இன்னொரு புயல் வராதா..? எடப்பாடி ஏங்கும் அதிர்ச்சி பின்னணி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 16 Nov, 2018 11:51 pm
does-another-storm-fall-shocking-edappadi-background

தமிழகத்தை புரட்டிப் போட்டிருக்கிறது கஜா புயல். ஆனால், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் புயல் பாதிப்பு என்பது முடிந்த அளவு தவிர்க்கப்பட்டு இருக்கிறது. ‘மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. எனது பாராட்டுக்கள்..’ என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் என கட்சி பாகு பாடின்றி அனைவருமே அரசாங்கத்தைப் பாராட்டி வருகிறார்கள்.

வர்தா புயல் வந்தபோது முதலமைச்சராக இருந்தவர் ஓ.பி.எஸ் அதுவரை மிக்ஸர் முதல்வர் என கேலிக்குள்ளானவர், தனது துரித நடவடிக்கையால் மக்கள் மத்தியில் போற்றப்பட்டார். இதனை மனதில் வைத்து வர்தாவிற்கு பிறகு எந்தப்புயலும் தமிழகத்திற்கு வரத் தயங்குகிறது என அவ்வப்போது அவர் மார்தட்டிக் கொண்டார்.அடுத்து காஜா புயல் கலங்கடிக்கப்போவதாக மிரட்டியது. இப்போது துரிதாமமாக கையாண்ட எடப்பாடி பழனிசாமி அரசுக்கு  காஜா புயல் அதே இமேஜை பெற்றுக் கொடுத்திருக்கிறது. 

சென்னைக் கடற்கரை சாலையில் எழிலகத்தில் இருக்கும் மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தே வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடலோர மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டு மையங்களில் பேசுவது, அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசுவது என பிஸியாகவே இருந்தார். மீடியாவுக்கும் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அப்டேட் கொடுத்தபடியே இருந்தார். நேரம் கடந்தபடியே இருந்தது. இரவு 9.30 மணி ஆகியும் அமைச்சர் அந்த சீட்டை விட்டு எழுந்திருக்கவில்லை. அதன் பிறகுதான் ஊழியர்கள் கொஞ்சம் நெளிய ஆரம்பித்தார்கள். அமைச்சர் உதயகுமாரிடம் அதிகாரி ஒருவர் போய்தான், ‘சார் இன்னும் யாரும் சாப்பிடவே இல்லை. எல்லோரையும் கிளம்பச் சொல்லலாமா? காலையில் சீக்கிரம் வந்துடலாமா?’ என கேட்டிருக்கிறார்.

‘வருஷம் முழுக்கவா இப்படி வேலை பார்க்கிறோம். பல மாவட்டங்களில் ராத்திரி என்ன ஆகும்னு தெரியலை. மக்கள் உசிரை கையில புடிச்சிட்டு உட்கார்ந்திருப்பாங்க. நமக்கு தூக்கம் முக்கியமாகிடுச்சா? ஒருநாள் தூங்காமல் இருந்தால் எதுவும் ஆகிடாது. எல்லோருக்கும் டிபன் இங்கேயே வாங்கிட்டு வரச் சொல்லிடுவோம். ‘ என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியே போனார் அமைச்சர். அங்கிருந்து அமைச்சர் உதயகுமார் கிளம்பிவிட்டார் என்றுதான் அதிகாரிகள் நினைத்தார்கள். ஆனால், ரெஸ்ட் ரூம் போய்விட்டு போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டார். இரவு உணவுக்கும் அமைச்சர் உதயகுமாரே ஆர்டர் கொடுத்திருக்கிறார். அமைச்சர் மறுபடியும் வந்து உட்காருவார் என அதிகாரிகள் யாரும் எதிர்பார்க்கவே இல்லை.வந்து உட்கார்ந்தவர், அதிகாரிகளை விரட்ட ஆரம்பித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலோ, ‘அமைச்சரே நேரடியாக வந்து உட்கார்ந்து இருக்காரு. அவரு கிளம்பும் வரை நாம யாரும் வீட்டுக்குப் போக கூடாது.’ என்று அதிகாரிகள் சொல்ல... யாரும் இரவு வீட்டுக்குக் கிளம்பவில்லை. மணி நள்ளிரவு 1 மணியை கடந்தபடி இருந்தது. 15 நிமிடத்துக்கு ஒருமுறை மீடியாவை கூப்பிட்டும் பேசினார் உதயகுமார். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் அந்த கட்டுப்பாட்டு மையத்துக்கு அந்த நள்ளிரவு நேரத்தில் வந்தார். அவரும் நடவடிக்கைகள் பற்றி உதயகுமாரிடம் பேசினார். மீடியாவுக்கும் பேசினார். நள்ளிரவு 2 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து உதயகுமாருக்கு போன் வந்திருக்கிறது.

‘எவ்வளவு அலர்ட் கொடுக்க முடியுமோ கொடுத்துட்டு இருக்கேண்ணே... பெரிய அளவு சேதம் இல்லாமல் தவிர்த்துடலாம்..’ என்று உதயகுமார் சொல்ல... ‘பார்த்துட்டுதான் இருக்கேன். நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்களேன்...’ என்று எடப்பாடியும் சொல்லியிருக்கிறார். ‘இல்லண்ணே பார்த்துக்குறேன். படுத்தால் எழுந்திருக்க முடியாது’ என்று சொன்னாராம் உதயகுமார். பிறகு 3 மணி, 4 மணி என காலை ஆறு மணி வரையிலுமே முதல்வர் எடப்பாடியும் மணிக்கொருமுறை உதயகுமாருடன் பேசியிருக்கிறார். காலை 7 மணிக்குதான், ‘நான் போய் குளிச்சிட்டு வந்துடுறேன்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பியவர் குளித்த கையோடு, கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போய்விட்டு, மறுபடியும் பேரிடர் மீட்பு மையத்துக்கு வந்துவிட்டாராம்.

அதன் பிறகு எடப்பாடி மீண்டும் உதயகுமாருடன் பேசியிருக்கிறார். ‘ராத்திரி முழுக்கவே நீங்க தூங்காமல் இருந்து மீட்பு நடவடிக்கைகளை கவனிச்சது பற்றி ஊரே பெருமையாக பேசுது. ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு. எல்லா அமைச்சர்களும் உங்களை மாதிரியே வேலை பார்த்தால், யாரு தயவுமே இல்லாமல் நாம அடுத்த எலெக்‌ஷன் எப்போ வந்தாலும் ஜெயிச்சுடலாம். அந்த அளவுக்கு மக்கள்கிட்ட நல்ல பெயரை சம்பாதிச்சு கொடுத்துட்டீங்க. அதுக்கு நம்ம கட்சி சார்பிலும், அரசாங்கத்து சார்பிலும் நிச்சயம் உங்களை நாங்க பாராட்டியே ஆகணும்’ என்று வாழ்த்து சொல்லியிருக்கிறார் முதல்வர்.

’இதே போல் இன்னொரு புயல் வந்து நாம் இதே போல் செயல்பட்டால் தமிழகத்தில் மீண்டும் நமது ஆட்சி தான் என்று அதிமுக அமைச்சர்கள்’ என ஏங்கித் தவிக்கிறார்கள்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close