கவலை தரும் விஜயகாந்த் உடல் நலம்... பிரேமலதாவின் அதிரடி அறுவை சிகிச்சை!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 31 Oct, 2018 05:22 pm

vijayakanth-s-health-issue-premalatha-s-action-operation

விஜயகாந்த் உடல் நலத்தில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படாததால் கட்சியை வளர்த்தெடுக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார் அவரது மனைவியும், தே.மு.தி.க., பொருளாளருமான பிரேமலதா. 

உடல்நலப் பாதிப்பால், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி அவரது மனைவி பிரேமலதாவிடம், கட்சி பணிகளை ஒப்படைத்து உள்ளார். பிரேமலதா பொருளாளராக பதவியேற்றதில் இருந்தே கட்சியை பலப்படுத்தும் பணிகளில், கவனம் செலுத்தி வருகிறார்.  20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால், அதில், தே.மு.தி.க., தனித்துப் போட்டியிட வேண்டும் என்கிற முடிவில் இருக்கும் அவர், 'கட்சி பணிகளுக்கு, கூடுதல் நேரம் செலவிட வேண்டும். பொறுப்பில் இருப்பவர்கள், செயல்படாமல் இருந்தால், பதவி பறிக்கப்படும்' என்று, கறார் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டசபைக்கான தேர்தல் வரலாம் என நம்பும் பிரேமலதா, இருபது சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களிலும்  தனித்து நின்று செல்வாக்கை நிரூபித்தால் நாடாளுமன்ற , சட்டமன்றத் தேர்தலில் தங்களது செல்வாக்கு உயரும் என திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் பிரேமலதா களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், கட்சியில் நிர்வாகிகளை களையெடுக்கும் நடவடிக்கைகளிலும் அதிரடி காட்டி வருகிறார். இந்த திடீர் அதிரடிக்கு காரணம் என்ன?  

2005ம் ஆண்டு கட்சி துவங்கினார் விஜயகாந்த். 2006 சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 2009 நாடாளுமன்ற தேர்தல்களை கூட்டணி சேராமல் தனித்து களமிறங்கினார். தி.மு.க- அ.தி.முக.வுக்கு மாற்றாக தேமுதிக மக்களிடையே செல்வாக்கை பெற்றார். தெய்வத்துடனும், மக்களுடனும்தான் கூட்டணி என்கிற விஜயகாந்தின் முழக்கத்தால ஒவ்வொரு தேர்தலிலும் தே.மு.தி.கவின் வாக்கு வங்கி அபாரமாக அதிகரித்தது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளுக்கும் மேல் தே.மு.தி.க வேட்பாளர்கள் பெற்றனர்.  
அப்போது தே.மு.தி.க 10 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.

அந்த காலகட்டத்தில் இந்த வாக்குகள் தான் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. இதனால், 2011 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.கவுடன் கூட்டணி அமைக்க ஜெயலலிதா விரும்பினார்.  ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகளை விஜயகாந்த் வீட்டிற்கே அனுப்பி வைத்தார். இதனால் கொட்டு முரசு இலையுடன் கூட்டணிக்கு இணைந்தது. அ.தி.மு.க 2011ல் ஆட்சியை கைப்பற்றியது. விஜயகாந்தும் கணிசமான அளவில் எம்.எல்.ஏக்களை பெற்றார். ஆனால் அதன் பிறகு விஜயகாந்த் போட்ட ஒரு சில தப்புக் கணக்குகளால் தே.மு.தி.க செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க – ம.தி.மு.க –பா.ம.க உள்ளிட்ட கட்சிகளுடன் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து தே.மு.தி.க. அப்போது முதல் சறுக்கல் தொடங்கியது.  கூட்டணியில் இடம்பெற்று இருந்த பா.ம.க மற்றும் பா.ஜ.க தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் தே.மு.தி.க வேட்பாளர்கள் சொற்ப அளவிலேயே வாக்குகலை பெற்றனர்.  அதன் பிறகும் கூட வாக்கு வங்கி அடிப்படையில் 2016 தேர்தலில் தே.மு.தி.கவிற்காக காத்திருந்தது தி.மு.க. ஆனாலும், மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தார். 

போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் தே.மு.தி.க வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்திற்கு 3வது இடம் தான் கிடைத்தது. வாக்கு சதவீதம் கூட 5 விழுக்காட்டிற்கும் கீழானது. கடந்த தேர்தலில் தே.மு.தி.கவிற்காக கூட்டணி போடக் காத்துக் கிடந்த கட்சிகள் இப்போது தே.மு.தி.கவை மறந்தே விட்டன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால் அடுத்து எந்தத் தேர்தல் வந்தாலும் தனித்து போட்டியிட வேண்டும் என்கிற முடிவில் பிரேமலதா உறுதியாக இருக்கிறார். 10 சதவீத வாக்குவங்கியை நிரூபித்து காட்டிவிட்டால் அடுத்து வரும் தேர்தலில் முன்பு செல்வாக்கு காட்டமுடியும் என்பது பிரேமலதாவின் கணக்கு. இதனால், மாவட்டம் தோறும் மறுபடியும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை பிரேமலதா முடுக்கிவிட்டுள்ளார். அடுத்து திறம்பட பணியாற்றுபவர்களுக்கு கட்சிப் பதவியும், பணியாற்றாதவர்களின் பதவியை பறிக்கவும் பிரேமலதா திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. 

மருத்துவமனையில் விஜயகாந்திற்கு அளித்த அறுவைச் சிகிச்சைகல் பலனளிக்காத நிலையில், பிரேமலதா கட்சியில் மெற்கொண்டுள்ள அறுவைச் சிகிச்சையாவது பலனளிக்குமா? 

newstm.in
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.