இடைத்தேர்தலை சந்திக்க திராணி இல்லாத தமிழகக் கட்சிகள் 

  பாரதி பித்தன்   | Last Modified : 07 Jan, 2019 06:26 pm

fear-of-tamil-politicians

பாரதி பித்தன்


‛செத்த அன்று வரச் சொன்னால்  பத்து அன்று வந்தானாம்’ என்பது பழமொழி. கஜா புயல், திருவாரூர் மாவட்டத்தை புரட்டிப் போட்டது. இது குறித்து தகவல் அறிந்த இதர மாவட்டத்தினர், வெளிமாநில, நாட்டினர் பலவிதமான உதவிகளை செய்தனர். 

அவை சரியானவர்களுக்கு சென்றடைந்ததில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. இதற்கு முக்கிய காரணம் மக்கள் பிரதிநிதிகள் இல்லாதது தான். 

கவுன்சிலர் உட்பட, மக்கள் பிரதிநிதிகள் இருந்திருந்தால் அவர்கள் தங்கள் பகுதியின் இழப்பு குறித்து சரியாக வெளிப்படுத்தி இருப்பார்கள். அதே போல, நிவாரணப் பொருட்களையும் வாங்கி, அதனை மக்களுக்கு பிரித்துக் கொடுத்து இருப்பார்கள். 

 

 அவர்கள் இல்லாத காரணத்தால் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதைப் போல நிவாரணப் பொருட்கள் வரும் வழியிலேயே மறிக்கப்பட்டு, ஒரு சில கிராமங்களிலேயே பதுக்கப்பட்டன. இதனால் கடைக்கோடி கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்கள் சென்று சேரவே இல்லை. 

இந்த பணியில், வி.ஏ.ஓ., உள்ளிட்ட வருவாய் துறையினரை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய கட்டாயம். நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தால் கூட, சம்பந்தப்பட்டவர்களுக்கு தாங்களே நேரில் வழங்க வேண்டும் என்ற ஆசை. இதனால் சிக்கல் ஏற்பட்டது. 

உள்ளாட்சி தேர்தல் நடத்திருந்தால், இந்த பிரச்னைக்கு  எளிதில் தீர்வு கண்டு இருக்க முடியும். அதற்கு வழியில்லாத சூழ்நிலையில், யதார்த்தமாக சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இது நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட தொகுதிக்கு மக்கள் பிரதிநிதியாக ஒரு, எம்.எல்.ஏ., கிடைத்திருப்பார். 

இந்த தேர்தல் ஒத்தி வைப்புக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் தேர்தல் பயம் முக்கிய காரணமாக இருந்தது தான் வேதனை. 

கடந்த தேர்தலில், திருவாரூர் தொகுதியில், தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி, தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார்.

 மேலும் அவர் மறைவு தொகுதி மக்கள்  மத்தியில் மிகுந்த அனுதாபத்தை ஏற்படுத்தி இருந்தது. இதன் காரணமாக தற்போது தேர்தல் நடந்தால், கருணாநிதியை விட கூடுதல் ஓட்டு வித்தியாசத்தில் பூண்டி கலைவாணன் வெற்றி பெற்றிருப்பார்.

இது பொய்த்து போனால் கூட மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. மக்கள் மத்தியில், கட்சியினர் மத்தியில் உள்ள இந்த நம்பிக்கை கூட ஸ்டாலினுக்கு இல்லாமல் போய்விட்டது. 

பெரும்பாலான ஆண்டுகள் ஆட்சியிலேயே இல்லாத நிலையில் கூட, திமுகவை அசைக்க முடியாத சக்தியாக கட்டிக்காத்தவர் கருணாநிதி. 

அவர் மகனுக்கு தேர்தல் பயம் என்பது வேடிக்கையான வேதனை. உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாததற்கு காரணம் தி.மு.க.,வின் வழக்கு. திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் நடத்த முடியாதற்கும், அந்த கட்சி தொடர்ந்த வழக்கே காரணம். 

திருவாரூர் இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலைலயில், தற்போது அது ரத்து செய்யப்பட்டதற்கும்  காரணம் தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் தொடர்ந்த வழக்கும் ஓர் காரணம்.

 இவ்வாறு எல்லா தேர்தலுக்கும் முட்டுக்கட்டை போடுவது தி.மு.க., என்கிற போது, அவ்வாறு வழக்கு போட்டவர்களை வாபஸ் வாங்க வைத்து தேர்தலை சந்திக்க ஸ்டாலின் முயற்சி செய்யாத போது, அவருக்கு தேர்தலை சந்திக்க பயம் என்று எண்ணாமல் வேறு எந்த முடிவுக்கு வர முடியும். 

முக்கிய எதிர்கட்சியான தி.மு.க.,வே தேர்தலை வேண்டாம் என்று நினைக்கும் போது, அ.தி.மு.க., மட்டும் வரவேற்குமா என்ன? இந்த தேர்தல் அவர்களின் ஆட்சி முறையை, கஜா புயல் நிவாரணம் செய்ய லட்சணத்தை சோதனை செய்து பார்க்கும் தேர்தல். 

அப்படி இருக்கையில் அவர்கள் மட்டும் திருவாரூர் தேர்தலை வரவேற்கவா போகிறார்கள். அதனால் தான், அவர்கள் பங்கிற்கும் இந்த தேர்தலை ஒத்தி வைப்பதற்காவ அனைத்து முயற்சிகளையும் மறைமுகமாக மேற்கொண்டனர். 

 

‛பொங்கல் பண்டிகை வருகிறது, அந்த நேரத்தில் தேர்தல் வைக்க கூடாது’ என்றார் தம்பித்துரை. எவ்வளவு மலிவான காரணம் இது. ஆட்சி அதிகாரத்தில் உள்ள அ.தி.மு.க.,  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும்,  வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டாமா?
அவர்களும் கூட பல்வேறு சிறிய சிறிய கட்சிகளை துாண்டிவிட்டு, எப்படியாவது ஒத்தி வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தனர். அதுதான் தற்போது நடந்துள்ளது.

இதைப் பற்றியெல்லாம் கவலைபடாத ஒரு ஜீவன் இருக்கிறது என்றால், அது டி.டி.வி., தினகரன் தான். எல்லோருக்கும் முன்னாள் வேட்பாளரை அறிவித்து,  தேர்தலை சந்திக்க களம் இறங்கியவர் அவர் தான். அவருக்கு என்ன ஆர்.கே., நகருக்கு, 20 ரூபாய் டோக்கன், திருவாரூக்கு 50 ரூபாய் டோக்கன். இப்படி டோக்கன் அரசியல் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை தினகரனுக்கு நல்லது என்றால் கூட மக்களுக்கு நல்லது அல்ல. 

கஜாபுயல் பாதிப்பால் சிரமத்திற்கு உள்ளான மக்களின் கவலை போக்க வேண்டிய கட்சிகள், அதை செய்யாமல், நிவாரணப் பணிகள் எல்லாம் நிறைவடைந்த பின் மட்டுமே, தேர்தல் வைக்க வேண்டும் என்று கோருவது உண்மையில் மக்களை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்கள் தயாரில்லை என்பதை வெளிப்படையாக நமக்கு காட்டுகிறது. உண்மையில் மக்கள் நலன் என்பது அரசியல் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் இரண்டாம் பட்சம்தான் என்ற உண்ணையும் தெளிவாக தெரிய வந்துள்ளது.
newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.