கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோற்பதற்கும் வைகோ தான் காரணம்: தம்பிதுரை!

  Newstm Desk   | Last Modified : 12 Nov, 2018 01:20 pm
thambidurai-press-meet

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்ததற்கு வைகோ தான் காரணம் என்றும் மூன்றாவது அணி அமைத்த காரணத்தால் மட்டுமே தங்களக்குச் சேர வேண்டிய ஓட்டு பிரிந்து வெற்றி வாய்ப்பு பறிபோனதாக தி.மு.க.வினரே குற்றம் சாட்டினார்கள் என்று அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார். 

அ. தி.மு.க எம்.பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று கரூர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் இந்தியை புகுத்தி தமிழக மக்களை அடிமையாக மாற்ற பார்க்கிறார்கள். 'சர்வ சிக்ஷ அபியான்' என்று சொன்னால் தமிழகத்தில் யாருக்காவது தெரியுமா? எனவே தமிழகத்தில் தமிழ் மொழியில் திட்டங்களை அறிவியுங்கள். காங்கிரசோ அல்லது பா.ஜ.க, யாராக இருக்கட்டும்.  இந்தித் திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. 

தி.மு.க.வும்-காங்கிரசும் இணைந்து 15 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி புரிந்தார்கள்  அந்தக் காலகட்டத்தில் இவர்களின் கூட்டணி காரணமாக தமிழகத்திற்கு ஏதாவது  நன்மைகள் கிடைத்ததா? இவர்களின் கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோதுதான் இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது கூட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்து தி.மு.க  பதவி விலகி வெளியேறவில்லை. இப்போது அதுகுறித்து தி.மு.க. நீலிக்கண்ணீர் வடிப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

தற்போது சந்திரபாபு நாயுடு -மு.க.ஸ்டாலின் சந்திப்பு ஒரு நாடகம். இருவரும் தங்கள் நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றிக்கொள்வார்கள். நாளை மோடியுடனும் ஸ்டாலின் பேசுவார்.

மக்களவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் முயற்சி பலிக்கும் என சொல்லும் இதே வைகோ, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி வெற்றி பெற, பல்வேறு கட்சிகளிடையே தேர்தல் உடன்பாடு ஏற்பாடு வழிவகை செய்துள்ளார். இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான காங்கிரஸ் ஒழிய வேண்டும் என கடுமையாக சாடினார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்ததற்கும் வைகோ தான் காரணம்.  3வது அணி அமைத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டதால் மட்டுமே  வாக்குகள் பிரிந்து வெற்றி வாய்ப்பை இழந்ததாக தி.மு.க.வினரே, வைகோ மீது குற்றம் சாட்டினார்கள். இதனால் இப்போதும் வைகோ மீது மு.க.ஸ்டாலின் கோபத்தில் இருக்கிறார். ஆனால் வெளியே காண்பித்துக் கொள்ளாமல் இருந்து வருகிறார்.

தமிழக மக்கள் அ.தி.மு.க பக்கமே பக்கம் இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அந்தத் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களது கொள்கையை ஏற்றுக் கொண்டு வருபவர்களுடன் அ.தி.மு.க. தலைமை கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று நாடாளுமன்ற துணை சபாநாயகரும், அதிமுகவின் எம்பியுமான தம்பிதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close