அதிமுக - அமமுக இணைப்பு..? பின்னணியில் பீதியளிக்கும் திமுக!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 10 Dec, 2018 11:29 am
aiadmk-ammk-link-dmk-in-the-background

அதிமுகவையும், அமமுகவையும் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்டவருமான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ள தகவலுக்கு பின் திமுக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிகள் கடந்த ஆண்டு இணைந்த நிலையில், தினகரன் கட்சியிலிருந்து ஓரம்கட்டப்பட்டார். இதனையடுத்து ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றிபெற்ற தினகரன், கடந்த பிப்ரவரியில் அமமுக கட்சியை ஆரம்பித்து செயல்பட்டுவருகிறார். தற்போது அதிமுக-அமமுகவினர் ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதிமுகவில் தங்களது ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகக் கூறியது டி.டி.வி.தினகரன் தரப்பு. ஆரம்பத்தில் டி.டி.வி.தினகரனை வெளிப்படையாக விமர்சிக்காத அமைச்சர்களும் கடுமையான வார்த்தைகளால் பின்னர் தாக்கிப்பேசினர். 

இந்தச் சூழ்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், “அமமுக வளர்ச்சியடைந்துள்ளதை பாஜக புரிந்துகொண்டுள்ளது. அதிமுகவை நம்பி தேர்தலில் நின்றால் தோற்போம் என்பது அவர்களுக்குத் தெரிகிறது. அதிமுக இரண்டாகப் பிரிந்திருந்தால் அது திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே அதிமுக-அமமுக இணைய வேண்டும் என்று பாஜக விரும்புவதாக ஒரு பேச்சு உலா வருகிறது. இது நல்ல சூழல்தான். முதல்வரையும் சில ஊழல் அமைச்சர்களையும் மாற்றிவிட்டு, நிர்வாகத்தையும் கட்சியையும் கையில் கொடுத்தால் இணைந்து பணியாற்ற வாய்ப்பிருக்கிறது” என்று தமிழ்ச்செல்வன் கூறினார்.

அதிமுக -அமமுக இணைப்பிற்கு வாய்ப்பிருக்கிறதா? அதற்கான முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதா என விசாரித்தோம். அதிமுக தரப்பினர், அதுபோன்ற ஒரு முயற்சி நடக்கவில்லை. பிரிந்து சென்றவர்களில் டி.டி.வி.தினகரனைத் தவிர மற்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்வோம். தங்க தமிழ்ச்செல்வனின் இந்தப் பேச்சு, அமுமுகவில் ஏற்பட்டுள்ள கலக்கத்தையே வெளிப்படுத்துகிறது. அந்தக் கூடாரத்தில் இருப்பவர்கள் பதவியும், வருமானமும் இல்லாமல் இருக்கின்றனர். அவர்களில் சிலரை திமுக வளைக்க முயற்சி எடுத்ததாக கூறப்பட்டது, செந்தில் பாலாஜியை, அடுத்து பழனியப்பனையும் திமுக தரப்பு அணுகியுள்ளதாக பேச்சுகள் உலவி வருகிறது. இப்படி ஒவ்வொருவராக திமுக இழுத்துக் கொண்டால், அமமுக கூடாராம் காலியாகி விடும்.

ஆகையால், திமுகவை சமாளிக்க அதிமுக- அமமுகவை பாஜக இணைத்து வைக்க முயற்சிப்பதாக தங்க தமிழ்செல்வன் கூறி வருகிறார். இதே டி.டி.வி.தினகரன் தான் எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் எனக் கூறினார். இப்போது பாஜக இணைத்து வைக்க முயற்சிப்பதாகக் கூறுகிறார்கள். அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை‘’ என்கின்றனர்.  இதுகுறித்து அமமுகவினரிடம் கேட்டால், ’அது தங்க தமிழ்செல்வனின் தனிப்பட்ட கருத்து. அப்படி ஒரு முயற்சி நடக்கவில்லை’’ என்கின்றனர். அமமுக- அதிமுகவை  இணை பாஜகவினரும் முயற்சிக்கவில்லை எனக் கூறுகின்றனர்.   

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close