செத்துப்போன பல்லியை பருகுவீர்களா..? சர்கார் விவகாரத்தில் ரஜினிக்கு ரிவிட்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 10 Nov, 2018 11:34 am

will-you-eat-a-dead-lizard-rajinikanth-in-the-sarkar-issue

சர்ச்கார் சர்ச்சை விவகாரத்தில் ஏ.ஆர்.முருகதாஸுக்கும், விஜய்க்கும் அறிவுரை கூறியிருக்க வேண்டுமே தவிர கண்டனம் தெரிவித்து  இருக்கக்கூடாது என ரஜினிக்கு அறிவுறுத்தி இருக்கிறது அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா இதழ்.

சர்கார் விவகாரத்தில் அ.தி.மு.வினர் போராட்டம் நடத்தியதைக் கண்டித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘’தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவதும்,  திரையிடத்தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும்,  சட்டத்திற்குப் புறம்பான செயல்கள்.  இத்தகைய செயல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.’எனத் தெரிவித்து இருந்தார்.

இதனைக் கண்டித்து நமது அம்மா நாளிதழ் கிணறு வெட்டின ரசீதும், தணிக்கைச் சான்று ரஜினியும்’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை இன்று வெளியாகி உள்ளது. அதில், ’தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தை எதிர்த்துப் போராடுவது நியாயமா என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அங்கலாய்த்திருக்கிறார்.  உச்ச நட்சத்திரமே உங்க உள்ளத்தை திறந்து சொல்லுங்க,  எல்லா சான்றிதழ்களும் முடிந்து,  வியாபாரத்திற்கு வந்து ஹார்லிக்ஸ் பாட்டில வீட்டுக்கு வாங்கி வந்து அதனை திறக்கும்போது,  அதனுள்ளே ஒரு பல்லி கிடந்தால் எல்லா சான்றிதழ்களும் பெறப்பட்ட ஹார்லிக்ஸை,  கீழே எடுத்துக்கொண்டு போய் கொட்டுவீர்களா? இல்லை, சான்றிதழ்கள் சரியாகத்தான் இருக்கிறது என்று அதனை செத்துக்கிடக்கும் பல்லியோடு சேர்த்து அதுவும் சத்துதான் என்று பருகுவீர்களா?

தணிக்கை குழுவுக்கென்று சில வரைமுறைகள் இருக்கிறது.  அதன் அடிப்படையில் திரைப்படங்களுக்கு சான்றிதழ் கிடைத்து விட்டாலும்  அல்லது தணிக்கை குழுவையும் சரிக்கட்டி தவறான தகவல்களோடு அரசுக்கு எதிராக உள்நோக்கத்தோடு ஒரு மோசமான கருத்து சினிமா என்கிற தலையாய ஊடகத்தின் வழியே பரப்பப்பட்டால் அதனை தடுத்து நிறுத்தத்தானே வேண்டும். நீதிமன்றம்கூட,  மக்களுக்கு விலையில்லாமல் தரப்படும் திட்டங்கள் சமூக நோக்கத்திலானது. அதற்கு எதிராக நாங்கள் எத்தகைய உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று ஏற்கனவே தீர்ப்பே தந்திருக்கும் நிலையில்,  அரசின் முத்திரை அச்சிடப்பட்ட மிக்சியை கொண்டு போய் நெருப்பில் போடுவது போல காட்சி அமைப்பதும் அதனையும் ஒரு தேசிய விருது பெற்ற மூத்த இயக்குநரே முன்னின்று செய்வடும் எவ்வகையில் நியாயம்?

இன்றைக்கு கோடிகளிலே புரளூம் முருகதாசுக்கும், நடிகர் விஜய்க்கும், மாறன் சகோதரர்களுக்கும் அரசு தருகின்ற மிக்சி, கிரைண்டர் போன்றவை இழிவாகத்தோன்றலாம்.  கலையுலகத்தில் கால்பதித்து வெற்றி பெற வேண்டும் என்கிற வேட்கையோடு கோடம்பாக்கத்து வீதிகளிலே அலைமோதிக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் இளைஞர்களுக்கு  அம்மா உணவகம் என்பது ஓர்வகையில் தாய் மடியல்லவா?
இதையெல்லாம் உணர்ந்திருந்தும் இந்த அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டுவதே நோக்கம் என்கிற வக்கிரப்புத்தியோடு மறைந்த தலைவியின் பெயரை  ஒரு கதாபாத்திரத்திற்கு சூட்டி, அவரைப்போலவே ஆடைகள்  தரித்து, அவரது கனவுத்திட்டங்களை அவமானப்படுத்தும் காட்சிகளை வைப்பது எவ்வகையில் நியாயமோ...

அரசுக்கு எதிராக கண் சிவக்க வசனம் பேசினால் மட்டுமே எதிர்காலத்தில் முதலமைச்சராகிவிடலாம் என்று கனவில் மிதக்கிற நடிகர் விஜய்க்கும்,  சரியான புரிதல் இல்லாமல் அரசாங்கத்திற்கே ஆலோசனை சொல்லி அலைகிற அரை வேக்காட்டு இயக்குநர் முருகதாசுக்கும், திருவாளர் ரஜினிகாந்த் அறிவுரை சொல்ல வேண்டுமே தவிர, அதைவிடுத்து கிணறு வெட்டுன ரசீது என்கிட்ட இருக்குன்னு வடிவேலு, காமெடியைப்போல, தணிக்கைச்சான்றை சுட்டிக்காட்டி ஒரு தவறுக்கு சூப்பர் ஸ்டார் வக்காலத்து வாங்கலாமோ...’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.