தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஜெ. மரணம் முதல் தீர்ப்பு வரை!

  முத்துமாரி   | Last Modified : 25 Oct, 2018 01:03 pm
dinakaran-supported-mlas-disqualification-case-review

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக மக்கள், அரசியல் கட்சிகள் என அனைவரும் எதிர்பார்த்திருந்த எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில்,  அ.தி.மு.க அரசிற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த வழக்கு கடந்த வந்த பாதை சுருக்கமாக...

►  தமிழகத்தில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியேற்று 4 மாதங்களிலேயே உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 70 நாட்களுக்கும் மேலாக அங்கு சிகிச்சை பெற்ற அவர் கடந்த 2016, டிசம்பர் 5 அன்று உயிரிழந்ததாக செய்தி வெளியானது. தமிழகமே அதிர்ச்சியில் உறைந்த நாள் அன்று. 

►  அதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக அமர்த்தப்பட்ட நிலையில், அடுத்ததாக தானே முதல்வராக வேண்டும் என சசிகலா விருப்பப்பட்டார். 2017 பிப்ரவரி 5ம் தேதி அ.தி.மு.கவின் சட்டப்பேரவைத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்

►  அதைத்தொடர்ந்த இரண்டாவது நாளிலேயே ஓ.பன்னீர் செல்வம் அவர் வகித்து வந்த முதல்வர் பதவியிலிருந்கது ராஜினாமா செய்யுமாறு பணிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக சசிகலா தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யவைத்தார் என ஓபிஎஸ் செய்தியாளர்கள் மத்தியில் அறிவித்தார். ஜெயலலிதா சமாதி முன்பாக அமர்ந்து தியானம் செய்து அவர், தியானம் கலைந்த பின்னர் 'சசிகலா குடும்பத்தில் இருந்து அதிமுகவை மீட்கும் வரை, தான் தொடங்கியுள்ள தர்மயுத்தம் தொடரும்' என்று அறிவித்தார். 

►  இதனால் அதிமுக சசிகலா அணி மற்றும் பன்னீர் செல்வம் அணி என இரு அணிகளாக பிரிந்தது. பின்னர் பிப்ரவரி 14ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைத்தண்டனை பெற்றார்.  உடனடியாக டிடிவி.தினகரன் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து 2017 பிப்ரவரி 16ம் தேதி முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுக் கொண்டார். 

►  பின்னர் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். இதனிடையே தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் ஓபிஎஸ் -இபிஎஸ் அணிகள் இணைந்தன. அதன் அடுத்த கட்டமாக டிடிவி தினகரன் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். 

►  2017, செப்டம்பர் 7ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக முடிவு செய்து டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரை நேரடியாகச் சந்தித்து மனு அளித்தனர். 

►  இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் ப.தனபாலிடம் அளித்த புகாரை தொடர்ந்து, 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதன்படி ஜக்கையன் எம்.எல்.ஏ. மட்டும் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை.

►  தொடர்ந்து, செப்டம்பர் 18ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக மனு அளித்த எம்.எல்.ஏ-க்கள் 18 பேர்(ஜக்கையன் தவிர) கட்சி தாவல் சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

►  இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

►  இந்நிலையில், வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த ஜூன் 14ம் தேதியன்று இந்த அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். 

►  அதாவது எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், தகுதி நீக்கம் செல்லாது என்று நீதிபதி எம்.சுந்தரும் தீர்ப்பளித்தனர். 

►  இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கு 3-வது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில், இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். 

►  பின்னர், தங்க தமிழ்செல்வன் தவிர மற்ற 17 பேர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தால் மேலும் தாமதம் ஆகும் என்பதால், வழக்கை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது உச்சநீதிமன்றமே இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

►  இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் மற்றும் அருண் மிஸ்ரா வழக்கை விசாரித்தனர். 3வது நீதிபதியான விமலா மீது தினகரன் தரப்பு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், நீதிபதி சத்யநாராணன் என்பவர், அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி நீதிபதி சத்யநாராயணன் வழங்கும் தீர்ப்பே இறுதியானது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மறு விசாரணை கோர முடியாது என்றும் நீதிபதி சஞ்சய் கிஷன் தலைமையிலான அமர்வு திட்டவட்டமாக தெரிவித்தது. 

►  மேலும் நீதிபதி சத்தியநாராயணன் இந்த வழக்கை ஆய்வு செய்து விரைந்து தீர்ப்பு வழங்கிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியிருந்தது . அதையொட்டி இறுதியாக 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி சத்ய நாராயணன் அளித்துள்ள தீர்ப்பில், 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டது   செல்லும் என்றும், சபாநாயகர் முடிவில் தவறு இல்லை என்றும், தகுதி நீக்கம் சட்டவிரோதமானது அல்ல என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் தீர்ப்பை சத்தியநாராயணன் உறுதி செய்துள்ளார். 

►  மேலும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட தடையும்  நீக்கப்பட்டுள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு தற்போதைக்கு தப்பியுள்ளது. 

►  தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கடப்படாத நிலையில், இந்த 18 தொகுதிகளும் சேர்த்து 20 தொகுதிகள் காலியாகியுள்ளது. இந்த 20 தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் மழைக்காலத்தில் தேர்தல் நடத்துவது உகந்ததாக இருக்காது என்று தேர்தல் ஆணையம் கருதியதால்  திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நடைபெற வேண்டிய தேர்தலுக்கான தேதி இன்னமும் அறிவிக்கப்படாமல் உள்ள நிலையில், இந்த 18 தொகுதிகளுக்கும் அவ்வளவு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற்று விடுமா என்பது சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close