ஆளுநரை முந்திய எடப்பாடி பழனிசாமி... திடீர் விசிட் பின்னணி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 21 Nov, 2018 12:29 pm
the-pastor-of-the-governor-was-edappadi-palanisamy-sudden-visit

கஜா புயல் நிவாரணப் பணிகளில் மெத்தனமாக இருப்பதால் அமைச்சர்களுக்கு டெல்டா பகுதிகளில் வலுத்துவரும் எதிர்ப்பு முதல்வரின் விசிட்டின்போதும் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், அதையும் தாண்டி முதல்வர் பார்வையிடக் கிளம்பியதற்குக் காரணம் ஆளுநர்தான் என்கிறார்கள் உயர் போலீஸ் வட்டாரங்களில். ஏற்கனவே ஆளுநர் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று ஆய்வு செய்வதும் அதற்கு எதிர்ப்பு கிளம்புவதுமாக இருக்கும் நிலையில், கஜா புயல் சேதப் பகுதிகளைப் பார்வையிட ஆளுநர் தயாரானார். மத்திய அரசு நிதி வழங்குதில் மெத்தனம் காட்டுவதாக முதல்வர் சார்பில் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், ஆளுநரே நேரடியாகச் சென்று ஆய்வு செய்து ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன.

முதல்வரின் கவனத்துக்கு இதை எடுத்துச் சென்ற உளவுத் துறையினர், ’ஆளுநருக்குப் பிறகு முதல்வர் பார்வையிட்டால் அது நன்றாக இருக்காது. மேலும் பல விமர்சனங்களைக் கிளப்பும்’என்று கூறியிருக்கிறார்கள். இதன் பிறகே மீண்டும் களத்தில் இருக்கும் அமைச்சர்களைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் முதல்வர். காவல்துறை உயரதிகாரிகளிடமும் பேசியிருக்கிறார். அதன் பிறகே, ‘ஆளுநருக்கு முன்னால நாம் பார்வையிட்டு விடணும். அதனால உடனடியாக ஏற்பாடு பண்ணுங்க’ என்று உத்தரவு போயிருக்கிறது.

அதன்படி நேற்று காலை 5.45 ஏர் இந்தியா விமானத்தில் திருச்சி செல்ல முதல்வருக்கு டிக்கெட் போடப்பட்டது. விமானம் 1 மணி நேரம் 25 நிமிடம் தாமதமாக 7.10க்குத்தான் கிளம்பியது. திருச்சி விமான நிலையத்தில் நிவாரணப் பணிகளை கவனிக்க நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் காத்திருந்தார்கள். அங்கே ஒரு மினி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் முதல்வர். 'ரெண்டு நாளா ஏரியாவுக்குள் போகும்போது மக்கள் வரவேற்பு எப்படி இருந்துச்சு?' என்று கேட்டிருக்கிறார். அதற்கு அமைச்சர் வேலுமணி, ' பாதிப்பு ரொம்பவும் அதிகமாக இருக்கு. அதனால் மக்கள் கோபமும் அதிகமாகத்தான் இருக்கு. பல இடங்களில் நாங்க போகும் வண்டியை மறிக்கிறாங்க. அவங்களை சமாளிச்சு போறதுக்குள்ள ரொம்பவும் திண்டாட்டமாகிடுது. எங்களுக்கே இப்படின்னா நீங்க வரும்போது எதிர்ப்பு இன்னும் அதிகமாகத்தான் இருக்கும்...' என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு முதல்வர், 'நீங்க சொன்னதைத்தான் உளவுத் துறையும் சொல்லி இருக்காங்க. அதனாலதான் எந்த ஏரியாவில் நான் விசிட் பண்றேன் என்பதை முன்கூட்டியே யாருக்கும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன். ஒரு லிஸ்ட் போட்டு இந்த பகுதிக்கு போறோம்னு சொல்லிட்டா அங்கெல்லாம் பிரச்னை பண்றதுக்கும் மறியல் பண்றதுக்கும் ரெடியா இருப்பாங்க. அதனால எல்லாமே திடீர் புரோகிராமா இருந்தால் அந்த பிரச்னை இருக்காது. நம்ம அமைச்சர்களுக்குக்கூட அந்த புரோகிராம் லிஸ்ட் தெரிய வேணாம்னு சொல்லிட்டேன்' என்று சொல்லியிருக்கிறார். அதன் பிறகு நிவாரணப் பணிகள் தொடர்பாகப் பேச்சு மாறியிருக்கிறது. அதையெல்லாம் முடித்த பிறகுதான் ஹெலிகாப்டரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நோக்கிப் புறப்பட்டார் முதல்வர்.

முதல்வரின் வருகைக்காக திருச்சி, மதுரை மண்டலங்களில் இருந்து ஆறு மாவட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஏற்கனவே திட்டமிட்டபடி பாதுகாப்பான இடங்களாக மூன்று இடங்களைத் தேர்வு செய்த முதல்வர் அங்கே பார்வையிட்டுவிட்டு... நாகை, திருவாரூர் மாவட்டங்களைப் பார்வையிடாமலேயே திரும்பிவிட்டார். ஆளுநரின் விசிட்டுக்குப் பிறகு தன் விசிட் அமைந்துவிடக் கூடாது என்பதாலேயே வானிலையையும் மீறி முதல்வர் பயணத் திட்டத்தை அமைத்தார். பாதியில் திரும்பினாலும் பரவாயில்லை என்று தெரிந்துதான் இந்தப் பயணத்தை முதல்வர் மேற்கொண்டார். அதேபோல பயணமும் பாதியில் முடிந்துவிட்டது. புயலின் ‘கண்’ பகுதியான கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் மக்கள் முதல்வரின் பயணம் ரத்தானதால் மேலும் கோபமாகியிருக்கிறார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close