’செத்தவன் குடும்பத்தை சூறையாடும் ஆக்டோபஸ்...’ ராமதாஸால் வன்னியர்கள் அதிர்ச்சி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 01 Dec, 2018 02:35 pm

the-octopus-looting-the-dead-family-vanniyars-shocked-by-ramadoss

மறைந்த காடுவெட்டி குருவின் குடும்பத்திற்குள் நடைபெற்று வரும் விவகாரங்கள் பரபரப்பைக் கிளப்பி வருகின்றன. இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பது பாமகவை சேர்ந்த ராமதாஸ் எனக் குமுறுகிறார்கள் வன்னிய இளைஞர்கள். இந்த விவகாரத்தில் ராமதாஸை பற்றிய பல குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிர்ந்து வருகின்றனர்.  அதில், செந்தில் பொன்னுசாமி என்பவர் பகிர்ந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன.

’அரசியலில் பாமக அடியெடுத்து வைத்தபோது ஜெயங்கொண்டம் பகுதியில் காடுவெட்டி குரு தனியார் சிமெண்ட் தொழிற்சாலை கம்பெனியின் ஒரு பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைத்தார். அதற்காக அந்த கம்பெனி கொடுத்த ஒரு கோடி ரூபாய் பணத்தை அப்படியே டாக்டர் ராமதாசிடம் கொடுத்து நல்ல பேரை சம்பாதித்தார். இதனால், காடுவெட்டி குரு மீது ராமதாசுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. பின்னர் கட்சியில் நன்றாக செயல்பட்டு வந்ததால் இப்பகுதியில் இவரை வளர்த்தால் நமக்கு ஏதாவது பிரச்சினை வந்து விடும் என்று நினைத்தார். இதனால், அந்த காலகட்டத்திலேயே டாக்டர்.ராமதாஸ் தனது மனைவி சரஸ்வதியின் நெருங்கிய உறவு பெண் சொர்ணலதாவை திருமணம் செய்து வைத்தார். இந்த திட்டம் தெரியாமல் திருமணம் செய்து கொண்ட காடுவெட்டி குரு திருமணத்திற்கு பின்பு அறிந்து அதிர்ச்சியானார்.

ஆனால், திருமணம் செய்துவைத்தது டாக்டர் ராமதாஸ் என்பதாலும்,  அவரது உறவுப் பெண் என்பதாலும் வேறு வழியின்றி குடும்பத்தை நடத்தினார். பின்னர் முதல் குழந்தை பிறந்ததும் அதற்கு விருத்தாம்பிகை என்று பெயரிட்டார். உள்ளூரில் வளர்ந்தால் நம்மைப் போன்று பிரச்சினையில் சிக்கிக் கொள்வார். நன்றாக படித்து பெரிய ஆளாக வர வேண்டும். அதற்கு சென்னையில் படிக்க வைத்தால் தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்தார். அதற்காக மும்பையில் 70 ஆயிரத்துக்கு கப்பல் துறைமுகத்தில் சம்பளத்தில் பணிபுரிந்து வந்த தனது தங்கை கணவர் அன்பழகனை சென்னைக்கு வரவழைத்தார். ’’எனது குடும்பத்தையும், உனது குடும்பத்தையும் நன்றாக பார்த்து பிள்ளைகளை வளர்க்க வேண்டும் நன்றாக படிக்க வைக்க வேண்டும்.

நம் கிராமம் அதற்கு சரியாக வராது நீ சென்னை சென்று பசங்களை நன்றாக படிக்க வை’’ என்று சொன்னதை ஏற்று அவரது தங்கையும் உடனிருந்து பிள்ளைகளை படிக்க வைத்தார். பின்னர் கனலும் சென்னையிலேயே படிக்கத் தொடங்கினார். சிறுவயது முதலே குருவின் மனைவி லதாவுக்கும் அவரது இரண்டு பிள்ளைகளுக்கும் தாயாக இருந்து எந்த ஒரு பாசத்தையும் காட்டாதவர். அதற்கு காரணம் படிக்காத பெண்ணை நம்மீது கட்டி வைத்து விட்டார்களே நம் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க முடியாதே என்ற கோபத்தால் குரு கடைசிவரை மனைவியோடு பிள்ளைகளை ஒன்றாக பழக வைத்ததே கிடையாது. இது காடுவெட்டியிலுள்ள அனைவருக்கும் நன்றாக தெரியும். காடுவெட்டி குரு ஊரில் வீட்டில் இருந்ததைவிட ஊர் ஊராக சுற்றிதுதான் அதிகம்.

பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் என்று டாக்டர் ராமதாசுக்கு விசுவாசமாக குரு இருந்து திமுக தலைவர் கருணாநிதியையும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையும் வம்புக்கு இழுத்து நையாண்டி செய்து பேசி அனைவரையும் உசுப்பேத்துவார். இதன் பின்னணியில் டாக்டர் இருப்பார். அவர் சொல்வதை வேத வாக்காக கருதி செயல்பட்டவர். இப்படி இருந்த குரு கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு காணப்பட்டார். கடந்த 2017 இறுதியில் விழுப்புரத்தில் நடந்த பாமக வன்னியர் சங்க மாநாடு தான் கடைசியாக காடுவெட்டி குரு கலந்து கொண்டது. அதன் பின்னர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சையில் இருந்தார்.

பின்னர் கொஞ்சம் தேறி காடுவெட்டி கிராமத்தில் இருந்தார். கடைசியாக உடல் நலிவுற்று காடுவெட்டி கிராமத்திலிருந்து சென்னைக்கு வருவதற்கு அவரது டெம்போ ட்ராவலர் டீசல் போடுவதற்கு கூட காசு இல்லை என்ற நிலையில்தான் காடுவெட்டி குரு இருந்தார். அப்போது அவரது இளைஞர் படை யைசேர்ந்த பலர் வைத்திருந்த பணத்தை வைத்துதான் டீசல் போட்டுக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தார். அவரது உறவினர்கள் வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கலாம் என்று ஜெயங்கொண்டத்தில் உள்ள பிளாட்டுக்கள் விற்பதற்கு தயாரானபோது அனைத்துச் செலவுகளையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் எதையும் விற்க வேண்டாம் என டாக்டர் ராமதாஸும், அன்புமணியும் என்று சொல்லி விட்டார்கள்.  தனியார் மருத்துவமனையில் இருந்தவருக்கு சரியான சிகிச்சைக்கான பணத்தை கூட முழுமையாக அவர்கள் கட்டவில்லை. அப்பொழுது குருவின் சகோதரிகளும், மாப்பிள்ளைகளும் சேர்ந்து வெளிநாட்டிற்கு எப்படியாவது அழைத்து செல்லலாம் என்று மகன், மகள் எவ்வளவு முயன்றும் டாக்டர் ராமதாஸ் கும்பலால் மிரட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு விரட்டி அடித்தார்கள்.

அப்பொழுதே குரு சாவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே தன் குடும்பத்தினரிடம், ‘ நான் டாக்டர் ராமதாஸையும், அன்புமணியையும் நம்பி வீணா போயிட்டேன். உங்கள் யாரையும் நான் இருந்த வரையில் பாட்டாளி மக்கள் கட்சியில் வன்னியர் சங்கத்தில் நமது உறவினர்கள் ஒருவரைக்கூட பொறுப்பில் வைத்தது கிடையாது. நான் இறந்த பிறகும் டாக்டர் ராமதாஸை நம்பி நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். அது எல்லாம் என்னோட போய் முடியட்டும். நீங்கள் நல்லபடியா இருங்க. மகள் விருத்தாம்பிகையை மனோஜுக்கு திருமணம் செய்து வைத்து விடுங்கள் என்று கூறியதை குடும்பத்தாருக்கு நினைவு வந்தது. அதனால் திருமணத்தை நடத்தி வைத்து உயிரோடு இருக்கும் குருவின் காலில் ஆசி வாங்கி விடலாம் என்று குடும்பத்தார்கள் எண்ணியபோது, டாக்டர் ராமதாஸ் கும்பல் ’அதெல்லாம் இல்லை குரு தேறிவந்து விடுவார். அவர் உயிரோடு இருக்கும் போது தான் திருமணத்தை நடத்த வேண்டும்’ என்று சொல்லி அப்போது தடுத்து விட்டார்கள்.

வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை அளித்திருந்தால் கண்டிப்பாக பிழைத்திருப்பார் என்பது குருவின் மகன் கனல் அரசன், மகள் விருத்தாம்பிகை மற்றும் குருவின் தங்கைகள், குருவின் தாய் கல்யாணி அம்மாள் ஆகியோரது நம்பிக்கை. கடைசியாக ராமதாஸ் கும்பலால் தடுக்கப்பட்டதால் 2018 மே 25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்து போனார் குரு. அப்பொழுது காடுவெட்டி குருவின் பூதவுடல் காடுவெட்டி கிராமத்திற்கு வந்த பொழுது கிராமமே கண்ணீர்விட்டு கதறி அழுதது. டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு போவதை தடுத்ததால் தான் குரு இறந்து போனார் என்ற செய்தி கிராமம் முழுவதும் பரவியது. ராமதாஸும், அன்புமணியும் வந்தால் அவர்களை தாக்குவது அல்லது பழி தீர்ப்பது என்ற முடிவுக்கு இளைஞர்கள் வந்தார்கள்.

இதனை அறிந்த டாக்டர் ராமதாஸ் திண்டிவனத்தில் இருந்து கிளம்பிய உடன் பாண்டிச்சேரியில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி விட்டார். அதன்பிறகு அந்தச் செய்தியை காடுவெட்டி கிராமத்திற்கு தகவலாக  சொல்லி ’ஐயா உயிருக்கு ஆபத்தாக இருக்கிறார்’ என்ற பொய்யான காரணத்தை கூறி கிராமத்திற்குள் நுழைந்தார். கிராமவாசிகளும், இளைஞர்களும் டாக்டர் ராமதாஸையும், அன்புமணியையும் நா கூசும் வார்த்தைகளால் திட்டினார்கள் என்பது அங்கிருந்த பத்திரிகையாளர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் நன்றாக தெரியும். பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் படத்திறப்பு நிகழ்ச்சி நடந்தது. காடுவெட்டி குரு குடும்பத்திற்கு கடன் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு இருப்பது ராமதாசுக்கு தெரிந்தும் ஒரு உதவியும் செய்யவில்லை. இதனால் கோபமடைந்த கனல் அரசன், காடுவெட்டி குரு டெம்போ டிராவலர் வேன் கடனை அடைப்பதற்காக விற்கப்போவதாக சமூகவலைதளங்களில் தகவல் பரப்பினார். அதன்பிறகு டாக்டர் ராமதாஸ், மாநில துணை பொதுச்செயலாளரும், குருவால் வளர்க்கப்பட்டவருமான வைத்தியை அழைத்து காடுவெட்டி ஊர் பிரமுகர்களையும், தைலாபுரம் தோட்டத்திற்கு வரவழைத்தார். ’வேனையெல்லாம் விற்க வேண்டாம். நான் பார்த்து உதவி செய்கிறேன்’ என அனைத்து கடனை அடைக்க என்று உறுதிமொழி கொடுத்தார். 

அதன் பிறகே டாக்டர் ராமதாஸின் நாடகம் காடுவெட்டி குருவின் உறவினர்களுக்கு தெரிய வந்தது. டாக்டர் ராமதாஸோ, குருவின் மனைவி லதாவை தனது கட்டுப்பாட்டில் வைக்க தொடங்கினார். இதன் பின்னர் குருவின் மகன் தனது தாயை அவரது உறவினர்கள் கடத்தி வைத்திருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டை சமூக வலை தளங்களில் வெளியிட்டார். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஒரு கடிதத்தை சமூகவலைதளங்களில் லதா கையெழுத்திட்டு ’என்னை யாரும் கடத்தவில்லை. காடுவெட்டியிலுள்ள குருவின் சகோதரிகள் அவரது கணவன்மார்கள் என்னையும் ஒழித்து கட்ட திட்டம் போட்டு கொண்டிருக்கிறார்கள். எனக்கும் என் பிள்ளைகளுக்கும் அவர்களால் ஆபத்து இருக்கிறது’’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இரண்டு பிள்ளைகள் காடுவெட்டி குருவின் தாயார், குருவின் சகோதரிகளோடுதான் இருந்தார்கள் என்பது இந்த செய்தியில் அனைவரும் கவனிக்கத்தக்கது. ராமதாஸின் திட்டம் குருவின் மகள் விருத்தாம்பிகையை தனது உறவினரான முன்னாள் எம்.பி தன்ராஜ் மகனுக்கு திருமணம் முடித்து வைப்பதற்காக எப்படியாவது கடத்திவிட வேண்டும் என்று திட்டம் போட்டார்கள். இந்த சூழ்நிலையில் தான் காடுவெட்டி குரு பெயரில் அவரது மகள் விருத்தாம்பிகையை தலைவராகக் கொண்டு ஒரு அறக்கட்டளை முன்கூட்டியே ஆரம்பித்து வைத்தது இருந்தார்கள்.  குருவுக்கு மணிமண்டபம் கட்டுவதாக கூறி பல கோடி வசூலித்து ஒரு ரூபாய் கூட தன் குடும்பத்திற்கு தரவில்லை என்ற கோபத்தை பாமக பிரமுகர் வைத்தியிடம்  தாய் கல்யாணியம்மாளின் கோபப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரல் ஆனது.
இப்படிப்பட்ட நிலையில் காடுவெட்டி குரு குடும்பத்தினர் அதாவது, குருவின் தாய் கல்யாணி அம்மாள், குருவின் மகன் கனல் அரசன், குருவின் மகள் விருத்தாம்பிகை. குருவின் தங்கைகள் நான்கு பேர் என்று மொத்தம் ஏழு பேர் ஒன்று கூடி குருவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் அவரது உயிரை காவு வாங்கிய டாக்டர் ராமதாஸ் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

கம்போடியாவில் நடந்த உலக சத்திரியர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று திட்டம் போட்டார்கள். அதில் கனல் அரசனை அழைத்துச் செல்ல அந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தீரனின் மருமகனுமான சீனிவாச ராவ் ஏற்பாடு செய்திருந்தார். (இவர் வேறு யாருமல்ல. பசுமை தாயகத்தை முதலில் ஆரம்பித்து உலகம் முழுவதும் கொண்டு சென்றவர். பின்னர் அதனை அன்புமணி அபகரித்து பசுமை புரட்சியாளர் ஆனது என்பது அது தனிக்கதை) இந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கு கனல் மைனர் என்பதால் அவரது தாய் லதா கையெழுத்து வாங்குவதற்கு சென்றார். ஆனால், ராமதாஸின் கும்பல் கனல் அரசனை பார்க்க விடாமல் துரத்தி அடித்தனர். அதன் பின்னர்தான் வீடியோவாக குமுறிக் கொட்டினார் கனல்.

தற்போது விருத்தாம்பிகையை ராமதாஸ் கும்பல் எப்படியாவது கடத்திக் கொண்டு சென்று தன்ராஜ் மகனுக்கு திருமணம் செய்து வைத்து அடைத்து வைத்து விட்டால், அக்காவின் வாழ்க்கை நரகமாகிவிடும். ராமதாஸ் கும்பலால் அப்பா பட்ட கஷ்டங்களே போதும் என்று முடிவெடுத்து, கடந்த 28 11 2018 புதன்கிழமை கும்பகோணத்தில் விருத்தாம்பிகைக்கும் மனோஜுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.
இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று டாக்டர் ராமதாஸ் கனவில் கூட எண்ணிப் பார்த்திருக்க மாட்டார். நாம் போட்ட திட்டம் தவிடு பொடியாகி விட்டதை எண்ணி... அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து... தீபாவளிக்கு அப்பாவுக்கு படைக்கவேண்டும் வா அம்மா’ என்று கனல் அழைத்த போது கூட வராத லதா ’29ம் தேதி வியாழக்கிழமை  டாக்டர் ராமதாசு சொன்னவுடன், பாமக வைத்தி புடைசூழ காடுவெட்டி வந்து கண்ணீர் கம்பலையுமாக மீடியாவுக்கு பேட்டி கொடுத்தார்.

டாக்டர் ஐயா தான் எனக்கு மருத்துவ உதவிகளை செய்தார் என்று கூறியிருக்கிறார் லதா. அப்படி என்றால்  ராமதாஸின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார் என்கிற உண்மையை உலகிற்கு லதாவே உணர்த்தியிருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாமா..?! இப்பொழுது ஒரு உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.. காடுவெட்டி குருவின் சொத்துக்களை அபகரிப்பதற்காக எனது மகளை அந்த கும்பல் திருமணம் செய்து கொண்டது என்பது லதா கூறுவது உண்மையானால்... லதாவின் இரண்டு பிள்ளைகளில் ஒரு பிள்ளைகளாவது தாயுடன் அல்லவா இருந்திருக்க வேண்டும்... இருந்தார்களா ? இப்போது காடுவெட்டி குரு குடும்பத்தில் நடக்கும் குழப்பங்களுக்கு நேரடி காரணம் டாக்டர் ராமதாஸும், அன்புமணியும் தான். ராமதாஸ் அரசியல் எதிரிகளை ஒழித்துக்கட்டுவதில் ஏ.கே.நடராஜன், தீரன், வாழப்பாடியார், பலராமன் தொடங்கி பலர் அடக்கம்.
தற்பொழுது காடுவெட்டி குரு மகளும், மருமகனும் குருவின் மகன் கனல் அரசனும், கும்பகோணம் காவல் நிலையத்தில் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் கொடுத்திருக்கிறார்கள். குருவின் வீட்டில் இருந்த தாய் கல்யாணி அம்மாளை ராமதாஸின் கும்பல் 29ம் தேதி அடித்து வெளியேற்றிவிட்டு உடனிருந்த அவரது தங்கையும் வெளியேற்றிவிட்டது.

குருவின் மனைவி லதாவை அந்த வீட்டில் அமரவைத்து வைத்தியின் அடியாட்கள் துணையோடு அந்தவீட்டில் குடியிருக்கிறார்கள். நடுநிலைவாதிகள், முற்போக்குவாதிகள், திராவிட கட்சிகள், இந்த சம்பவத்தை பார்த்து ஒரு கருத்தை கூட இதுவரை சொல்லாமல் இருக்கிறது. இவர்களெல்லாம் கட்சி நடத்துகிறார்களா..? என்று கேட்கும் அளவிற்குதான் இருக்கிறது. ஒரே குடும்பத்தில் ஏழு பேர் குருவின் ஆன்மாவிற்கு கட்டுப்பட்டு இருக்கும் பொழுது.... ஒருவர் மட்டும் தனியாக இருந்து அந்த வீட்டை அபகரித்து இருக்கிறார் என்றால் மகன் வீட்டில் தாய் இருக்க உரிமை இல்லையா.? இதற்கு யார் விடை சொல்ல போகிறார்கள்? ஆனால், காடுவெட்டி குருவின் தாய் வீடியோவில் சொன்னது போல் ’செத்தவன் நல்லவனா இருந்தா உங்கள இன்னும் ஒரு வருஷத்துல சும்மா விடமாட்டான்டா’ என்று சொன்னதற்கு இயற்கைதான் விடை சொல்ல வேண்டும்.

காடுவெட்டி குருவால் அடையாளம் காணப்பட்ட வைத்தி இன்றைக்கு குருவின் குடும்பத்தையே நாசமாக்க துணிந்து விட்டார். வைத்திக்கு பலகோடி சொத்துக்கள் வந்தது எப்படி.? அரியலூர் மாவட்ட போலீசையே தன் கைக்குள் வைத்திருக்கிறார். நடவடிக்கை அரசு எடுக்குமா.? பொறுத்திருந்துதான் பார்க்கா வேண்டும்’ எனக் குமுறி இருக்கும் அந்தப்பதிவில் நடந்ததாக சொல்லப்பட்டிருக்கும் தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இருப்பினும் நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது இந்த விவகாரத்தில் ராமதாஸ்- அன்புமணி தலையீடு இருப்பது உண்மை என்பது தெளிவாக விளங்குகிறது. 

newstm.in
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.