தே.மு.தி.க-வை மீட்டெடுக்கத் தயாரான விஜய்... பிரேமலதா நிராகரித்த பகீர் பின்னணி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 01 Nov, 2018 06:32 pm
vijay-ready-to-restore-the-dmk-premalatha-rejects-the-background

சினிமாவைப் போலவே, தனது அரசியல் கணக்கை விஜயகாந்த் மூலம் அதிரடியாகத் தொடங்க விஜய் எடுத்த முடிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து நிராகரித்து விட்டார் பிரேமலதா என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ரஜினி, கமலுக்கு முன்பே பல காலமாக தனது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார் விஜய். ஜெயலலிதா மறைவு, கருணாநிதி மரணத்தால் உருவாகியுள்ள வெற்றிடத்தை நிரப்ப பலரும் கட்சியை ஆரம்பித்து வருகின்றனர். இந்த சமயத்தில் விஜயும் அரசியலில் குதிக்க தயாராகி வருகிறார். ஏனோ குதித்தோம்... எங்கோ தாவினோம் என தனது அரசியல் எதிர்காலம் அமைந்து விடக்கூடாது. கில்லி போல சொல்லி அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய். இதற்காக அவர் போட்டு வைத்திருந்த திட்டம் ரஜினி, கமல் மட்டுமல்ல அனைத்துக் கட்சியினரையும் அதிர வைக்கும் அஸ்திரமாக இருக்கப்போவதாகக் கூறப்பட்டது. 

ஜெயலலிதாவும், கருணாநிதியும் அரசியலில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தபோதே தைரியமாக அரசியல் களத்தில் குதித்தவர் விஜயகாந்த். தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக உருவெடுத்து எதிர்கட்சி தலைவர் பதவி வரை எட்டிப்பிடித்தவர். ஜெயலலிதா, கருணாநிதி என இருதுருவங்களையும் துணிச்சலாக எதிர்த்து களமாடியவர். தற்போதைய நிலையில், அரசியலில் கவனம் செலுத்தி இருந்தால் விஜயகாந்த் தான் அடுத்த முதலமைச்சர் என அடித்துச் சொல்கிறவர்களும் உண்டு. ஆனாலும், நேற்று கட்சி ஆரம்பித்தவர்களும், நாளை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளவர்களும் லைம் லைட்டில் இருக்க,  உடல் நலம் ஒத்துழைக்காததால் முடங்கிக் கிடக்கிறார் விஜயகாந்த். 
விஜயகாந்த் மீது எப்போதுமே விஜய்க்கு ஒரு மரியாதை உண்டு.  அத்தோடு அரசியலிலும் ரோல்மாடலாக விஜயகாந்தைத் தான் நினைத்து வருகிறாராம் விஜய். அவரின் தற்போதைய நிலையை பார்த்து வேதனையடைந்த விஜய், ஆறேழு மாதங்களுக்கு முன் விஜயகாந்த்தை நேரில் பார்த்து நலம் விசாரிக்கச் சென்றிருக்கிறார். 

அப்போது பழைய ஞாபகங்கள் விஜயின் கண்முன் வந்து போயிருக்கின்றன. ‘’நாளைய தீர்ப்பு’ படத் தோல்விக்குப்பின், ஒரு பெரிய ஹீரோவுடன் சேர்ந்து நடித்தால்தான் சினிமாவில் ஒரு இடம் பிடிக்க முடியும் என்று நம்பிய எஸ்.ஏ.சி, தன் மகனை அழைத்துக் கொண்டு போனது விஜயகாந்திடம். “நான் எப்ப வரணும். எங்க வரணும். என்னைக்கு ஷுட்டிங்?” இதுதான் விஜயகாந்த், விஜயின் அப்பாவிடம் கேட்ட கேள்வி. அதன் பிறகு ‘செந்தூர பாண்டி’ என்ற படத்தில் விஜயகாந்துடன் நடித்ததால் பட்டிதொட்டியெல்லாம் போய் சேர்ந்தது விஜயின் புகழ். அந்த ஷுட்டிங் சமயத்தில் கூட, “தம்பிக்கு பைட் வைங்க. கதையை தம்பியை சுற்றியே வைங்க” என்று விஜய்யின் வளர்ச்சிக்காகவே தன்னை அர்ப்பணித்தார் விஜயகாந்த். அந்த நன்றியை எப்போதும் மறக்க மாட்டார் விஜய்.

அதன்பிறகு அங்கு நடந்தவற்றை விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் நம்மிடம், ‘’விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற விஜய் வழக்கம்போல விஜயகாந்திடம் நலம் விசாரித்தார். அப்போது, இயலாமையில் பேச்சு வராமல் கண்ணீர் மல்கினார் விஜயகாந்த். பின்னர் அருகில் இருந்த பிரேமலதா அவரை சமாதானப்படுத்தி விட்டு பேசத் தொடங்கினார். அவருக்கு  கட்சியை வழி நடத்த முடியாமல் போய்விடுமோ என்கிற கவலைதான். அடுத்து என்னவாகும் என்பது தெரியாததால் கலங்கித் தவிக்கிறார். அத்தோடு மகன்களின் எதிர்காலம் பற்றிய கவலையும் அவரை வாட்டுகிறது. அண்ணன், தம்பி இருவரில் ஒருவரையாவது கரை சேர்த்துவிட்டால் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வார்கள் என நினைக்கிறார்.

சண்முக பாண்டியன் இரண்டு படங்களில் நடித்தும் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை. தான் இருக்கும்போதே கரைசேர்த்து விடவேண்டும் என்கிற தவிப்பில் புலம்புகிறார்...’’ என பிரேமலதா பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட  விஜயகாந்த்  ‘’நீ... நம்ம கட்சியை நடத்துறீயா தம்பி...’’ என சன்னமான குரலில் கேட்க, ஷாக்கானார் விஜய். சிறுது நேரம் அமைதி காத்த பிரேமலதாவும் அதையே அமோதித்து, ‘’ஆமாம், தம்பி ... உங்களுக்கும் அரசியல் எண்ணமிருக்கிறது. அவர் ஆரம்பித்த கட்சி அவரோடு போய்விடக்கூடாது. அத்தோடு அவரை நம்பி அரசியலுக்கு வந்தவர்களும் பரிதவிக்கக்கூடாது. தேமுதிகவில் தொண்டர்களும் கணிசமான அளவில் இருப்பது உங்களுக்கு பலமாக இருக்கும். பிற்காலத்தில் தம்பிகளையும் (மகன்கள்) சேர்த்து வழிநடத்துங்க’’ எனக் கேட்டுக்கொண்டாராம் பிரேமலதா. இடை மறித்த விஜயகாந்த், கண்ணீர் மல்க கைகூப்பி சம்மதிக்கும்படி தலையசைத்திருக்கிறார். இதனால், மனம் இளகிப் போன விஜய், மறுப்பேதும் கூறாமல் அப்போது சம்மதித்து இருக்கிறார்.  

அப்போது, முதல் கட்டமாக நானே ஒரு படத்தை என் தயாரிப்பில் எடுக்கிறேன். அதில் சண்முக பாண்டியன்தான் ஹீரோ” என்று விஜயகாந்திடம் வாக்கும் கொடுத்திருக்கிறார் விஜய். அதற்காக பணத்தை கொட்டிவிட்டு ஒதுங்கிவிடுவது சரியில்லை என்பதால்,  தானே உட்கார்ந்து சண்முக பாண்டியனுக்கு ஏற்றவகையில் ஒரு கதையை தேடி வந்தார் விஜய். தேமுதிகவை மீட்டெடுத்து ரஜினி, கமலுக்கு டஃப் கொடுக்க  அதிரடியாக தயாராகி வந்த விஜய்க்கு அடுத்த சில மாதங்களில் ஷாக் கொடுத்து விட்டார் பிரேமலதா. 

விஜயகாந்த் நலமுடன் இருக்கும்போதே தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட பிரேமலதாவுக்கு விஜயிடம் கட்சியை ஒப்படைக்க விருப்பமில்லை. தானே களமிறங்கி கட்சியை நடத்தலாம் என்கிற முடிவுக்கு வந்த அவர், பொருளாளராகி விட்டார். விஜயிடமும் பேச்சுவார்த்தை இல்லை. இதனை கேள்விப்பட்ட விஜய் அவராகவே ஒதுங்கிக் கொண்டார்’’ என்கிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close