட்சி செயல்பட ஆரம்பிக்கும்.

எப்படித் தலைவர் கலைஞர் இருந்தபோது, செயல் தலைவர் என ஸ்டாலின் செயல்பட்டாரோ இனி அறிவிக்கப்படாத செயல் தலைவராக அண்ணிதான் இருப்பாங்க.. தே.மு.தி.க விஜயகாந்த் என்கிற ஒற்றை மனிதரின் செல்வாக்கால் உயர்ந்த கட்சி. அவரது முகத்திற்காகத்தான் இப்போதும் பலர் கட்சியில் இருக்கிறார்கள். பிரேமலதாவின் நடவடிக்கையால் பலரும் கட்சியில் இருந்து கேப்டன் ஆக்டிவாக இருக்கும்போதே விலகி இருக்கிறார்கள். விஜயகாந்த் செயல்படாத நிலையில் இருக்கும்போது கட்சிப்பொறுப்பை கவனிக்க வந்திருக்கும் பிரேமலதாவின் நடவடிக்கைகள்  ஏட்டிக்குபோட்டியாகவே இருக்கும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். எனவே தே.மு.தி.க-விலிருந்து பலரும் இனி கொத்துக் கொத்தாக கட்சி மாறும் சூழல் நிச்சயம் ஏற்படும்’’ என்கிறார்கள்.

newtm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close