ராஜினாமா செய்துவிடுவேன்... மிரட்டும் எடப்பாடி... அலறும் அமைச்சர்கள்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 28 Nov, 2018 12:45 pm
cm-post-resign-edappadi-says

உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தொகுதியில் சட்டக் கல்லூரி ஒன்று உருவாகி வருகிறது. இதன் கட்டுமான பணிகளுக்கான டெண்டர் 38 கோடி ரூபாய்க்கு முடிவாகியிருக்கிறது. அமைச்சர் அன்பழகன் தனக்கு வேண்டப்பட்ட உள்ளூர்க்காரர் ஒருவருக்கு இந்த டெண்டரை வழங்க எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். அந்த நேரத்தில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து போன் வந்திருக்கிறது.

’உங்க தொகுதியில் சட்டக் கல்லூரி கட்டட டெண்டரை ஈரோடு வெங்கடாஜலபதி குரூப்ஸ்க்கு கொடுக்கச் சொல்லி இருக்கேன். உங்களுக்கு வேண்டியது வந்துடும். அதனால நீங்க அதுல தலையிட வேண்டாம்’ எனச் சொல்லியிருக்கிறார். அதற்கு அன்பழகன், ‘எனக்கு வேண்டப்பட்ட ஒருத்தர் இங்கே கேட்டிருந்தார். அவரு நம்ம கட்சிக்காரர்தான். அவருக்கு வாங்கித் தர்றதா நான் சொல்லியிருக்கேன்’ எனச் சொல்ல, முதல்வரோ, ‘உங்களுக்கு என்ன வேணுமோ அதை கொடுக்கச் சொல்லிட்டேன். இதுல நீங்க தலையிட வேண்டாம்’ என கறாராகச் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாராம்.

அன்பழகன் தனக்கு நெருக்கமானவர்களிடம் இந்த விஷயத்தைச் சொல்லி புலம்பித் தீர்த்துவிட்டாராம். ‘எந்த வேலையும் என்னால எடுக்க முடியலை. யாருக்கும் எதையும் செஞ்சு கொடுக்க முடியல. உனக்கு என்ன வேணுமோ அது வந்துடும்னு அவரு சொல்றாரு. ஆனால் எவனும் எதுவும் கொடுக்குறது இல்லை...’ என்று வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார் அன்பழகன். அதேபோல, கொறடா ராஜேந்திரன் தொகுதியான அரியலூரில் நீதிமன்றம் கட்டும் பணிக்கான டெண்டர் 28 கோடிக்கு முடிவாகியிருக்கிறது. அந்த டெண்டரை ராஜேந்திரன் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார். அவரிடமும் முதல்வரே பேசி, ‘அந்த காண்டரக்ட்ட நான் சொல்றவங்க எடுத்துக்குவாங்க. உங்களுக்கு வர வேண்டியது வந்துடும்...’ என்று சொல்லிவிட்டாராம். ஆனால், ராஜேந்திரனுக்கும் இதுவரை வரை எதுவும் வரவில்லையாம். முதல்வர் சொன்னாலும் இதுவரை யாருக்கும் எதுவும் கிடைக்கவில்லையாம்.

இது பற்றியெல்லாம் முதல்வரிடம் சில அமைச்சர்கள் நேரடியாகவே பேசியிருக்கிறார்கள். ‘எல்லா வேலைகளையும் நீங்களே எடுத்துக்குறீங்க. எந்த அமைச்சருக்கும் எதுவும் கிடைக்கிறது இல்லை. நீங்க அவங்க கொடுப்பாங்க. வர வேண்டியது வந்துடும் என்றெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க. ஆனா யாருக்கும் எதுவும் வரவே இல்லை’ என்று சொன்னார்களாம். அதற்கு முதல்வரோ, ‘நான் போய் கவர்னரைப் பார்த்து ராஜினாமா செய்துட்டுப் போய்டுவேன். ஆட்சியை கலைக்கச் சொல்லிடுவேன். எனக்கு எதுவுமே இல்லை’ என்று அதிரடியாக சொல்ல.. ஆடிப்போய்விட்டார்களாம் அமைச்சர்கள்.

முதல்வரைப் பொறுத்தவரை இதுவரை இரண்டு அமைச்சர்களின் துறைகளில் மட்டும்தான் எதுவுமே தலையிடவில்லையாம். அந்த இரண்டு அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும்தான். ஓ.பன்னீர் அணி சார்பில் இணைந்தவர்களில் பன்னீர், மாஃபா தவிர வேறு யாருக்கும் அமைச்சரவையில் இடம் இல்லை. அந்த அணியைச் சேர்ந்தவர்களுக்கு கட்சியிலும் முக்கியத்துவம் இல்லை என்ற குறை பன்னீர் ஆதரவாளர்களிடம் இன்னும் இருக்கிறது. ஆனால் ஆரம்பத்திலிருந்தே எடப்பாடியை ஆதரித்துவரும் அமைச்சர்கள் மத்தியிலும் இப்போது கோபக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. அமைச்சர் என்ற பெயர்தான் இருக்கிறதே தவிர எதுவும் செய்ய முடியவில்லை. எல்லா அதிகாரமும் எடப்பாடியிடம்தான் இருக்கிறது என்று அவர்களும் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி செயல்பட முடியாத அமைச்சர்கள் எல்லாம் ஒன்றுசேர ஆரம்பித்துவிட்டார்கள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close