ஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடந்த அதிமுக... சுளுக்கெடுத்த எம்.ஜி.ஆர்..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 05 Dec, 2018 12:22 pm

jayalalithaa-s-feet-fell-on-the-aiadmk-sprinkled-mgr

ஜெயலலிதா என்றால் நினைவுக்கு வருவதில் அவரது காலில் கட்சியினனரை விழ வைத்த கலாச்சாரத்திற்கு முக்கிய இடமுண்டு.   கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்களும், ஜெயலலிதாவை விட மூத்தவர்களும் பகிரங்கமாக தங்கள் பணிவை காலில் விழுந்து வெளிக்காட்டியதை அவரும் உள்ளூர ரசித்தார். 

அதிமுகவில் ஜெயலலிதா கோலோச்சத் தொடங்கியிருந்தர். அப்போது கிராமப் புறங்களுக்கு ஹெலிக்காப்டரில் சென்ற போது ஒரு வேடிக்கையான நிகழ்வு நடந்தது. அவர் ஹெலிக்காப்டரில் இருந்து வெளியே எட்டிப்பார்த்தபோது, வேட்டி அணிந்து வரிசையாக நின்ற கட்சி தொண்டர்கள் நெடுஞ்சாண் கிடையாக நிலத்தில் விழுந்தார்கள்.  எழுந்து நின்றபோது அவர்களது வெள்ளை வேட்டி முழுவதும் செம்மண் புரண்டு சிவப்பு நிறமாகக் காட்சியளித்தது, கண்கொள்ளாக் காட்சி. ஒருமுறை காலில் விழுவது குறித்து ஆங்கிலப்பத்திரிக்கையாளர்  அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜெயலலிதா, ’எனது ஆதரவாளர்கள் என் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துவதற்காக  தாமாகவே முன்வந்து அதைச் செய்வதால் என்னால் அதைத் தடுக்க முடியவில்லை’ எனக் கூறினார். இது மேம்போக்கான பதில். காலில் விழுவதை ஜெயலலிதா விரும்பினார்.  அதை ஊக்குவிக்கிறார் என்பது அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் உறுதிப்படுத்தின. 

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவை விட்டு விலகிய கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து வந்தார். ஒரு கட்டத்தில் அதிமுகவில் இணைய திரும்பி வந்தார். தம்மை இழிவுபடுத்திவிட்டு திரும்பி வந்துள்ள அவரை சாட்சிப்படுத்த ஊடகங்கள் வரவழைக்கப்பட்டன. செய்தியாளர்களுக்கு புகைப்படமெடுக்க நல்ல ஒரு காட்சி கிடைக்கவில்லை என்று சாக்குச் சொல்லி சிரித்தபடி அமர்ந்திருந்தார்  ஜெயலலிதா. பெரிய மீசையும் தடித்த உருவமும் கொண்ட கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரனை ஜெயலலிதா முன் நான்கு முறை மண்டியிட வைத்தார்கள். அந்தப் புகைப்படம் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தது. 

1991ல் சட்டமன்றதேர்தல் வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் சென்னை மெரீனாவில் கூடியது. ராஜீவ் காந்தி வழக்கம்போல தனி விமானத்தில் வந்தார். அந்தக் கூட்டத்துக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத ஆர்.எம்.வீரப்பன் வரவில்லை. நாவலர் தலைமையுரை ஆற்றினார். அந்த மேடையில்தான் ஜெயலலிதா காலில் விழும் கலாசாரம் அப்பட்டமாகத் தொடங்கியது. சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஜெயலலிதா அறிமுகம் செய்தபோது, கே.ஏ.கே, மயிலை ரங்கராஜன், தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் ஸ்ரீதர் தவிர மற்ற அனைவரும் ஜெயலலிதாவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள். அதைப் பார்த்த ராஜீவ் காந்தியே கொஞ்சம் அசந்து போனார்.

ஜெயலலிதாவின் காலில் விழவைக்கும் கலாச்சாரத்திற்கு எம்.ஜி.ஆரும் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும் என்கிறார்கள் அப்போதைய கட்சியில் இருந்த சில முன்னோடிகள். ’எம்.ஜி.ஆர்-  ஜெயலலிதா சேர்ந்து நடித்த பல படங்களில்கூட, அவரது காலில் தைத்த ஒரு முள்ளை எடுக்கும் சாக்கிலோ அல்லது சுளுக்கு எடுக்கும் நோக்கிலோ ஜெயலலிதாவின் காலை எம்.ஜி.ஆர் தொட்டு வந்தார். வெளிப்படையாக அ.இ.அ.தி.மு.க.,வை நிறுவிய எம்.ஜி.ஆருக்குக்குகூட அவரது காலைத் தொடும் நிலைப்பாடு இருந்தது. அதன் தொடர்ச்சியாக அவரது கட்சி தொண்டர்கள் உண்மையாகவும், உருவகமாகவும் ஜெயலலிதாவின் காலடியில் வீழ்ந்து கிடந்தார்கள்’’ என விமர்சிக்கின்றனர்.
ஜெயலலிதாவுக்கு காலணிகள் மீது அளவற்ற ஆர்வம் இருந்தது. அவருடைய 800 க்கும் மேற்பட்ட செருப்புகளும் காலணிகளும் செய்தித்தாள்களில் புகைப்படங்களாக வெளிவந்துள்ளன. அவருடைய கட்சி தொண்டர்கள் மேடைகளில் பேசுவதற்கு முன் ஜெயலலிதாவின்  பாதங்களை வணங்கி விட்டே தமது உரைகளை தொடங்குவார்கள்.

ஒரு மேடையில் ஜெயலலிதா மட்டும் இருக்கையில் அமர்ந்திருக்க, மற்றவர்கள் நின்று கொண்டோ அல்லது நிலத்தில் அமர்ந்திருப்பதை காணக்கூடிய ஒரு காலமும் இருந்தது. பின்னாளில் இந்தப் பழக்கத்தை அவர் கைவிட்டார். ஆனால், சிலரை மட்டுமே தனக்கு அருகில் இருப்பதற்கு அனுமதித்தார். ஜெயலலிதாவுக்கு பிறகு காலில் விழும் கலாச்சாரம் முடிவுக்கு வரும் என எதிர்பார்த்தால், அவரது மறைவுக்கு பிறகு முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவின் காலில் விழுந்தது எப்போதும் மறக்க முடியாத நிகழ்வாகி விட்டது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.