குதிரை பறந்தாலும் பறக்கும்

  பாரதி பித்தன்   | Last Modified : 29 Oct, 2018 04:36 pm
horse-may-fly

அரசவையில் மன்னர் அமர்ந்திருந்தார். மந்திரி ஏதோ குசும்பு செய்ய ,ஆத்திரம் அடைந்த மன்னர் யார் அங்கே மந்திரியை துாக்கில் போடுங்கள் என்று உத்தரவிட்டார். அதிர்ச்சியடைந்த மந்திரி நடப்பதை அறிந்து கதறிதுடித்து மன்னிப்புக் கோரினார். சமாதானம் அடைந்த மன்னர் வாசலில் இருக்கும் என் குதிரையை பறக்க வை, துாக்கில் போடுவதை ரத்து செய்கிறேன் என்றார். உடனே மந்திரி சரி மன்னா ஒரு ஆண்டு அவகாசம் கொடுங்கள், எனக்கும் குடும்பத்திற்கும் தேவையானவற்றை கொடுங்கள் குதிரையை பறக்க வைக்கிறேன் என்றார். வியப்பில் ஆழ்ந்த மன்னர் அனைத்தையும் ஏற்பாடு செய்ய, மந்திரி குதிரையை பிடித்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.

அப்போது மந்திரியின் நண்பர் ஏய் குதிரை எங்காவது பறக்குமா ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க ; மந்திரி அது எனக்கும் தெரியும், அதை சொன்னால் உடனே என்னை துாக்கில் போட்டுவிடுவான். இப்போது ஒரு ஆண்டு கால அவகாசம் கிடைத்து இருக்கிறது. இதில் நான் சாதாரணமாக இறந்து போகலாம். அல்லது மன்னர் இறந்து போகலாம், அல்லது தண்டனை வழங்கியதை மாற்றி மன்னித்துவிடலாம். இல்லாவிட்டால் குதிரை இறந்து போகலாம். யார் கண்டது குதிரையே பறந்தாலும் பறக்கலாம் என்றாராம்.

இது தான் எடப்பாடியின் நிலை. ஏதோ ஒரு ரகசிய டீலிங்கில் முதல்வராக உருவாகிவிட்டார். அந்த சமயத்தில் செங்கோட்டையனைத்தான் முதல்வராக்க சசிகலா அண்டு கோ நினைத்ததாம். அவர் பயந்துவிட்டத்தால் எடப்பாடிக்கு அதிஷ்டம் அடித்தது. அதன்பின்னர் நடந்த சம்பவங்கள் அனைத்தும் எல்லோருக்கும் தெரிந்தது தான்.

தற்போது 18எம்எல்ஏகள் தகுதி நீக்கம் பற்றிய தீர்ப்பு வந்துள்ளது. வேறு வழியே இல்லாத 2 சட்டசபைத் தொகுதிக்கான இடைத் தேர்தலையே தள்ளிவைத்துவிட்ட அதிமுகவிற்கு இந்த தீர்ப்பு மினி சட்டசபைத் தேர்தலாக உருவாகி சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்போதைய தேவை தேர்தல் நடத்துவது அல்ல. அதை தள்ளிப்போட்டால் போதும்.
இப்போதைய சட்டசபையில் அதிமுக 115, திமுக கூட்டணி 98, இதில் திமுக மட்டும் 88 காலியிடம் 20, தினகரன் 1 என்பது தான் நிலை. சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடந்தால் அதிமுக 9 இடங்கள் வெற்றி பெற்றால் போதும். திமுகவை பொறுத்தளவில் 20 இடங்களில் வெற்றி பெற்றால் கூட 108 சீட்டுதான் வரும். அப்போது ஆட்சி மாறினாலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான். ஆனால் ஸ்டாலின் அதற்கு விரும்பமாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்த சூழ்நிலையில் எடப்பாடிக்கு தேவை கால அவகாசம். தற்போதைய நிலையில் ஒவ்வொரு நாள் கடந்தாலும், மினி தேர்தல் லோக்சபா தேர்தலுடன் நடத்த கால அவகாசம் கிடைக்கும். அந்த சூழ்நிலையில் 20 தொகுதிகளை மட்டும் கவனத்தில் கொண்டு எந்தகட்சியும் தேர்தல் வேலை செய்யாது. அந்த சூழ்நிலையில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற முடியும். மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியது போல லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலையும் இணைத்து நடத்தினால் அனைத்து கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளலாம். அதில் வெற்றி பெறும் கட்சி தமிழகத்தை நிம்மதியாக ஆட்சி செய்ய முடியும்.

தினகரன் அணி மேல்முறையீட்டிற்கு உச்சநீதிமன்றம் சென்றால் வழக்கு முடிவற்கு சுமார் ஒரு ஆண்டு ஆகும். அதற்கும் ஆட்சி நிறைவு காலத்தை எட்டிவிடும். அதற்கு ஏற்ப தினகரன் மேல்முறையீட்டிற்கு செல்லப் போவதாக கூறியது நிச்சயம் எடப்பாடி அணிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இன்னொரு தகவல் தேர்தல் தான் மேல் முறையீட்டிற்கு செல்லப் போவதில்லை என்றும் வெளியாகிறது. இதற்கு செக் வைக்கும் முறையில் தான் எடப்பாடியும், பன்னீர் செல்வமும் தினகரன் அணி எம்எல்ஏகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள் சேரும் போது, மீண்டும் மன்னிப்பு கடிதம் பெற்று அவர்களை எம்எலஏவாகவே சபாநாயகர் அறிவித்து அவர்களை அதிமுக பட்டியலில் சேர்க்கலாம். அப்படி செய்த பின்னர் சட்டவிரோதம் என்று ஒரு கும்பலும், இல்லை இல்லை சபாநாயகருக்கு வானவளாவி அதிகாரம் உள்ளது அதனால் அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூவும்.முடிவு நீதிமன்றம் தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் குறைந்தது ஓராண்டு கடந்து போகும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தற்போதுள்ள தமிழக அரசியல் நாடகம் நடக்கிறது. இது எப்படி முடிந்தாலும், மக்கள் முட்டாள்கள் என்ற பாடத்தை அனைவருக்கும் கற்றுக் கொடுத்துவிடும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close