கஜா புயல் நிவாரண நிதி... எடப்பாடி அரசுக்கு கல்தா... மத்திய அரசு பகீர் ப்ளான்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 30 Nov, 2018 02:15 pm

why-do-not-you-come-nirmala-sitharaman-who-made-the-delta-silk

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும் என்று மாநில அரசின் தரப்பில் மக்களிடம் வாக்குறுதி கொடுக்கிறார்கள். தமிழக அரசு, ரூ.15,000 கோடி நிவாரண நிதி கேட்டுள்ளது. ஆனால், இடைக்கால நிவாரண நிதியைக்கூட மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை. ‘நிபுணர் குழு, என்னதான் அறிக்கை கொடுத்தாலும் சொற்பத் தொகையை மட்டுமே மத்திய அரசு வழங்கும்’ என்கிறார்கள் மத்திய அரசுக்கு நெருக்கமான அதிகாரிகள். நிதியை ஒதுக்கி மாநில அரசு மூலம் நிவாரணம் வழங்குவதை நேரடியாகவே மத்திய அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி நற்பெயரை எடுக்க டெல்லி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் செயல்பாடுகளும், வாக்குறுதிகளும் அதனை உறுதிப் படுத்துகின்றன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசிய அவர், ’தமிழக அரசு ராணுவ உதவியை கேட்கவில்லை. ஏன் கேட்கவில்லை என்பதும் புரியவில்லை’ என மாநில அரசு மீது குற்றம்சாட்டினார்.  ஒரு லட்சம் வீடுகள் மாநில அரசு மூலம் கட்டித்தரப்படும் என அறிவித்து இருந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என அறிவித்து இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

'மக்களுக்கு தேவையானவற்றை கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். மின்சாரம் வரும்வரை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவைகளெல்லாம் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள். நாளடைவில் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளது. அவைகள் பிரதமர் மூலமாகவே நடைபெறும். மத்திய அரசு மூலமாகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். இடைக்காலத்தில் கிடைக்க வேண்டிய உதவிகள், நீண்ட நாட்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும் என்று சொல்லத்தான் வந்திருக்கிறேன்.

இந்தப் பகுதி மக்கள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. நான்கு, ஐந்து மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுப்படையாக நாம் சொன்னது தஞ்சாவூர். இங்கிருந்து சோழர்கள் எங்கெல்லாமோ போய் பிரகதீஸ்வரர் கோவில் போன்று பெரிய பெரிய கோவில்களை கட்டியுள்ளனர். கம்போடியாவில், இந்தோனேஷியாவில் கட்டியிருக்கிறார்கள். இங்கிருந்து சென்றவர்கள்தான். இங்கிருந்துதான் நாடு முழுக்க தேவையான அரிசியை அனுப்பி வைத்திருக்கிறீர்கள். தஞ்சாவூர்தான் நம்ம நாட்டுக்கே களஞ்சியம். அப்படிப்பட்ட இந்த பகுதிக்கு பெயர், புகழ் வாங்கிக்கொடுத்த நீங்கள் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது. 

கேளுங்க. கேள்வி கேளுங்க. ஏன் வரலன்னு கேளுங்க. நீங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது எப்படி பேசினாலும் நாங்க தப்பா எடுத்துக்கொள்ள மாட்டோம். நிச்சயமாக உங்களுக்கு உதவி செய்ய மத்திய அரசு இருக்கிறது. மாநில அரசும் எங்களுக்கு ஒத்துழைக்கிறது. இந்த கஷ்ட நேரத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் மனசு கசிந்து பேச வேண்டாம். மனசு வேதனைப்பட வேண்டாம். தைரியமாக இருங்கள். உதவி கண்டிப்பாக உங்களை தேடி வரும். நீங்க கேட்கும் உதவி வரும். தைரியமாக இருங்கள். நம்பிக்கையை இழக்க வேண்டாம்’’ என நிர்மலா சீதாராமன் அனுசரணையாக பேசியதும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ஒக்கி புயல் பாதித்தபோது கன்னியாகுமரியில் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட வந்திருந்தார் அவர். ’அப்போது 300 மீனவர்களை காணவில்லை... இப்போது வந்து என்ன செய்யப்போகிறீர்கள்’ என பாதிக்கப்பட்ட மீனவர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர்கள் மீது கடும் கோபம் கொண்டு வெடித்துக் கிளம்பினார் நிர்மலா சீதாராமன். அப்போது மட்டுமல்ல செய்தியாளர்கள் கூட்டத்திலும் கறாராக பேசுபவர் இப்போது, நீங்கள் என்ன கேட்டாலும் கோபப்பட மாட்டேன் என ‘அன்பா சொல்லனும்’ என்கிற பக்குவத்தோடு பேசுகிறார்.  

’’விவசாய காப்பீடு திட்டத்திற்கான  தேதியை நீட்டிக்க வேண்டும். நாளைக்குள் கட்ட முடியாது என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மாநில அரசுக்கு ஒரு ஆலோசனை சொன்னேன். எத்தனை விவசாயிகள் கட்ட முடியாமல் இருக்கிறார்களோ, அவர்களுக்கு மாநில அரசே அதற்கான தொகையை கட்டிவிட்டு, பின்னர் இழப்பீட்டு தொகை வரும்போது அந்த தொகையை கழித்துவிட்டு கொடுத்துவிடுங்கள். அதனைவிட்டு ஏன் அவர்களை அலைய விடுகிறீர்கள் என்று சொன்னேன். மாநில அரசு அதனை செய்ய வேண்டும். நாங்களும் மத்திய அரசிடம், விவசாயிகளுக்கான தொகையை சீக்கிரம் கொடுங்கள் என்று வலியுறுத்துகிறோம்’’ என்று அவர் கூறினார்.

இதன் மூலம் மாநில அரசு விவசாயக் காப்பீட்டிற்காக பாதிக்கப்பட்டவர்களை அலைக்கழிக்கும் விதமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டும் வகையில் நிர்மலா சீத்தாராமன் பேசியுள்ளார். தேர்தல் நெருங்குவதால் மக்கள் மனதில் இடம்பிடிக்க நேரடியாகவே மத்திய அரசு மக்களை நெருங்கத் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அதிகாரிகள்.   

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.