பாஜக அரசுக்கு மு.க ஸ்டாலின் கடும் கண்டனம்!!

  சுஜாதா   | Last Modified : 01 Nov, 2018 08:44 am

mk-stalin-condemned-to-the-federal-government

மத்தியில் ஆளும் பாஜக அரசு ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் தலையிடுவதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தன்னாட்சி அதிகாரம் உள்ள சுதந்திரமான இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தில் ஏழாவது பிரிவைப் பயன்படுத்தி, நேரடியாக மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தலையிடுவதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்றதிலிருந்து மத்திய வங்கியுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரும் இடையூறாகவும், ஆபத்தாகவும் மாறியிருக்கிறது.

உலகம் போற்றும் பொருளாதார நிபுணரான ரகுராம் ராஜனுக்கு கடும் நெருக்கடி கொடுத்து முன்பு ரிசர்வ் வங்கியை விட்டு வெளியேற்றினார்கள். இப்போது அடுத்தகட்டமாக தற்போதுள்ள ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கும் வரலாறு காணாத நெருக்கடி கொடுத்து வீட்டுக்கு அனுப்பத் திட்டமிடுகிறார்கள். இந்த நெருக்கடிகள் தாங்க முடியாமல் உர்ஜித் படேல் ராஜினாமா செய்யவிருக்கிறார் என்று வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திரு விரால் ஆச்சார்யா “ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அந்தஸ்து சீர்குலைக்கப்பட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்” என்று மத்திய அரசின் குறுக்கீடு குறித்து எச்சரித்தப் பிறகும், நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், “கார்ப்பரேட் முதலாளிகளை” காப்பாற்றவும் மத்திய அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்வது மிகுந்த வேதனையளிக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், மீண்டும் ஒரு முறை “கவர்ச்சிகர வாக்குறுதிகளை” அள்ளி விட்டு வாக்காளர்களைத் திசைதிருப்பி ஏமாற்றுவதற்காக, “கடன் வழங்குவது” (lending) “ரொக்க கையிருப்பு” (cash reserve) “பணப் புழக்கம்”( liquidity) “வட்டி விகிதம்” (Interest Rates) போன்ற பல்வேறு ரிசர்வ் வங்கியின் கொள்கைகளில் “பா.ஜ.க.வின் வசதிக்கு ஏற்ற” மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து, நெருக்கடியும் கொடுப்பது மத்திய பா.ஜ.க. அரசின் நான்கரையாண்டு கால நிர்வாக அலங்கோலத்தை நாட்டுக்கு நன்றாகவே உணர்த்தியிருக்கிறது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன்களைப் பெற்ற வைர வியாபாரி நிரவ் மோடி, கிங்பிஷர் விஜய் மல்லையா போன்றவர்களை எல்லாம் பறக்க அனுமதித்த மத்திய பா.ஜ.க. அரசு, இதுபோன்ற பொருளாதார விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.

ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமையையும் சவக்குழிக்கு அனுப்பி, கார்ப்பரேட் முதலாளிகளால் மூழ்கிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைக் காப்பாற்றவும் பா.ஜ.க. அரசு நடத்தும் இந்த அத்துமீறிய அதிகார ஆக்கிரமிப்பு சுதந்திர இந்தியாவில் இதுவரை நடைபெற்றது இல்லை. அரசியல் சட்டத்தின் அடிப்படையில் தன்னாட்சி உரிமை பெற்ற அமைப்புகளின் சுதந்திரம் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்பட்டுவிட்டது.

இப்போது எஞ்சியிருந்த ரிசர்வ் வங்கியின் சுதந்திரமும் பறிக்கப்படுவது நாட்டின் பொருளாதாரத்தில் அக்கறையுள்ள அனைவரையும் மிகுந்த கவலை கொள்ள வைத்துள்ளது. ஸ்திரமான பொருளாதார வளர்ச்சியைக் கொடுக்க முடியாத பிரதமர் நரேந்திரமோடியும், நிதி மந்திரி அருண் ஜெட்லியும் தங்கள் தோல்விகளை மறைக்க இதுவரை எந்த மத்திய அரசும் பயன்படுத்தாத பிரிவு 7-ஐ பயன்படுத்துவது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல நிர்வாக சுதந்திரத்தை தோற்கடிக்கும் திட்டமிட்ட செயலாகும்.

ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை மத்திய பா.ஜ.க அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திசை மாறி தடுமாறிச் சென்று கொண்டிருக்கும் பொருளாதாரத்தைச் சீராக்க பா.ஜ.க. அரசுக்கு எஞ்சியிருக்கின்ற நாட்களில் கூட நிர்வாகத் திறமை இல்லை என்றாலும், தன்னாட்சி உரிமை பெற்ற அமைப்புகளையும் மீட்க முடியாத அளவிற்குச் சிதைத்து விட வேண்டாம் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.