’சசிகலா சொல்றதெல்லாம் நடக்காது...’ சிறையில் செக் வைத்த டி.டி.வி.தினகரன்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 19 Nov, 2018 11:10 am
t-t-v-dhinakaran-who-checked-in-jail

சசிகலாவைச் சந்திக்க அடிக்கடி பரப்பன அக்ரஹாரா சிறைக்குத் தினகரன் சென்று வருவது தெரிந்த விஷயம்தான். ஆனால், தனியாகக் கட்சி ஆரம்பித்த பிறகு திவாகரன் குடும்பத்தார் யாரும் சிறைக்குச் சென்று சசிகலாவைச் சந்திக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் மட்டும் பரப்பன அக்ரஹாரா போய்விட்டு வந்திருக்கிறார். காலையில் சிறை வாசலுக்குச் சென்ற அவரை மாலை வரை காக்க வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள். அதன் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ஜெய் ஆனந்த்.

அப்போது சிறைக்குள் இருந்த பெண் அதிகாரி ஒருவர், ‘ சாரி சார்... ரொம்ப நேரம் வெய்ட் பண்ணச் சொன்னால் நீங்க கிளம்பிடுவீங்கன்னு நினைச்சோம். அதுக்காகத்தான் காக்க வெச்சோம்.’ என்று சொல்ல.. ‘அத்தையைப் பார்க்கத்தானே வந்தேன். பார்க்காமல் எப்படிப் போவேன்...’ என்று அந்த அதிகாரியுடன் நெருக்கமாகிவிட்டாராம் ஜெய் ஆனந்த். அப்போது அந்த அதிகாரி சொன்ன விஷயங்களைக் கேட்டு, உச்சபட்ச டென்ஷனில் இருக்கிறாராம் ஜெய் ஆனந்த். அந்த அதிகாரி சொன்னது இதுதான்.

‘நீங்களோ அல்லது உங்க அப்பாவோ சசிகலா மேடத்தைப் பார்க்க வந்தால் உள்ளே அனுமதிக்க வேண்டாம்னு உங்க குடும்பத்திலிருந்து அடிக்கடி வரும் ஒருவரே ஜெயில் அதிகாரிக்குச் சொல்லி வெச்சிருக்காரு. அதிகாரிகளைச் சிறப்பாக அவரு கவனிச்சிட்டு போவதாலதான் நீங்க வரும்போதெல்லாம் இங்கே எதோ ஒரு காரணத்தைச் சொல்லி உங்களைப் பார்க்கவிடாமல் செய்யுறாங்க. நீங்க வந்த விஷயம் கூட சசிகலா மேடத்துக்குத் தெரியாது. யாரும் சொல்லவும் மாட்டாங்க..’ என்று சொன்னாராம்.

அதன் பிறகுதான் சசிகலாவைச் சந்தித்திருக்கிறார் ஜெய் ஆனந்த். அப்போது சசிகலாவிடம், ‘நானோ அப்பாவோ இங்கே வந்தால் மாமாவுக்குப் பிடிக்கலை. உங்களைச் சந்திக்க விடாமல் எங்களைத் தடுக்கும் சக்தியே அவருதான். நானும் அப்பாவும் அவரோட விஷயத்துல தலையிடுறதே இல்ல. நாங்க உண்டு எங்க வேலை உண்டுன்னுதான் இருக்கோம். ஆனால் அவருதான் எங்களை ஏதோ ஜென்ம விரோதியாகப் பார்க்கிறாரு. நாங்க கட்சின்னு ஒண்ணு ஆரம்பிச்சாலும், இதுவரைக்கும் அதிமுகவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியதில்லை. காரணம், அது அம்மா வளர்த்த கட்சி. அவருதான் எந்த நேரமும் அதிமுகவை அழிக்கணும் என்ற நோக்கத்தோடு பேசிட்டு இருக்காரு.

இன்னைக்கு பதவிக்காகவும் அரசியலுக்காகவும்தான் எங்களைத் தூக்கிப் போட்டுட்டாரு. அம்மா இறந்த நாளிலிருந்து எத்தனை நாள் நான் உங்களைப் பார்த்துப் பேசியிருக்கேன். நான் என்ன கட்சியோட தலைவராக என்னை ஆக்கச் சொல்லியா கேட்டேன். கட்சியில் எதாவது ஒரு பொறுப்பு கொடுக்கச் சொல்லித்தானே உங்ககிட்டயே சொன்னேன். நான் கட்சிக்குள் வந்தால் வளர்ந்துடுவேன் என்ற ஒரே காரணத்துக்காகத்தானே என்னை ஓரங்கட்டினாரு. நம்ம சொந்தக்காரங்ககிட்ட என்னை குடிகாரன்னு சொல்லி திட்டியிருக்காரு. நான் குடிச்சதை அவரு வந்து பார்த்தாரா... இல்லை எனக்கு அவரு ஊத்திக் கொடுத்தாரா? அவரு இவ்வளவு பேசியும் நாங்க பொறுமையாத்தான் போயிட்டிருக்கோம். காரணம், உங்களுக்கு இனியும் எதுவும் கெட்ட பெயரு வந்துடக் கூடாதுன்னுதான்! நீங்க எங்க அப்பாவுக்குத் தங்கை. எனக்கு அத்தை. நாங்க உங்களை வந்து பார்த்தால் என்ன ஆகிடும்? நானோ அப்பாவோ இங்கே வந்தால், உங்களைப் பார்க்கவே அனுமதிக்காதீங்கன்னு ஜெயில் அதிகாரிகளை ஸ்பெஷலா கவனிச்சு சொல்லி வெச்சுட்டுப் போயிருக்காரு. அப்போ அவரோட மன நிலை எப்படி இருக்கும்னு பாருங்க...’ என்று கொட்டித் தீர்த்துவிட்டாராம்.

அதற்கு சசிகலாவோ, ‘’நான் உங்களைக் கொஞ்சம் பொறுமையா இருக்கச் சொன்னேன். கட்சியில் உங்களுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கிறதுக்குத்தான் நான் பேசிட்டு இருந்தேன். அதுக்குள்ள அண்ணனும் ஏதோ வாயை விட்டுட்டாங்க. அத்தோடு விட்டிருக்கலாம். தனிக்கட்சி ஆரம்பிச்சதுதான் எல்லோரையும் கோபமாக்கிடுச்சு. சரி இனியாவது கொஞ்சம் அமைதியா இருங்க. வீணாக அவரோட பகையை வளர்த்துக்க வேண்டாம். ஆயிரம்தான் இருந்தாலும் அவரும் நம்ம உறவுதான். எல்லாமே சரியாகிடும். அந்த நேரத்துல நீங்க எல்லோருமே என்னோடு இருக்கணும். நம்ம குடும்பமே இப்படி அடிச்சுகிட்டு ஆளுக்கொரு பக்கம் பிரிஞ்சு நிற்கிறது எனக்கு மனசுக்குக் கஷ்டமா இருக்கு. நீங்க இதுக்கு முன்னாடி இங்கே வந்தது எனக்குத் தெரியாது. என்னைப் பார்க்க யாரு வந்தாலுமே நான் பார்த்துட்டுத்தான் இருக்கேன்‘ என்று சொன்னாராம்.

ஜெய் ஆனந்த் அத்துடன் நிற்கவில்லை. ‘நீங்க சொல்றது சரிதான். நாங்க எதுவும் பேசாமல் இருந்தாலும் அவரு இருக்கணுமே. அவரை அடக்கி வைங்க. அவரு பேசினால் நாங்க பதில் கொடுத்துத்தான் ஆகணும். நீங்க சொன்னதை எல்லாம் அப்பாகிட்டயும் நான் சொல்றேன்’ என்று சொல்லியிருக்கிறார். சசிகலா, இளவரசி இருவருமே சேர்ந்து ஜெய் ஆனந்தை ஆறுதல்படுத்தித்தான் அனுப்பியிருக்கிறார்கள்.
இந்தத் தகவல்களை எல்லாம் ஜெய் ஆனந்த், தனது அப்பா திவாகரனிடம் சொன்னாராம். அதற்குத் திவாகரனோ, ‘சசி சொல்றதெல்லாம் எதுவும் அங்கே நடக்காது. அதான் எல்லாம் அவரு கட்டுப்பாட்டுக்கு போயிடுச்சே... நீ எப்பவும் போல வேலைகளைப் பாரு...’என்று சொல்லியதாகக் கூறுகிறார்கள். 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close