டி.டி.வி.தினகரன் அணியை முடக்க கொலைப்பழி... எடப்பாடி தடாலடி அஸ்திரம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 01 Nov, 2018 09:22 am

sister-is-husband-committed-suicide-murders-complaint-on-t-t-v-dhinakaran-team

கடந்த சில நாட்களாக கரூரில் தங்கியிருக்கும் தம்பிதுரை, கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அரவக்குறிச்சி தொகுதி நிலவரம் பற்றி தொடர்ந்து விசாரித்தும் வருகிறார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தகுதி நீக்கத்தால் பதவியைப் பறிகொடுத்த தொகுதி அரவக்குறிச்சி. இங்கே மீண்டும் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுவிடக்கூடாது எனக் காய் நகர்த்தி வருகிறார் தம்பிதுரை. 

இதுதொடர்பாக தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசித்து வந்தார். ‘செந்தில்பாலாஜி மறுபடியும் இங்கே ஜெயிச்சா அதைவிட அசிங்கம் நமக்கு வேற எதுவும் இல்லை. அவரை இங்கே தோற்கடிக்கணும்னா பணத்தையும் தாண்டி எதாவது செய்தே ஆகணும். என்ன வழின்னு யோசிக்கணும்’ என்று ஐடியா கேட்டிருக்கிறார். அப்போது தம்பிதுரையைப் பார்க்க ஒரு தனலட்சுமி என்கிற பெண் ஒருவர் வந்திருக்கிறார்.

கரூர், ராம்நகர் தெற்கு கே.வி.பி.நகரைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் கோகுல் (எ) கோகுலகிருஷ்ணன். அவரது மனைவிதான் தனலட்சுமி. இவர் முன்னாள் அமைச்சரான செந்தில்பாலாஜிக்கு சித்தி மகள். அதாவது செந்தில்பாலாஜிக்கு தங்கை முறை. போர்வெல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார் கோகுல். கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த கொலை வழக்கில் செந்தில் பாலாஜியின் பெயர் அடிபட்டது. அப்போதைய முதல்வரான ஜெயலலிதா இந்த விவகாரத்தை ஓ.பி.எஸிடம் ஒப்படைத்து விசாரிக்கச் சொன்னார். ஆனால், அப்போது செந்தில்பாலாஜி அதிகார மையத்தில் இருந்ததால் அவர் மீது பெரிய நடவடிக்கை எதுவும் பாயவில்லை. ஆனால், தனலட்சுமி குடும்பம் செந்தில்பாலாஜி மீது இப்போதும் கோபத்தில் இருக்கிறது.

அந்த தனலட்சுமிதான் , உறவினர் ஒருவரின் வேலை விஷயமாக தம்பிதுரையைப் பார்க்கப் போனார். அப்போது இறந்துபோன அவரது கணவர் பற்றி தம்பிதுரை விசாரித்தாராம். ‘என்னோட புருஷன் சாவுக்கு காரணமான அவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க சார்...’ என்று கதறி அழுதாராம். அப்போதுதான் தம்பிதுரைக்கு திடீரென ஒரு ஐடியா உதித்திருக்கிறது. அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜியை எதிர்த்து இந்தப் பெண்ணை வேட்பாளராக நிறுத்தினால், மக்கள் அனுதாபத்தில் ஓட்டுப் போடுவாங்களே என யோசித்திருக்கிறார். இதைப் பற்றி ஆலோசனையும் நடத்தியிருக்கிறார். தனலட்சுமியை மீண்டும் சில இடங்களுக்கு வரவழைத்துப் பேச்சுவார்த்தையும் நடந்திருக்கிறது.

முதல்வர் எடப்பாடியிடமும் இது சம்பந்தமாகப் பேசிய தம்பிதுரை, ‘அந்தப் பொண்ணு மக்கள் முன்னாடி வந்து நின்னு, ‘என் தாலி அறுக்கக் காரணமாக இருந்தவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க...’ என கதறி அழுதாலே போதும். நம்ம மக்கள் மாறிடுவாங்க. அதனால தனலட்சுமியை வேட்பாளராக நிறுத்துவது பற்றி நாம யோசிக்கணும்’ என்று சொல்ல... ‘நல்ல ஐடியாதான்... நம்ம ஊருல எப்பவுமே தாலி சென்ட்டிமென்ட் மக்கள்கிட்ட எடுபடும்... பேசி முடிவு செய்யலாம். இல்லைன்னாலும் அந்த தனலட்சுமியை பிரசாரத்துக்கு பயன்படுத்திக்கலாம்...’ என சொன்னாராம் எடப்பாடி.

இந்தத் தகவல்கள் எல்லாம் செந்தில்பாலாஜி கவனத்துக்கும் போயிருக்கிறது. ‘அம்மா இருக்கும் போதே தம்பிதுரைதான் இந்தப் புகாரை கார்டன் வரைக்கும் கொண்டு போனாரு. இப்போ மறுபடியும் அந்த தனலட்சுமியை கையில் எடுத்திருக்காரு. என் மேல தப்பு இல்லைன்னு அப்பவே அம்மாவுக்கு தெரியும். இப்போ அவங்க என்ன பிரசாரம் செய்தாலும் அது எடுபடாது. உண்மை என்ன என்பது ஊர் காரங்களுக்கு தெரியும். கடன் தொல்லையில் தூக்கு போட்டு சாகுறவங்களுக்கெல்லாம் நான் எப்படி காரணமாக இருக்க முடியும்?’ என்று சொல்லி வருகிறாராம் செந்தில்பாலாஜி. தாலி சென்ட்டிமென்ட் கைகொடுக்குமா என்பது தேர்தல் முடிந்தால்தான் தெரியும்.

newstm.in
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.