அதிமுக கூட்டணியில் வைகோ- திருமாவளவன்.. எடப்பாடி அதிரடி வியூகம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 29 Nov, 2018 01:13 pm
vaiko-thirumavalavan-in-the-aiadmk-coalition-edappadi-action-strategy

திமுக கூட்டணியில் துரைமுருகன் போட்ட தூபம் இன்னும் புகைந்துகொண்டுதான் இருக்கிறது. கருணாநிதி மறைவுக்கு பின் ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என சபதம் செய்தார் வைகோ. ஈரோட்டில் நடந்ர்த மதிமுக மாநாட்டில் திமுக பொருளாளர் துரைமுருகன் பங்கேற்றார். வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விருதுநகர், ஈரோடு, காஞ்சிபுரம் உட்பட 4 தொகுதிகளில் மதிமுக போட்டியிட விரும்புகிறது. இந்த விருப்பத்தை கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பிருந்தே ஸ்டாலினிடம் கூறி வந்தார் வைகோ. ஆனால், ஸ்டாலின் எந்த உறுதியும் கொடுக்கவில்லை. 

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகியோர் அதிகாரபூர்வமான கூட்டணியில் இல்லை. கூட்டணி என்பது வேறு, நட்பு என்பது வேறு என்று  துரைமுருகன் திடீர் குண்டு போட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த வைகோ ‘திமுக கூட்டணியில் மதிமுக இருக்கிறதா? இல்லையா? என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் . துரிமுருகன் கருத்து என் மனதை புண்படுத்தி விட்டது’ எனக் குமுறினார். ஆனால் துரைமுருகன் பேச்சுக்கு இதுவரை திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமோ, மறுப்போ அளிக்கவில்லை. ஆனால் இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட திருமாவளவன், வைகோ ஆகியோரிடம் ஸ்டாலினே பேசியும் விட்டார்.

‘நானும் உடனே இதைப் பத்தி மீடியாக்களிடம் பேசினால் அது இன்னும் பெரிதாக விவாதிக்கப்படும். அதனால் அவர் பேசினது போகட்டும். நாம் ஆக வேண்டியத பார்ப்போம்’ என்று இருவரிடமும் சொன்ன ஸ்டாலின், இந்தப் பிரச்சினைக்கு பதில் சொல்வதற்காகவே மேகதாது அணைக்கட்டு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி திமுக கூட்டணியை அப்படியே தக்கவைக்கும் வேலையில் இருக்கிறார். இதனைத் தொடர்ந்து நேற்று வைகோவை ஸ்டாலின் சந்தித்து ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் கூட திமுக கூட்டணியில் மதிமுக இருக்கிறதா? என்பதை ஸ்டாலின் உறுதிபடுத்தவில்லை. 

முன்னதாக, துரைமுருகனின் பேட்டி சர்ச்சைக்குள்ளாகி திமுக கூட்டணிக்குள் குழப்பம் என்ற தகவல் கேள்விப்பட்டதுமே முதல்வர் எடப்பாடி வேறு கணக்கை போட்டுவிட்டார். நாகைக்குக் கிளம்புவதற்கு முன்னால் அமைச்சர் வேலுமணியிடம் திமுக கூட்டணிக் குழப்பம் குறித்து பேசியிருக்கிறார். ‘2016 தேர்தலில் வைகோ, திருமாவளவன் , கம்யூனிஸ்டுகள் எல்லாம் சேர்ந்து மக்கள் நலக் கூட்டணி அமைக்கவில்லை என்றால் நாம் இப்போது ஆட்சியில் இருந்திருக்க முடியாது. திமுக மேலும் 20 இடங்களில் வெற்றிபெற்று இருந்தால் அவர்கள்தான் இப்போது ஆளுங்கட்சி. அதனால் நாம ஒருவகையில் வைகோவுக்கும், திருமாவுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

வைகோவுக்கு திமுகவில் நிலைமை சரியில்லை. கஜா விஷயத்துல அவர் தமிழக அரசைத் தொடர்ந்து பாராட்டினது ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை. ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்துதான் அவர் என்னைக் கூடத் தாக்கிப் பேசியிருப்பார் என நினைக்கிறேன். வைகோவை அவங்க கூட்டணியில் இருந்து நிச்சயம் ஏதாவது சொல்லி கழட்டிவிடத்தான் பார்ப்பார்கள்.  வைகோகிட்ட பேசிப் பாருங்கள். அம்மா அவரை அண்னன்னு கூப்பிட்டிருக்காங்க. அவர் நம்ம கூட வந்தால் நமக்கு களத்தில் பெரிய பலமாக இருக்கும். நம்மளைப் பற்றி நமக்கே தெரியாத ப்ளஸ் பாயிண்டுகளை எல்லாம் வைகோ எடுத்துச் சொல்வார். அதனால்  அவரரிடம் முதலில் பேசுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி.

இதையடுத்து அமைச்சர் வேலுமணி தனக்கும் வைகோவுக்கும் நெருக்கமான கோவை வட்டாரத் தொழிலதிபர் ஒருவரிடம் இதுபற்றிப் பேசியிருக்கிறாராம். அவரும் வைகோவிடம் இதுபற்றிப் பேசுவதாகச் சொல்லி அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருப்பதாகத் தகவல். 
வைகோ மீது மட்டுமல்ல திருமாவளவனை நோக்கியும் எடப்பாடியின் கவனம் முன்பே திரும்பியிருக்கிறது. சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் தன்னைச் சந்தித்த திருமாவளவனிடம் நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார் எடப்பாடி. அப்போது தனது பர்சனல் செல் நம்பரைக் கொடுத்த எடப்பாடி, ‘எதுனாலும் என்கிட்ட பேசுங்க. செகரட்டரி மூலமா பேச வேணாம். என்ன உதவி வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் என்கிட்ட பேசுங்க. கீழேயிருந்து வந்திருக்கும் என்னைப் போன்றவங்களுக்கு உங்க ஆதரவு வேணும்’ என்று வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். திருமாவளவனும் நன்றி சொல்லிவிட்டு வந்திருக்கிறார். தொடர்ந்து திருமாவளவனிடமும் எடப்பாடியின் சார்பில் சிலர் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

திமுக கூட்டணியில் நடக்கும் குழப்பங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் எடப்பாடி, அங்கே வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட கட்சிகளின் கீழ் மட்ட நிர்வாகிகள் திமுக கூட்டணியை விரும்புகிறார்களா என்பது பற்றி ரிப்போர்ட் தருமாறும் உளவுத்துறையைக் கேட்டிருக்கிறாராம். அந்த ரிப்போர்ட்டை வைத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் இருக்கும் என்கிறார்கள்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close