பிரதமர் மோடி சேடிஸ்ட் தான் என பலமுறை சொல்வேன் என திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் பேசியுள்ளது பாஜகவினரிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரதமர் மோடி சேடிஸ்ட் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை, 'ஸ்டாலின் தான் உண்மையின் சேடிஸ்ட்' என்று பதிலடி கொடுத்தார். இதையடுத்து இதுகுறித்து ஸ்டாலின் மீண்டும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
நேற்று திமுக எம்எல்ஏ மஸ்தான் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், "கருணாநிதி சிலை திறப்பு விழாவிலே நான் பேசும் போது பிரதமர் மோடியை சேடிஸ்ட் என்று கூறினேன். நேற்றைய தினம் திருச்சியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கூட அதை நான் குறிப்பிட்டுச் சொன்னேன்.
நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. பிரதமர் மோடி அவர்களை தனிப்பட்ட முறையில் நான் சேடிஸ்ட் என்று சொல்லவில்லை. அவர் பிரதமராக இருக்கிறார். கஜா புயலிலே தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. கஜா புயலால் 65 பேர் பலியாகியுள்ளனர். அதற்கு ஏதாவது ஒரு ஆறுதல் செய்தி பிரதமரிடத்தில் இருந்து வந்ததா? நேரடியாக வந்து பார்க்க அவசியமில்லை, காரணம் அவருக்கு நேரமில்லை, வெளிநாடு சுற்றுவதற்கே அவருக்கு நேரம் கிடையாது. ஆனால், அதே நேரத்தில் குஜராத்திலோ அல்லது வெளிநாட்டிலோ ஏதாவது துயரச்செய்தி வந்தால் உடனே வருத்தம் தெரிவிக்கிறார்.
தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிவாரண தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். மத்திய அரசின் பார்வையிலிருந்து தமிழக மக்கள் ஒதுக்கப்படுகிறார்கள். எனவே ஒரு பிரதமர் என்ற முறையில் தான் அவரை நான் சேடிஸ்ட் என்று கூறினேன்" என்று பேசியுள்ளார்.
newstm.in