கனிமொழியுடன் நெருக்கம்... வைகுண்டராஜனை வருமான வரித்துறை வளைத்த பகீர் பின்னணி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 30 Oct, 2018 01:35 pm
vaikundarajan-income-tax-raids-background

வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனுக்கு சமப்ந்தப்பட்ட இடங்களில் 3 நாட்களாக தொடர் ரெய்டு நடத்தியது மத்திய வருமான வரித்துறை. இதற்கு வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மீது வரி ஏய்ப்புப் புகார்கள் ஒருபக்கம் சொல்லப்பட்டாலும் அரசியலும் காரணமாக இருக்கிறது என்கிறார்கள். 

நெல்லை மாவட்டம், திசையன்விளையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது வி.வி.மினரல்ஸ். திசையன்விளை, சென்னையில், எழும்பூர், திருவான்மியூர் உட்பட பல இடங்கள், நெல்லை, தூத்துக்குடி உட்பட பல பகுதிகளில் உள்ள வி.வி. மினரல்ஸுக்கு சொந்தமான அலுவலகங்கள், வைகுண்டராஜன், அவரது மகன்களின் வீடுகள், அலுவலகங்கள் என 100க்கும் மேற்பட்ட இடங்களில் 500க்கு அதிகமான அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 

தாதுமணல் உற்பத்தி, ஹோட்டல், உலோக உற்பத்தி என்று பல்வேறு தொழில்களைச் செய்து வரும் விவி தரப்பு, கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்றும், கணக்கில் காட்டாத அளவுக்கு வருமானத்தை குவித்தது உள்ளிட்டவை காரணமாக வருமான வரி சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியானது. இதற்கிடையே வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனின் சமீபத்திய அரசியல் நடவடிக்கைகளும் இந்த ரெய்டுக்கு பின்னணியான இன்னொரு காரணமாக பார்க்கப்படுகின்றன. “வி வி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன் ஜெயலலிதாவோடு மிக நெருக்கமாக இருந்தவர். ஜெயா டிவியில் பங்குதாரராக இருந்தவர்.  ஆனால், ஜெயலலிதாவின் கடைசி காலத்தில் இருவருக்குமான புரிந்துணர்வு நல்ல நிலையில் இல்லை. 

இந்நிலையில் ஜெயலலிதா காலமான பின்னர் சசிகலாவோடு நெருக்கம் பாராட்டத் தொடங்கியது விவி தரப்பு. அது டி.டி.வி.தினகரனுடன் சில நாட்கள் தொடர்ந்தது. சில வாரங்களுக்கு முன் தினகரன் - ஓ.பன்னீர்செல்வம் ரகசியமாக சந்தித்தது பற்றி பெரும் சர்ச்சை வெடித்தது. கடந்த ஆண்டு நடந்த அந்த சந்திப்புக்குப் பின்னணியாக செயல்பட்டவர்களில் வைகுண்டராஜனும் ஒருவர். ஆனால், அவர், தினகரன் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அடுத்து தி.மு.க-வுக்கு தூபம் போட ஆரம்பித்தார். ஆனால், ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்து சாதி ரீதியாக கனிமொழியை நாட ஆரம்பித்தார் வைகுண்டராஜன். ராஜாத்தி அம்மாள் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். தூத்துக்குடியில் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் என்பதால், அந்தத் தொகுதியை குறி வைத்து களமிறங்க திட்டமிட்டார் கனிமொழி. அதற்குண்டான செலவுகளை வைகுண்டராஜன் ஏற்றுக்கொள்வதாகவும், அதற்கு தலித் கட்சியை சேர்ந்த டாக்டர் கிருஷணசாமியை ஆதரவு தரச் சொல்லவும் ஏற்றுக் கொண்டது வி.வி.மினரல்ஸ் நிறுவனம். 

ஆனால், சமுதாய ரீதியாக கனிமொழிக்கு வைகுண்டராஜன் உதவுவதை மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை. இதன் எதிரொலியாக மு.க.ஸ்டாலின், வி.வி.மினரல்ஸ் நிறுவத்தின் மீது ரெய்டு நடத்த வேண்டும் என சில வாரங்களுக்கு முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். ‘வைகுண்டராஜன் தேர்தலுக்காக பெரும் பணம் செலவு செய்யத் தயாராக இருக்கிறார். நமக்கு உதவ காத்திருக்கும் அவரது நிறுவனத்தில் ரெய்டு நடத்த அண்ணன் அறிக்கை கொடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது’ என கனிமொழி அவரது ஆதரவாளர்களிடம் வருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கடந்த ஜூலை மாதம் ஆடு பகை, குட்டி உறவா..? கனிமொழியின் நட்புகளை வேரறுக்கும் மு.க.ஸ்டாலின்!  என்கிற தலைப்பில் நியூஸ்டிம் இணைய தளத்தில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். இந்த முறை தி.மு.க-வுக்கு தேர்தலின் போது பெரும் பணம் கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் வைகுண்டராஜன். இதனை அறிந்தே ஒரு முக்கியமான தேசியக் கட்சி வரும் மக்களவைத் தேர்தலுக்காக பெருமளவிலான ஒரு தொகையை தேர்தல் நிதியாக விவியிடம் கேட்கச் சொல்லி தனது தெற்கத்தியில் இருக்கும் பொன்னான விஐபியைக் கேட்டிருக்கிறது. ஆனால்,வி.வி அதை நாசூக்காக மறுத்துவிட்டார். இதனையடுத்தே வருமான வரித்துறை களத்தில் இறங்கி உள்ளது.  வருமான வரித்துறை ஆயிரம் நியாயமான காரணங்கள் கூறினாலும் வைகுண்டராஜனின் தி.முக-வுடனான நெருக்கம்தான் ரெய்டுக்கான பெரிய காரணம் என்கிறார்கள்.

இதுவரை அ.தி.மு.க தரப்பினர் மீது சோதனைகளை நடத்தி வந்த வருமான வரித்துறை இனி தி.மு.கவினருக்கு நெருக்கமானவர்களை வளைக்கத் திட்டமிட்டுள்ளது என்கிறார்கள். 

newstm.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close