நம்ப வைத்து கருவறுக்கும் மு.க.ஸ்டாலின்... கதறும் கனிமொழி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 05 Dec, 2018 04:06 pm

m-k-stalin-who-believes-in-ridicule-kanimozhi-fears

மகன்கள், மகள், மருமகன், பேரன், பேத்திகள் என கருணாநிதி குடும்பத்தார் பரவலாக பதவி வகித்து வந்த திமுக இப்போது மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமான திமுகவாக மாறி வருகிறது. மு.க.அழகிரியை வெளிப்படையாக ஒதுக்கி வைத்த மு.க.ஸ்டாலின் தனது சகோதரியான கனிமொழியையும் மெல்ல ஓரம் கட்டி வருகிறார். திமுகவின் மகளிரணி செயலாளராகவும் மாநிலங்களவை உருப்பினராகவும் இருக்கும் கனிமொழி திட்டமிட்டு ஒதுக்கப்பட்டு வருவதாக கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.  

இதுகுறித்து அவர்கள் கூறும்போது,‘’மேக்கே தாட்டூ அணை விவகாரத்தில் தோழமைக் கட்சிகளின் கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின். எம்.பி என்ற முறையிலும் மாநிலங்களவை குழுத் தலைவர் என்ற முறையிலும் கனிமொழிக்கு அழைப்பு அனுப்பியிருக்கலாம். அதேபோல், திருச்சியில் நடந்த தோழமைக் கட்சிகளின் கண்டனக் கூட்டத்திலும் கனிமொழிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. வரும் மக்களவை தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில், கனிமொழி போட்டியிட வேண்டும் என, மாவட்ட நிர்வாகிகள், தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம், கோரிக்கை விடுத்துள்ளோம்.  'ஸ்டெர்லைட்'  விவகாரத்தில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, ஸ்டாலின் நேரில் சந்தித்து, நிவாரண உதவி வழங்கினார். ஆனால், சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண் குடும்பத்தினரை சந்தித்து, கனிமொழி ஆறுதல் கூற வேண்டும் என, அங்குள்ள மகளிர் அணியினர் விரும்பினர். ஆனால், தூத்துக்குடி செல்ல, கனிமொழியை ஸ்டாலின்  அனுமதிக்கவில்லை.

திருவாரூரில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்ட அழைப்பிதழில், கனிமொழி பெயரை திட்டமிட்டே புறக்கணித்து விட்டனர். மாநிலங்களவை தி.மு.க தலைவராக, கனிமொழி இருக்கிறார். மறைந்த முரசொலி மாறன், நாடாளுமன்ற தி.மு.க., தலைவராக இருந்தபோது, கட்சி நிகழ்ச்சிகளில், 'புரோட்டோகால்' படி, அவரது பெயர் இடம்பெறும். டெல்லி அரசியல் தொடர்பான பணிகளை, மாறனிடம் கருணாநிதி ஒப்படைத்திருந்தார். அதேபோல், கனிமொழியும் செயல்படுவதால், அவருக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஈரோட்டில் நடந்த, மாநில சுயாட்சி மாநாட்டில், திட்டமிட்டு காலையில் கனிமொழியை பேச வைத்தனர். தொண்டர்கள் அனைவரும் மதியம் தான், மாநாட்டிற்கு வந்தனர். இரவில், மாநில பேச்சாளர்களை பேச வைத்து, கனிமொழியை புறக்கணித்தனர். கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவி ஏற்பு விழாவில், தேசிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். அந்த விழாவுக்கு, கனிமொழியை அனுப்பி, தி.மு.க., பங்களிப்பை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், ஸ்டாலின் முன்வரவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்ய விரும்பினார் கனிமொழி. அந்தப் பகுதிகளுக்குப் பத்தாயிரம் கிலோ அரிசி, 5 ஆயிரம் கிலோ பருப்பு, எண்ணெய் என வாரிக் கொடுத்திருந்தார். அந்த மக்களின் வேண்டுகோளை ஏற்றுப் பயணம் செய்ய முடிவெடுத்திருந்தார் கனிமொழி. இதற்குத் தலைமை அனுமதி கொடுக்காததால், பயணத் திட்டத்தை ரத்து செய்துவிட்டார். அதேநேரம், கட்சிக்குள் உதயநிதி முன்னிறுத்தப்படுவதையும் கவனித்து வருகிறோம்.  இதனை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அதேசமயம், கழகத்தின் சீனியராகவும், மகளிரணிச் செயலாளராகவும் இருக்கும் கனிமொழிக்கு, தலைமை உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். இப்படி பல கட்டங்களில் பொறுத்துப்பார்த்த கனிமொழி, மகளிரணி செயலாளராகவும் இருப்பதால், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். முன்கூட்டியே இந்தப்பயணத்திற்கு தயாராகி வந்தார் கனிமொழி. இதனால் ஸ்டாலின் அதிருப்தியடையக் கூடும் எனக் கூறி அதற்கு தடை போட்டு விட்டார்கள்’’ எனக் கொதிக்கிறார்கள் கனிமொழி ஆதரவாளர்கள். இதனையெல்லாம் மனதில் வைத்தே ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு தினத்தில் ’ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசியலில் ஒரு பெண்ணாக வெற்றி பெற்றது சாதாரணம் அல்ல’ எனத் தெரிவித்துள்ளார். இது மு.க.ஸ்டாலினை மறைமுகமாக தாக்கும் பதிவு என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். 

கனிமொழி தொடர்ந்து ஒதுக்கப்படுவதற்கு காரணம் என்ன? என அறிவாலய வாட்டாரத்தில் விசாரித்தால், ‘’2ஜி வழக்கில் நீதிமன்றம் விடுதலை செய்தாலும் மக்கள் மத்தியில் இன்னும் அந்த கெட்டப் பெயர் நீங்கவில்லை என ஸ்டாலின் கருதுகிறார். அதனால்தான் சில விஷயங்களில் கனிமொழி தவிர்க்கப்படுகிறார்’’ என்கின்றனர்.

அத்தோடு கருணாநிதி காலத்திலேயே மு.க.அழகிரியுடன், கனிமொழி கை கோர்த்து செயல்பட்டு வந்தார். எப்போதோ நடந்த விஷயம் என்றாலும் அது ஸ்டாலினை உறுத்திக்கொண்டே இருக்கிறதாம். அதனால், அழகிரிக்கு அடுத்து கனிமொழியை ஓரம் கட்டும் முயற்சியில் ஸ்டாலின் இறங்கி உள்ளதாகக் கூறப்படுக்கிறது.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.