டிடிவி தினகரனின் இன்றைய நிலை! தெரியாத தொழிலை தொட்டவன் கெட்டான்!!

  பாரதி பித்தன்   | Last Modified : 23 Dec, 2018 07:48 pm
non-successful-plan-of-ttv-dinakaran-special-story

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் ஆகிய 3 பேருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இவர்கள் 3 பேரும் பினாமி ஆட்சி நடத்தியவர்கள். இவர்களில் லாலு ஒரு படி மேலானவர். கடந்த 1997ம் ஆண்டு கால்நடை தீவன ஊழல் வழக்கில் முதல்வர் பதவியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்ட போது, தன் மனைவி ராப்ரிதேவியை முதல்வராக அமர வைத்து ஆட்சியைத் தொடர்ந்தார். அதன் பின்னர் லாலுவிற்கு பிரச்னை வரும் போதெல்லாம் ராப்ரிதேவிதான் முதல்வர்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்காலம் முடிவடையும் முன்பே சீதாராம் கேசரியை விரட்டி விட்டு அந்த பதவியை பிடித்த போது, சோனியாவிற்கு தனது இந்த நடவடிக்கை வெட்டி வேலை என்பது தெரியாது.

2004ம் ஆண்டு தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை பார்க்க செல்லும் வரை சோனியாதான் பிரதமர். "தூ செவண்டி தூ" (272) உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு நின்று கொண்டு நிருபர்களிடம் உரத்த குரலில் கூறிவிட்டு சோனியா உள்ளே சென்றார்.

ஆனால் அவரை சந்தித்த பின்னர் தான் தெரிந்தது சோனியா பிரதமராகவே வழியில்லை என்பது. சிறிது நேரத்தில் மன்மோகன் சிங் பிரதமரானார். அவரும் சோனியாவிற்கு எவ்விதமான பிரச்னைகளையும் கொடுக்காததால் 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்ய வைக்கப்பட்டார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2001ம் ஆண்டு டான்சி வழக்கில் சிக்கிய நிலையில் பதவியில் தொடர முடியாத நிலையில் இருந்தார். அவருக்கு மாற்றாக யார் முதல்வர் என்று ஆளாளுக்கு ஒரு பெயரை சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் முதல் முறையாக பெரியகுளம் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னீர்செல்வம் முதல்வராக அமர வைக்கப்பட்டார். பின்னர் ஜெயலலிதாவிற்கு பிரச்னை வந்த போதெல்லாம் கூப்பிடு பன்னீர் கதைதான்.

ஆனால் ஜெயலலிதா உடன் 32 ஆண்டுகள் கூடவே இருந்து அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி வந்தவர்தான் சின்னம்மா சசிகலா. அத்தகைய அறிவுஜீவி, தான் சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில் கண்டுபிடித்த முதல்வர் வேட்பாளர் தான் எடப்பாடி பழனிச்சாமி. பதவியேற்ற  3 நாட்களிலிலேயே சின்னம்மாவை எதிர்த்ததுடன் அல்லாமல், இன்று கட்சியை சின்னபின்னமாக ஆக்கி முழுவதையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டார்.

இதற்கு முக்கிய காரணம் சசிகலா. என்னதான் 32 வருட காலம் ஆட்சி அதிகாரத்தின்போது ஜெயலலிதாவின் கூடவே இருந்திருந்தாலும் அவர் பின்னணியில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதா, சசிகலா குடும்பத்தினரை முழுமையாக வெளியேற்றிய நிலையில் மீண்டும் கட்சியில் சசிகலாவை மட்டும் சேர்க்கிறார் என்றால் அவரின் பின்னணி பற்றிய வலிமையை அறிந்து கொள்ள இயலும்.  ஆனால் நேரடி அரசியலில் அவர் அனுபவம் பூஜ்ஜியம் தான்.

இந்த காரணத்தால் தான் சசிகலா, நேரடியாக நடைபெற்ற தனக்கான பினாமி தேர்வில் தோல்வி அடைந்தார். எங்கே தவறு ஏற்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் உடனடி முடிவுக்கு ஏற்ப பன்னீரையே முதல்வராக தொடரச் செய்து, தன் கருணையால் தான் ஆட்சியில் இருக்கிறார் என்ற நன்றி உணர்ச்சியில் வைத்திருக்க வைத்து,  அமர்ந்த இடத்திலிருந்தே மறைமுகமாக ஆட்சி செய்திருக்கலாம். ஆனால் முதல்வர் நாற்காலி தனக்கு வேண்டும் என்று ஆசைப்பட்டது மிகப் பெரிய  தவறு. அதிலும் வெறும் ஜால்ராக்கள் ஓசையை மட்டும் நம்பி களத்தில் இறங்கியது அதை விட மிகப் பெரிய தவறு.

தனக்கு பதவி போனதும் பன்னீர் ஜெயலலிதாவின் சமாதியில் உத்தரவு கேட்டு தர்மயுத்தம் தொடங்கினார்.  அந்த நிலையில் அதிமுகவை வைத்திருந்த தினகரன் இரு அணிகள் இணைப்பிற்கு வெளிப்படையான முயற்சிகளை செய்து இருக்க வேண்டும்.

அதனை தொடங்கியவர், தான் கட்சியை விட்டு சில காலம் வெளியேறுவதாகவும், அதற்குள் இரு அணிகள் இணைய வேண்டும் என்றும் கெடுவிதித்தார். அந்த கெடுக்காலத்திற்குள் இருதரப்பும் இணையாவிட்டாலும், இன்று இணைந்துவிட்டன. ஆனால் தினகரன் இருக்கும் இடம்? இதில் எக்ட்ரா லக்கேஜ்  போல திவாகரன் வேறு.

தினகரன் சரியான முடிவு எடுக்க இயலாத நிலைக்கு ஆர்கே நகர் தொகுதி தேர்தல் வெற்றி தான் காரணம். அதிலும் பணத்தைக் கொட்டினால் வெற்றி நிச்சயம் என்பதும் திமுக 3வது இடத்திற்கு சென்றதும், தேர்தல் வெற்றி பெறுவது எளிதுதான் என்ற தவறான விபரீத எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

ஆனால் அதைத் தொடர்ந்து அவரது அதீத நம்பிக்கையும், பிறர் குறித்து குறைத்து எடைபோட்டதும் அவருக்கே வினையானது. இன்றைய சூழ்நிலையில் அவரது எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது போன்ற நடவடிக்கைகளால் 18 எம்எல்ஏக்கள் பதவியிழந்துள்ளனர் அவர்களில் செந்தில் பாலாஜி திமுகவிற்கு சென்று விட்டார்.

அதாவது ஜெயலலிதா ஆட்சியில் அமர்த்தி விட்டு சென்ற அதிமுக கட்சியை உடைத்து திமுகவிற்கு கொண்டு செல்லும் வேலையை தான் தினகரன் பார்க்கிறார். இது அந்த கட்சிக்கு நல்லது அல்ல.

ஒருவிஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். சோனியா,ஜெயலலிதா, லாலு போன்றவர்கள் பினாமியை நியமித்து வெற்றி பெற்றதற்கு அக்கட்சிக்கு விழும் ஓட்டுகள் அனைத்தும் அவர்களுக்கு என்பது அவருக்கும் தெரியும், பினாமிக்கும் தெரியும். ஆனால் தினகரன் முகத்திற்கு பணத்தை அள்ளிக் கொட்டினாலும் தமிழகம் முழுவதுமிருந்து ஓட்டு விழாது என்பதும், சசிகலா என்றால் அதை விட குறைவாகத்தான் விழும் என்பதை அவர்களை விட மற்றவர்கள் நன்கு உணர்ந்து விட்டனர். அதனால் தான் இன்று இந்த குடும்பத்தை சீண்டக் கூட ஆள் இல்லை.

தற்போதுள்ள சூழ்நிலையில் பலகீனமான நிலையில் இருந்தாலும் முறையான கட்டமைப்பு உள்ள கட்சியாக திமுக இருந்து வருகிறது. அந்த வகையில் அதற்கு மாற்றாக எந்த கட்சியும் இல்லை. அந்த நிலையை கலையயாவது அதிமுக, அமமுக உள்ளிடட்ட பிரிவுகள் இணைந்தால் மட்டுமே திமுகவை பலமாக அதிமுக எதிர்க்க இயலும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close