உளவுத்துறையின் செட்-அப்... எடப்பாடியை அதிர வைத்த டெல்டா மக்கள்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 29 Nov, 2018 08:10 pm

edappadi-visit-delta-set-up-of-the-intelligence-service

சென்னையிலிருந்து ரயிலில் நாகைக்குப் போய், ஒரே நாளில் சென்னைக்கு திரும்பி வந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அமைச்சராக இருந்தபோதுகூட, அதிகமாக ரயில் பயணத்தை அவர் விரும்பியதில்லை. அமைச்சர்கள் சொந்த ஊருக்குச் செல்லும்போது ரயிலில்தான் செல்ல வேண்டும் என ஜெயலலிதா ஒருமுறை அறிவுறுத்திய சமயத்தில் மட்டும் சில முறை சேலத்துக்கு ரயிலில் போனார். அதன் பிறகு எல்லாமே விமானமும், காரும்தான் எடப்பாடியின் விருப்பம். முதல்வரான பிறகு இதுதான் முதல் ரயில் பயணம்.

முதல் வகுப்பு ஏ.சியில் இருவர் மட்டும் இருக்கக்கூடிய கூபே எடப்பாடிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக ரயிலில் பயன்படுத்தும் பெட்ஷீட், தலையணை, கம்பளிக்கு பதிலாக எடப்பாடி வீட்டில் இருந்தே அத்தனையும் கொண்டுவரப்பட்டு ரயிலில் விரிக்கப்பட்டன. எடப்பாடியுடன் அதே கூபேவில் பயணித்த இன்னொருவர் ஆத்தூர் இளங்கோவன். மற்ற உதவியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருமே அதே பெட்டியில் மற்ற கூபேவில் இருந்தார்கள். தாம்பரம் ரயில் நிலையத்திலும், செங்கல்பட்டு ரயில் நிலையத்திலும் மட்டும் அதிமுக நிர்வாகிகள் திரண்டு வந்து முதல்வருக்கு டாடா காட்டினர்.

ரயிலில் இருந்தபடியே அவர்களுக்கு வணக்கம் மட்டும் சொன்னார் எடப்பாடி. சென்னையில் இருந்து கிளம்பும்போதே அமைச்சர்களுக்கு சில உத்தரவுகள் எடப்பாடி தரப்பிலிருந்து போயிருந்தது. ‘அமைச்சர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊர்களில் இருந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும். முதல்வர் வரும் பகுதிக்கு அமைச்சர்கள் யாரும் வர வேண்டிய அவசியம் இல்லை. அந்தப் பகுதிகளில் அமைச்சர்கள் இருந்தால் முதல்வரே அவர்களை சந்திப்பார். முதல்வரைப் பார்ப்பதற்கு என யாரும் வர வேண்டாம்.’ என்பதுதான் அந்த உத்தரவு. அதனால் எடப்பாடியை சந்திக்க மற்ற மாவட்டங்களில் இருந்த அமைச்சர்கள் யாரும் வரவில்லை.

நாகையிலிருந்து அதிகாரிகள் காட்டிய வழியில்தான் எடப்பாடி பயணித்தார். அதிகாரிகள்தான் எங்கே எடப்பாடி நிற்க வேண்டும், யாரிடம் பேச வேண்டும் என்பதையெல்லாம் முடிவு செய்தனர். ஆனால் அதையும் தாண்டி சில இடங்களில் மக்கள் ஆக்ரோஷமாக கூச்சலிட அதிகாரிகளை கையமர்த்திவிட்டு பொதுமக்களுடன் பேசினார் எடப்பாடி. வேட்டைக்காரனிருப்பு நிவாரண முகாமுக்கு எடப்பாடி போனார். அங்கே தங்கியிருப்பவர்களில் யார் முதல்வரிடம் பேச வேண்டும் என்பதை எல்லாம் அதிகாரிகள் முன்கூட்டியே தயார் செய்து வைத்திருந்தனர்.

ஆனால் அதிகாரிகளின் கணக்கு அங்கே தப்பானது. கூட்டத்தில் இருந்தவர்கள் திடீரென எழுந்து பேச, அதிகாரிகளாலோ, காவல் துறையாலோ அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘எங்களை இங்கே கொண்டு வந்து 15 நாளா அகதிகள் மாதிரி தங்க வெச்சிருக்காங்க. சோறு மட்டும் போட்டால் போதுமா?” என்று ஒரு பெண்மணி கோபத்தோடு கேட்டார். அவரை சமாதானப்படுத்திய முதல்வர், ‘உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க..? ‘ என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணியோ, ‘நாங்க எங்க வீட்டுல போய் சமைச்சு சாப்பிடணும். அதுக்கு என்ன வழியோ அதை செய்யுங்க. எங்களால கையேந்தி நின்னு சாப்பிட முடியலை. செத்துடலாம் போல இருக்கு..’ என்று அழ ஆரம்பித்தார். ‘நீங்க உடனடியாக வீட்டுக்குப் போறதுக்கு அடிப்படையாக என்ன செய்யணுமோ அதை செஞ்சு கொடுக்கச் சொல்றேன்.. கவலைப்பட வேண்டாம். நான் இருக்கேன்’ என்று ஆறுதல் சொன்னார். ஆனால் மக்களைத்தான் சமாதானப்படுத்த முடியவில்லை.

சில இடங்களில் அதிகாரிகள் நினைத்த மாதிரி அவர்கள் திட்டமிட்டவர்கள் பேசினார்கள். பல இடங்களில் பொதுமக்கள்தான் பேசினார்கள். இரவு திருவாரூரில் இருந்து திரும்பி சென்னைக்கு வரும்போது, ‘நாம நினைச்சதை விட பாதிப்பு அதிகமா இருக்கு. ஹெலிகாப்டரில் இருந்து பார்த்தபோது கூட எனக்கு தெரியலை. மக்கள் ரொம்பவே கஷ்டப்படுறாங்க. நாம கொடுக்கிறதை வாங்கி சாப்பிடுறதை அவங்க கௌரவ குறைச்சலா நினைக்கிறாங்க. அவங்க எல்லோரும் உடனடியாக வீட்டுக்குப் போக என்ன ஏற்பாடு செய்யணுமோ அதற்கான வேலைகளை தொடங்கணும்...’ என்று அதிகாரிகளிடம் சொல்லி வந்தாராம் முதல்வர்.

இரவு ரயில் கிளம்பிய பிறகு கூட, சில அதிகாரிகளை தனது கூபேவுக்கு அழைத்துப் பேசியிருக்கிறார் முதல்வர். விடியற்காலை 4.50 மணிக்கு எழும்பூரில் வந்து இறங்கும் போது, எந்தவித கலக்கமும் இல்லமல்தான் ரயிலை விட்டு வெளியே வந்தாராம் எடப்பாடி!

newstm.in
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.